வெண்கலக் காலம்

வெண்கலக் காலம் (Bronze Age) மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெண்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.

வரலாறு

தொல்லியலின் முக்கால முறைமையின் படி கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலம் வருகிறது. தொன்மவியல் கதைகளின் படி இதற்கு முன் தங்கக்காலமும் வெள்ளிக்காலமும் இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவை வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வெண்கலக் காலம் புவியின் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கிய காலம் வேறுபடுகிறது. தகரக்கனிமத்தில் இருந்து தகரத்தை பிரித்தெடுத்து அதை செப்புக்கூழோடு சேர்ப்பர்.

சிந்து சமவெளி

சிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் செம்பு, வெண்கலம், ஈயம் மற்றும் தகரம் போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடன் இரும்புக் காலம் எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது. இப்பகுதியின் வெண்கலக் காலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.

ஆண்டுகள் (கி. மு. வில்) கட்டம் காலம்
3300-2600 முந்தைய அரப்பன் (முந்தைய வெண்கலக் காலம்)
3300-2800 இரவி கட்டம்
2800-2600 கோட் திசி கட்டம் (முதலாம் நௌசாரா, ஏழாம் மெகர்கார்)
2600-1900 முதிர்ச்சி பெற்ற அரப்பன் சிந்துவெளி நாகரிகம் ஓரிடமாக்கல் காலம்
2600-2450 மூன்றாம் அரப்பனின் சடைப்பகுதி, இரண்டாம் நௌசாரா
2450-2200 மூன்றாம் அரப்பனின் இடைப்பகுதி
2200-1900 மூன்றாம் அரப்பனின் கடைப்பகுதி
1900-1300 பிந்தைய அரப்பன் செமட்ரி எனப்படும் காவி வண்ணப் பானைகள் செய்யப்பட்ட காலம் ஓரிடப்படுத்தல் காலம்
1900-1700 நாலாம் அரப்பன்
1700-1300 ஐந்தாம் அரப்பன்

பண்டைய எகிப்து

பண்டைய எகிப்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்து இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. எகிப்தின் முந்தைய வெண்கல அரசுகள் கி.மு. மூன்றாம் ஆயிரவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டில் முடிவடைகிறது. மத்திய வெண்கல அரசுகள் கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முடிவடைகிறது. பிந்தைய வெண்கல அரசுகள் கி.மு. கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தொடங்கி கி.மு. முதலாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. இந்த பிந்தைய வெண்கல அரசுகளின் இறுதிக்காலத்திலேயே வெண்கல-இரும்புக் கால குழப்ப காலமும் எகிப்தில் தொடங்கிவிட்டது.

பண்டைய சீனமும் கொரியாவும்

பண்டைய சீனத்தில் மாசியயோ சமூக (கி.மு. முப்பத்து முதலாம் நூற்றாண்டு முதல் இருபத்து ஏழாம் நூற்றாண்டு வரை) வெண்கலக் காலம் அறிமுகமானது. எனினும் கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் ஆரம்பம் தொடங்கி கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரையில் வெண்கலத்தின் பயன்பாடு இப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது. கொரியா தீபகற்பத்தில் வெண்கலக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஆரம்பமானது.

பண்டைய பிரிட்டன்

பண்டைய பிரிட்டனில் முந்தைய வெண்கலக் காலம் கி. மு. இருபத்து ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி. மு. பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. பிரிட்டனில் வெண்கலத்தில் தோற்றக் காலம் குறித்து தெளிவான வரையறை இல்லாவிட்டாலும் அதன் பிறகு வந்த மத்திய வெண்கலக் காலமும் புதிய வெண்கலக் காலமும் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன

முந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 2500-1500)
  • கி. மு. 2500 - 2000: மவுன்ட் பிளசன்ட் பகுதி, முந்தைய பீக்கர் சமூகம் (செம்பும் தகரமும்)
  • கி. மு. 2100-1900: பிந்தைய பீக்கர் சமூகம், கத்திகளும் வேல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
  • கி. மு. 1900-1500: பெட் பிரான்வென் காலம் (செம்பும் தகரமும்)
மத்திய வெண்கலக் காலம் (கி. மு. 1500-1000)
  • கி. மு. 1500-1300: ஆக்டன் பார்கு பகுதி, பிணைக்கப்பட்ட ஈட்டிகள் (செம்பும் தகரமும் அல்லது செம்பும் ஈயமும்)
  • கி. மு. 1300-1200: நைட்டன் ஹெத் காலம்
  • கி. மு. 1200-1000: முந்தைய அர்ன்பீல்ட் பகுதி
பிந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 1000-700)
  • கி. மு. 1000-900 BC: பிந்தைய அர்ன்பீல்ட்
  • கி. மு. 800-700 BC: எவர்ட் பார்க் பகுதி, வாள்கள் உருவாக்கம் பெற்ற காலம்

வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள்

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது. அதனால் இதை வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள் எனக் கூறலாம்.

