2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது. 2019 மார்ச் 15 இல் நியூசிலாந்தில் இடம்பெற்ற கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்குப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைப் பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனா தெரிவித்தார். இரு தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்தது.2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது. தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் அபூ பக்கர் அல்-பக்தாதி என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது.

அடிமை முறை

அடிமைமுறை என்பது வலுக்கட்டாயமாக மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை கட்டாயமாக வாங்குவதாகும். இம்முறை நெடுங்காலமாக பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இப்படி வலுக்கட்டாயம் செய்யப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய முதலாளிகளால், பிற பொருட்களைப் போல வாங்கி, விற்கப்பட்டனர். இது ஒரு மிகவும் இழிவான முறை என 19-20 ஆம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் உணரப்பட்டு இம்முறையை நீக்கினர். தனிமனிதர்களின் உரிமை நிலைநாட்ட வரலாற்றில் இது அறியவேண்டிய ஒன்று.

அமெரிக்காக்கள்

அமெரிக்காக்கள் (Americas) அல்லது அமெரிக்கா எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

ஆன்டன் செக்கோவ்

ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் (Anton Pavlovich Chekhov, /ˈtʃɛkɔːf,_ʔɒf/; உருசியம்: Анто́н Па́влович Че́хов, உருசிய பலுக்கல்: [ɐnˈton ˈpavɫəvʲɪtɕ ˈtɕɛxəf], அந்தோன் பாவ்லொவிச் சேகவ்; 29 சனவரி [யூ.நா. 17 சனவரி] 1860 – 15 சூலை [யூ.நா. 2 சூலை] 1904) ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின. ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், இலக்கியம் எனது துணைவி என்றும் கூறியுள்ளார்.1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். த சீகல் நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, மூன்று சகோதரிகள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை நாடகக் குழுமத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன.செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இலங்கை

இலங்கை ( ஒலிப்பு) (Sri Lanka, சிங்களம்: ශ්‍රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

உயிர்ப்பு ஞாயிறு

உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.

எயிட்டி

எயிட்டி அல்லது ஹெயிட்டி (Haiti), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது இஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது.

எயித்தியப் புரட்சி

எயித்தியப் புரட்சி அல்லது ஹைட்டியின் புரட்சி (Haitian Revolution, 1791–1804) பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கியப் புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.

கரிபியன்

மேற்கிந்தியத் தீவுகள் அல்லது கரிபியன் (Caribbean, டச்சு: Cariben அல்லது Caraïben அல்லது Antillen; பிரெஞ்சு: Caraïbe அல்லது Antilles; ஸ்பானிஷ்: Caribe) அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதி ஆகும். இது கரிபியன் கடல், மற்றும் அதன் தீவுகள், அவற்றின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கும். இப்பகுதி வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியையும் மத்திய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியையும் தென் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

கரும்பு

கரும்பு ( ஒலிப்பு) என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.((க்யூபா)) அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், 'உலகின் சர்க்கரை கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

குடியரசு

குடியரசு (Republic) என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும். குடியரசுத் தலைவருக்கு விதிக்கப் கடமைகளைப் பொறுத்தும், மரபுகளை ஒட்டியும், அப்பதவி வெறுமனே ஒரு அரசியல் சாராத சடங்கு சார்ந்த பதவியாகவோ, அல்லது பெரும் செல்வாக்குள்ளதும், பெருமளவு அரசியல் சார்ந்ததுமாகவோ இருக்கக்கூடும்.

குடியேற்ற நாடு

அரசியலிலும், வரலாற்றிலும் குடியேற்ற நாடு (colony) என்பது, தொலைவில் உள்ள நாடொன்றின் அரசியல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு நாடு ஆகும். ஒரு குடியேற்ற நாட்டுக்குத் தனியான அனைத்துலகப் பிரதிநிதித்துவம் கிடையாது. குடியேற்ற நாடொன்றின் அதி உயர் நிர்வாகம், அதனை அடக்கி வைத்திருக்கும் நாட்டின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொழும்பு

கொழும்பு (ஆங்கிலம்:Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

சர்க்கரை

சர்க்கரை என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:

செயிண்ட் டொமிங்கு

செயிண்ட்-டொமிங்கு (Saint-Dominge) கரீபியன் தீவான லா எசுப்பானியோலாவில் 1659 முதல் 1809 வரை அமைந்திருந்த ஓர் பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியாகும். எசுப்போனியோலாவின் மேற்குப் பகுதியையும் டோர்ட்டுகா தீவுகளையும் 1659 முதல் பிரான்சு குடிமைப்படுத்தி யிருந்தது. எசுப்பானியாவுடன் ஏற்பட்ட ரைசுவிக் உடன்பாட்டின்படி தீவின் மேற்குப்பகுதியிலும் 1795ஆம் ஆண்டில் முழுமைக்கும் பிரான்சின் இந்த ஆளுமையை எசுப்பானியா அங்கீகரித்தது. 1795 முதல் 1804 வரை பிரான்சின் முழுமையான கட்டுப்பாட்டில் எசுப்போனியோலா தீவு இருந்தது. 1804இல் மேற்குப் பகுதியிலிருந்து விலகிக்கொள்ள எயித்தியக் குடியரசு அமைந்தது. இத்தீவின் கிழக்குப் பகுதியை 1809ஆம் ஆண்டு பிரான்சு எசுப்பானியாவிற்கு திருப்பியது.

பிரான்சு

பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது.

வேறொரு மொழியில் படிக்கவும்