ஜப்பான்

ஜப்பான் பகுதிகளில் சோமான் காலம் வழக்கிழந்த பிறகு கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் வெண்கலமும் இரும்பும் ஒன்றாகவே அறிமுகமானது. இந்த இரண்டு உலோகமும் கொரிய தீபகற்பத்திலிருந்து இங்கு சென்றதால் ஜப்பானுக்கு வெண்கலக் காலம் என்று தனியாக இல்லை. ஜப்பானின் முந்தைய குடிகளை விரட்டிய சோமான்களின் வழியாக பரவிய உலோகக் காலத்தில் இரும்பே வேளாண்மைக்கும் மற்ற கருவிகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. வெண்கலம் கலைப்பொருள்களுக்கும் மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களை வைத்துக் கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டன.

ஆப்பிரிக்கா

மற்ற இடங்களில் வெண்கலக் காலம் வழக்கில் இருந்த போது ஆப்பிரிக்காவில் எகிப்தியப் பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் புதிய கற்காலமே வழக்கில் இருந்தது. வெண்கலம் ஆப்ரிக்கப் பகுதிகளில் அதிகம் காணப்படாவிட்டாலும் செப்பை மட்டும் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க ஆப்ரிக்கர்கள் அறிந்தே இருந்தனர். எனினும் இந்த செப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் இப்பகுதி முதிர்ச்சி அடைந்து காணப்படவில்லை.

தென் இந்தியாவும் இலங்கையும்

தென் இந்தியாவில் வெண்கலப் பொருள்கள் வட இந்தியாவில் இருந்தே அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு உதாரணமாக கொடுமணல் அகழாய்வில் கிடைத்த கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவு பழமை என்று கருதத்தக்க வட இந்தியாவின் வெண்கலப் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் வட பகுதிகள் புதிய கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் தென் தமிழகம் இடைக்கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் மாறின.

இலங்கையிலும் வெண்கலக் காலம் என்று தனிச்சிறப்பாக ஏதுமில்லாவிடினும் அங்கு செம்பு மட்டும் தாதுப்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறிதளவு பயன்பாடில் இருந்துள்ளன.

வெண்கல விண் தட்டு

வானவியல் ஆராய்ச்சியாளர்கள் 1999 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி மூலமாகப் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட வெண்கலத் தட்டை கொண்டு சோதனையில் ஈடுபட்டு முடிவுகளை அறிவித்தனர். இந்த நெப்ரா ஸ்கை டிஸ்க் எனப்படுவது, தோராயமாக கி.மு.1600 இல் மத்திய வெண்கல காலத்தில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்டிருக்கக் கூடுமென கருதப்படுகிறது. மேலும், இது முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஸ்கை மேப் என்றும் புவியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வெண்கலத் தட்டு, சுமார் 32 செ.மீ. விட்டம் கொண்டதாக உள்ளது. சந்திரன், சூரியன் மற்றும் சில நட்சத்திரங்கள் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டும் வகையில் தங்கத் திரவம் கொண்டு பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளது. [1] வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆகியவற்றில் விவசாயம் சார்ந்த விதைத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்றவற்றினைச் சிறந்த முறையில் கணிக்க உதவும் காலக் கணிப்பானாக இந்தக் விண் தட்டு (Sky Disc) பயன்பட்டிருக்க வேண்டுமென்பது இக்கண்டுபிடிப்பாளர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

பிளீயட்ஸ் காலமான குளிர்காலத்தில் அமாவாசை (No Moon Day) அன்று இரவுப் பொழுதில் விண்ணில் நட்சத்திரங்கள் நிறைய தோன்றினால் அது வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியென நம்பி விதைகளை எடுத்துக் கொண்டு விளைச்சல் நிலங்களில் விதைக்கத் தொடங்கி விடுவர். அதேபோல், முழு நிலவு தோன்றும் பௌர்ணமிக்குப் (Full Moon Day) பிறகான கால கட்டத்தில் வானில் நட்சத்திரங்கள் நிரம்பக் காணப்பட்டால், அது சாகுபடிப் பணிகள் மேற்கொள்வதற்கான உகந்த காலம் என்றெண்ணி அறுவடையினை மேற்கொள்வர். இவ்வாறாக, வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், காலநிலைக் காட்டும் வான் தட்டைப் பயன்படுத்தி விவசாயத் தொழிலைச் செய்து வந்தனர். 1999 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண் தட்டில் இரண்டு வெண்கல வாள், இரண்டு சிறிய அச்சுகள், ஒரு உளி மற்றும் சுழல் போன்று வளையங்கள் உடைய பிளவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. [1]

வெண்கலக் கால அழிவிற்கான காரணங்கள்

ஆதி மனிதன் மொழியைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கிய கால கட்டமாக வெண்கலக் காலம் அறியப்படுகிறது. மெசபடோமியா, ஈஜிப்ட் ஆகியவற்றில் பேச்சு மொழியும் எழுத்து முறையும் முதன் முதலாகத தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் கி.மு. 3200 இலிருந்து கி.மு. 600 வரையிலான காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது. இத்தகைய வெண்கலக் காலம் அழிந்ததற்கான காரணத்தைப் பிற்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இஸ்ரேல் நாட்டிலுள்ள கலிலீ எனும் கடலுக்கடியில் கிடைக்கப்பெற்ற மகரந்தத்தின் தொல்படிவங்களின் காணப்பட்ட கடுமையான வறட்சி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வறிஞரான இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, ஃபிங்கல்ஸ்டீன் மற்றும் அவருடைய சக ஊழியர்களான டாஃப்னா லங்குட் மற்றும் தாமஸ் லிட் ஆகியோர், கி. மு. 1250 முதல் கி. மு. 1100 வரை காணப்பட்ட நீண்ட தொடர் வறட்சிக் காரணமாக வெண்கலக் காலம் அழிவுற்று முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். கி.மு. 1250 க்கு பின்னர், மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் கருங்காலி, தேவதாரு, ஆலிவ் மற்றும் காரப் வகை மரங்களின் எண்ணிக்கையானது வெகுவாகக் குறைந்து போனது.அதேசமயம், வறண்ட நிலங்களில் மிகுதியாகக் காணப்படும் செடிகளும் மரங்களும் அங்கு அதிகரித்துக் காணப்படுவதைச சான்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "வெண்கலக் காலத்தில் விவசாயிகளுக்கு கால மாற்றங்களை அறிய உதவிய ஸ்கை மேப்". பார்த்த நாள் 19 சூன் 2017.
  2. "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த நாகரிகம்: காரணம் கண்டுபிடிப்பு". பார்த்த நாள் 19 சூன் 2017.
அசூர், பண்டைய நகரம்

அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: வார்ப்புரு:Script/ஆப்பெழுத்து Aθur, பாரசீகம்: آشور: Āšūr; எபிரேயம்: אַשּׁוּר:Aššûr, அரபு மொழி: اشور: Āšūr, குர்திஷ் மொழி: Asûr), தற்கால ஈராக்கில் இந்நகரை (அரபு மொழியில்) குலாத் செர்கத் (Qal'at Sherqat) என அழைக்கப்படுகிறது.

அசூர் நகரம், மெசொப்பொத்தேமியாவின் பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.

அசூர் நகரத்தின் இடிபாடுகள், தற்கால ஈராக் நாட்டின் சலாடின் ஆளுநரகத்தில், சிர்காத் மாவட்டத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கில் உள்ளது.

அசூர் நகரத்தில், கிமு 2600ம் ஆண்டிலிருந்து,கிபி 14ம் நூற்றாண்டின் மத்தி வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். கிபி 14ம் நூற்றாண்டில் அசூர் நகரத்தின் மீது படையெடுத்து வந்த தைமூர் படைகள், இங்கு வாழ்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் அசிரியக் கிறித்துவர்களைக் கொன்று, அசூர் நகரத்தை இடித்து தள்ளினான்.

2003ல் 27வது 27வது உலக பாரம்பரியக் குழு அமர்வு, இடிபாடுகளுடன் கூடிய அசூர் நகரத்தை, உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

இந்தியாவில் வெண்கலக் காலம்

இந்தியாவில் வெண்கலக் காலம், இந்தியத் துணைக் கண்டத்தில் வெண்கலக் காலம் கிமு 3,000ல் துவங்கியது. இவ்வெண்கலக் காலம் முதிர்ச்சி அடைந்திருந்த காலத்தில், கிமு 2,600 - கிமு 1,900-க்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியாவில் சிந்துவெளி நாகரீகம் சிறப்புடன் விளங்கியது. வெண்கலக் காலத்தின் தொடர்ச்சியாக கிமு 1500-ல் வேதகாலம் துவங்கியது. வேதகாலத்தின் தொடர்ச்சியாக கிமு 1,000-ல் இந்தியாவில் இரும்புக் காலம் துவங்கியது.

அதே நேரத்தில் தென்னிந்தியாவில் கிமு 2500 வரை கற்காலம் தொடர்ந்தது. கிமு இரண்டாயிரம் முதல் தென்னிந்தியாவிற்கும், வட இந்தியாவிற்கும் இடையே இடையில் பண்பாட்டு உறவு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தென்னிந்தியாவின் வெண்கலக் காலம் அறியப்படவிலை. ஆனால் செப்புக் காலத்தை கடந்து நேரடியாக இரும்புக் காலம் நோக்கிச் சென்றது.

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், செம்பியன் கண்டியூர் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர், 3500 ஆண்டுகள் பழைமையான எழுத்துக்கள் கொண்ட கற்கோடாரியைக் கண்டெடுத்தார்.கல்வெட்டியல் அறிஞரான ஐராவதம் மகாதேவன், இக்கற்கோடரியில் உள்ள எழுத்துகள் சிந்துவெளி நாகரிக கால வரிவடிவ எழுத்துக்களால் எழுதப்பட்டிருருப்பதாக கூறுகிறார்.

இரதம்

இரதம் ( ஒலிப்பு) (ஆங்கிலம்:Chariot) என்பது இழுத்துச் செல்லப்படும் ஒருவகை வண்டியாகும். பெரும்பாலும் குதிரைகளைக் கொண்டே இழுத்துச் செல்லப்படுகிறது. அக்கால இராணுவத்தில் வில்வித்தை, வேட்டை போன்றவற்றிற்கு வாகனமாகவும், போக்குவரத்திற்கும் பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

ஆங்கிலத்தில் சாரட் (chariot) என்பது இலத்தீன் சொல்லான காரஸ் என்ற சொல்லிருந்து உருவானது. இராணுவ அணிவகுப்பில் இரத அணிவகுப்பும் ஒன்றாகும். பண்டைய ரோம் மற்றும் இதர பண்டைய நாடுகளில் இரு குதிரை பூட்டிய ரதம், முக்குதிரை பூட்டிய ரதம், நான்கு குதிரை பூட்டிய ரதம் என்றெல்லாம் இருந்துள்ளது.

குதிரை இரதம் என்பது வேகமான, எடைகுறைவான, திறந்த, இருசக்கரம் கொண்ட கலனை இரண்டு அல்லது மூன்று குதிரை கொண்டு இழுத்துச் செல்லும் அமைப்புடையது. பண்டைய வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலத்தில் போர்க்களத்தில் பயன்பட்டுவந்தது, பின்னர் படிப்படியாகப் பயணவாகனமாகவும், அணிவகுப்பு வாகனமாகவும், தேர்ப் பந்தயத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டு கான்ஸ்டண்டினோபில் காலத்தில் இராணுவ முக்கியத்துவத்தையும் தாண்டி தேர்ப் பந்தயம் ஆறாம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்தது.

இரும்புக் காலம்

இரும்புக் காலம் (Iron age) என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். சில சமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை.

வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, ரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.

எப்லா இராச்சியம்

எப்லா (Ebla; அரபு மொழி: إبلا, modern: تل مرديخ, Tell Mardikh), சிரியாவின் பண்டைய இராச்சியங்களில் ஒன்றாகும். எப்லா இராச்சியம் கிமு 3500 முதல் கிமு 1600 வரை ஆட்சி செலுத்தியது.

எப்லா பண்பாட்டுத் தொல்லியல் களங்கள், அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில், மார்திக் கிராமத்தின் அருகே பண்டைய எப்லா நகரம் இருந்தது. எல்பா நகரம் கிமு 3,000 முதல் கிமு 1600 ஆண்டின் நடுப்பகுதி வரை முக்கிய மையமாக விளங்கியது. எல்பா தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் படி, எப்லா நாகரீகம், வெண்கலக் காலததில் லெவண்ட், பண்டைய எகிப்து மற்றும் ஊர் நாகரீகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. எப்லா நகரம் கிபி 7ம் நூற்றாண்டில் முற்றிலும் அழிவுற்றது.

துவக்க வெண்கலக் காலத்தில், கிமு 3500ல் குறுநில அரசாகத் தோன்றிய எப்லா இராச்சியம், பன்னாட்டு வணிகத்தில் முன்னேறி, கிழக்கு மற்றும் வடக்கு சிரியாப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டது.

கிமு 23ம் நூற்றாண்டில் முதல் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டது. எப்லா இராச்சியம் இரண்டாம் முறையாக, மூன்றாவது ஊர் வம்சத்தவரால் மீண்டும் நிறுவப்பட்டது. மீண்டும் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டபோது, அமோரிட்டு பழங்குடிகளால் மீண்டும் மூன்றாவது முறையாக எப்லா இராச்சியம் நிறுவப்பட்டது. இம்மூன்றாம் எப்லா இராச்சியம், கிமு 1600ல் இட்டைட்டுப் பேரரசால் அழிக்கப்படும் வரை ஆட்சி செய்தது.

தொல்பழங்காலம்

தொல்பழங்காலம் என்பது கற்காலம் தொடங்கிய காலத்துக்கும், மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. இது ~3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கல் கருவிகள் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ~5300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும் முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான காலம் என்று வரையறுக்கப்படுகிறது.

மெசபடோமியாவில் உள்ள சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், பண்டைய எகிப்து நாகரிகம் ஆகியவை முதன்மை நாகரிகங்கள் ஆகும். இவை தங்களுக்கு சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன. வரலாற்று பதிவுகளை உருவாக்கின. இது வெண்கலக் காலத்திலேயே தொடங்கி விட்டது. அண்டை நாகரிகங்கள் இவற்றைப் பின்பற்றின. மற்ற பெரும்பாலான நாகரிகங்கள் இரும்புக் காலத்தின் போது தொல்பழங்காலத்தின் இறுதியை அடைந்துவிட்டன. தொல்பழங்காலத்தில் மூன்று கால அமைப்புகள் உள்ளன. அவை கற்காலம் வெண்கலக் காலம், மற்றும் இரும்புக் காலம் ஆகியவை. ஐரோவாசியா மற்றும் வட ஆப்ரிக்கா ஆகியவற்றில் உலோகப் பயன்பாடு மிகுந்து இருந்தது

அமெரிக்கா, ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், இங்கு புதிய கலாச்சாரங்களுடன் அதிக அளவு கடின உலோகப் பயன்பாடு கொண்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அமெரிக்காவில் முன் கொலம்பிய நாகரிகங்கள் ஏற்படும் முன்னும், ஐரோவாசியகள் கலாச்சாரத்திற்கு முன்னும், சிக்கலான எழுத்து முறைமைகள் அறியப்படவில்லை. மிகச் சமீப காலங்களில் இவை முன் வரலாற்றுக் காலத்தை எட்டின.

யூரேசியாவுக்கு வெளியே உள்ள பல கலாச்சாரங்களில் எழுது பொருட்கள் வெவ்வேறு காலங்களில் அறிமுகமாகின. எழுது பொருட்களின் புழக்க காலமே உள்ளூர் வரலாற்றுக் காலமாகும். அதன்பின் எழுத்துமுறை என்பது வெற்றிக் கலாச்சாரமாக அறியப்பட்டது. முன் கலாச்சாரங்கள் எழுதப்பட்டன. தொல்பழங்காலத்தைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லை. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களின் வயதைக் கணிப்பது கடினமாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு வரை காலத்தை கணிப்பதற்கான தெளிவான நுட்பங்கள் அறியப்படவில்லை.

தோங் சோன் பண்பாடு

'தோங் சோன் பண்பாடு (Đông Sơn culture) அல்லது ( "கிழக்குமலைப் பண்பாடு",என்பது தோங் சோன் எனும் ஊரின் பெயரால் வழங்கப்படுகிறது. இது பண்டைய வியட்நாமின் வெண்கலக் காலப் பண்பாடாகும். இது வட வியட்நாமில் சிவப்பு ஆற்றுப் படுகையில் கி.மு 700 முதல் கி.மு 500 இல் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டு வரை நிலவியது. இது முந்தைய வியட்நாமின் பெயரான வான் இலாங்கின் கடைசிப் பண்பாடாகும். இது மற்றொரு வியட்நாம் அரசாகிய ஔ இலாக் பகுதியுள்ளும் பரவியிருந்த்து. இதன் தாக்கம் கடல்சார்ந்த பகுதிகள் உட்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் கி. மு 1000 முதல் கி.மு முதல் நூற்றாண்டு வரை பரவிக் காணப்பட்டது.இலாக் அல்லது இலாக் வியட் என வழங்கப்பட்ட தோங் சோன் மக்கள், நெல் பயிரிடுவதிலும் நீர்யானை, பன்றிக் கால்நடை வளர்ப்பிலும் மீன் பிடித்தலிலும் நீண்ட திமில் படகு ஓட்டுவதிலும் வெண்கல வார்ப்புத் தொழிலிலும் கைதேர்ந்தவர். இது தோங் சோன் முரசு வட வியட்நாமில் இருந்து தென்சீனம் வரை கிடைப்பதில் இருந்து தெளிவாகிறது.

தோங் சோன் பண்பாட்டுக்குத் தெற்கே முதனிலைச் சாம் சா குய்ன் பண்பாடு நிலவியது.

பண்டைய அசிரியா

பண்டைய அசிரியா (Early Period (Assyria) என்பது கிமு 2500 முதல் கிமு 2025 வரையிலான மெசொப்பொத்தேமியாவின் அசிரியர்களின் பண்பாட்டு வரலாற்றை குறிக்கும். இது அசிரிய மக்களின் நான்கு இராச்சியங்களில் முதலாவதாகும்.

பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025 - 1378),, மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 - 934) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911 - 609) பிற மூன்று அசிரியப் பேரரசுகள் ஆகும்.

முதன் முதலாக அசிரியர்கள் கிமு 2500ல் மெசொப்பொத்தேமியாவின் அசூர் நகரத்தில் நகர இராச்சியத்தை நிறுவினர். பண்டைய அசிரிய மக்கள் கிழக்கு செமித்திய மொழியைப் பேசினர்.

பண்டைய அண்மை கிழக்கு

பண்டைய அண்மை கிழக்கு (ancient Near East), பண்டைய நாகரீகங்களின் தாய் வீடுகளில் ஒன்றாகும். பண்டைய அன்மைக் கிழக்குப் பகுதி, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக், தென்கிழக்கு துருக்கி, தென்மேற்கு ஈரான் மற்றும் வடகிழக்கு சிரியா பகுதிகளைக் கொண்டது. அனதோலியா, பண்டைய எகிப்திய நாகரீகம், பண்டைய ஈரானிய, ஈலாம், மீடியா,மற்றும் லெவண்ட் (தற்கால சிரியா), லெபனான், பாலஸ்தீனம், இசுரேல், ஜோர்டான் மற்றும் சைப்பிரசு நாகரீகங்கள், பண்டைய அன்மைக் கிழக்கில் கிமு 2600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாகரீகங்கள் ஆகும்.

வெண்கலக் காலத்தில் கிமு 4,000ம் ஆண்டில் சுமேரியா நாகரீகத்தின் தோற்றத்திற்குப் பின் பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளில் நாகரீகங்கள் பரவத் துவங்கியது.

அண்மைக் கிழக்குப் பகுதி உலக நாகரீகங்களின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பகுதிகளில் முதன்முதலாக வேளாண்மை செய்யப்பட்டது. புதிதாக நகரங்கள் நிறுவப்பட்டது. மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட நகர இராச்சியங்கள், பேரரசுகள், சமயங்கள், எழுத்து முறைகள், போர் ஆயுதங்கள், போர் முறைகள், சமூக நீதிச் சட்டங்கள், அறிவியல், வானவியல், சோதிடம், கணக்கு, வண்டிச் சக்கரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாகரீக காலத்தில் அண்மைக் கிழக்கில் பெரிய அளவில் பேரரசுகள் தோன்றியது.

பபிலோனியா

பாபிலோன் இராச்சியம் என்பது இன்றைய ஈராக் நாட்டுப் பகுதியில் பழைய காலத்தில் செழித்திருந்த மெசொப்பொத்தேமியாவின் மையத்தெற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பண்பாட்டுப் பகுதியைக் குறிக்கும். இதன் தலைநகரம் பாபிலோன் ஆகும். சுதந்திரமான பாபிலோனை நிறுவி அதன் முதல் மன்னனாக இருந்தவர் சுமுவாபும் என்னும் அமோரைட் தலைவர் ஆவார். பழைய அசிரியப் பேரரசின் முதலாம் எரிசம் மன்னரின் சமகாலத்தவரான இவர், கி.மு. 1894 ஆம் ஆண்டில், அயலில் இருந்த கசால்லு என்னும் நகர அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பபிலோனைப் பிரித்துத் தனி அரசாக அறிவித்தார். அமோரைட் அரசரான அம்முராபி (கி.மு 1792 - 1750) என்பவர் அக்காத் பேரரசின் சில பகுதிகளையும் உள்ளடக்கிப் பேரரசொன்றை அமைத்தபோது பபிலோனியா ஒரு பலம் வாய்ந்த நாடாக உருவானது. இப் பேரரசு குறுகிய காலமே நிலைத்திருந்தது. பபிலோனியாவில், நிர்வாகத் தேவைகளுக்கு அக்காடிய மொழியையும், மதத் தேவைகளுக்கு அக்காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாது போய்விட்ட சுமேரிய மொழியையும் பயன்படுத்தினர். அக்காடிய, சுமேரிய மரபுகள் பபிலோனியப் பண்பாட்டுக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளன. வெளியார் ஆட்சி நிலவிய வேளைகளிற்கூட வெண்கலக் காலம் முழுவதிலும் தொடக்க இரும்புக் காலத்திலும் இந்தப் பகுதி ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்கியது. பபிலோனியாவை ஒரு தனி அரசாக நிறுவி அதை முன்னிலைக்குக் கொண்டுவந்த அமோரைட்டுக்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அத்துடன், பபிலோனியாவின் வரலாற்றில் பெரும் பகுதி, இன்னொரு மெசொப்பொத்தேமிய இனத்தவரான அசிரியர்கள் அல்லது காசிட்டுகள், ஈலத்தவர் மற்றும் இட்டைட்டுகள், அராமியர், சால்டியர் பாரசீகர்கள், கிரேக்கர்கள், பார்த்தியர்கள் போன்ற வெளி வம்சங்களைச் சேர்ந்தவர்களாலேயே ஆளப்பட்டது.

பழைய அசிரியப் பேரரசு

பழைய அசிரியப் பேரரசு (ஆட்சிக் காலம்:கிமு 2025 - கிமு 1378) (Old Assyrian Empire) அசிரிய மக்களின் நான்கு கால கட்டங்களில் இருந்த பேரரசுகளில் இரண்டாவதாகும். பிற மூன்று கால கட்டங்களில் இருந்த அசிரிய இராச்சியங்கள் பண்டைய அசிரியா, மத்திய அசிரியப் பேரரசு மற்றும் புது அசிரியப் பேரரசுகள் ஆகும். பழைய அசிரியப் பேரரசின் தலைநகராக அசூர் மற்றும் டெல்-லெய்லான் எனும் சுபாத்-என்லில் நகரங்கள் விளங்கியது. பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 முதல் 1378 முடிய ஆண்டனர்.

பண்டைய அண்மை கிழக்கில், யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகள் பாயும் மேல் மெசொப்பொத்தேமியாவில், தற்கால ஈராக் மற்றும் சிரியாவில் வாழ்ந்த அசிரியர்கள் கிழக்கு செமிடிக் மொழியான அக்காதியம் பேசினர்.

நாகரீகங்களின் தொட்டில் எனப்போற்றப்படும் மெசொப்பொத்தேமியாவில் சுமேரியாவின் அக்காடியப் பேரரசு, பாபிலோன், அசிரியா இராச்சியங்கள் கலை, பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்ந்த நிலையில் இருந்தன.

பழைய அசிரியப் பேரரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கில் தற்கால ஆர்மீனியா, அஜர்பைஜன், மற்றும் ஈரான், ஈராக், சிரியா, தெற்கில் அரேபியத் தீபகற்பம், மேற்கில் சைப்பிரஸ், பண்டைய எகிப்து, பண்டைய லிபியா ஆகிய பகுதிகளில் அசிரியர்களின் ஆட்சியில் இருந்தது.முந்தைய அக்காடியப் பேரரசில் சிறு நகரமாக இருந்த அசூர் நகரத்தில் கிமு 2600ல் அசிரிய மக்கள் கோயில்கள், அரண்மனைகள், நகரச் சதுக்கங்கள் கட்டி, அதனை தமது இராச்சியத்திற்கு பெயராகவும், தலைநகரமாகவும் கொண்டனர்.

அசூர் நகரம் நிறுவுவதற்கு முன்னர் அசிரியாவை சுபர்த்து என்றும் சாசானியப் பேரரசில் அசோரிஸ்தான் எனவும் அழைக்கப்பட்டது.

புதிய கற்காலம்

புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.

புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல், லெவண்ட் (சிரியா, லெபனான், ஜோர்டான்]], பாலஸ்தீனம்) போன்ற பகுதியில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லெவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆபிரிக்கா, வட மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.

புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் பயிர் செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது.

பைலோஸ் போர் இரத்தினக்கல்

பைலோஸ் போர் இரத்தினக்கல் ( Pylos Combat Agate) என்பது பண்டைய கிரேக்க காலத்திய மினோவன் நாகரிக முத்திரை ஆகும். இதில் போரில் ஈடுபட்ட வீரர்களை சித்தரித்து உள்ளது. இது மியோவான் பைஸ்ஸில் உள்ள நெஸ்ஸேரின் அரண்மனைக்கு அருகில் உள்ள தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் கி.மு 1450 காலத்தியதாக கருதப்படுகிறது. இந்த முத்திரையில் உள்ள நுணுக்கமான செதுக்கல்கள் இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மாரி, சிரியா

மாரி நகர இராச்சியம் (Mari, தற்கால Tell Hariri, அரபு மொழி: تل حريري) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில், தற்கால சிரியாவின் கிழக்கு எல்லையில், கிழக்கு செமிடிக் மொழி பேசிய, பண்டைய நகர இராச்சியம் ஆகும். இந்நகரத்தின் சிதிலங்கள் சிரியாவின் டெல் அரிரி தொல்லியல் களத்தில் காணப்படுகிறது. தெற்கில் பாபிலோனுக்கும், மேற்கில் லெவண்ட் பகுதிகளுக்கு இடையே அமைந்த மாரி இராச்சியம், கிமு 2900 முதல் கிமு 1759 முடிய 1141 ஆண்டுகள் செழிப்புடன் விளங்கியது. சுமேரியா நாகரீகத்தின் மேற்கின் நுழைவாயில் என மாரி நகரம் அழைக்கபப்ட்டது.

கிமு 26ம் நூற்றாண்டின் நடுவில் அழிக்கப்பட்ட மாரி நகரம், கிமு 2500ல் மீண்டும் சீரமைக்கபப்ட்டது. மாரி நகர இராச்சியத்தினர், எப்லா இராச்சியத்தினருடன் கடும் பகை கொண்டிருந்தனர். மாரி நகரம் கிமு 23ம் நூற்றாண்டில், அக்காடியப் பேரரசால் கைப்பற்றப்பட்டு, அக்காதிய இராணுவ படைத்தலைவர்களால் கிமு 19ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. பின்னர் கிமு 1761ல் மாரி நகரம், பபிலோனியா இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு, அசிரியர்களாலும், பாபிலோனிய மக்களாலும் ஆளப்பட்டது. கிமு 4ம் நூற்றாண்டில் ஹெலனியக் காலத்தில் கிரேக்கர்களால் மாரி நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.

மாரி நகர இராச்சிய மக்கள் மெசொப்பொத்தேமியா மற்றும் சுமேரியர்களின் கடவுள்களை வணங்கினர். மேற்கு செமிடிக் மொழிகள் பேசிய அமோரிட்டு மக்கள் மாரி நகரத்தில் கிமு 21ம் நூற்றாண்டிற்கு முன்னர் தங்கள் குடியிருப்புகளை நிறுவினர். 1933ல் மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தனர். மாரி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 25,000 களிமண் பலகைகளில், கிமு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாரி நகர ஆட்சி நிர்வாகம், அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த இராஜ தந்திர உறவுகள் எடுத்துரைக்கிறது. மாரி நகர இராச்சியத்தினர் கிமு 1800ல் சைப்பிரசு, கிரீட் போன்ற மத்தியத் தரைக் கடல் நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருந்த வணிகங்கள் இச்சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது

வாள்

வாள் ( pronunciation) (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும். இதன் துல்லியமான வரையறை கருதப்படும் காலத்தையும் வட்டாரத்தையும் பொறுத்தமைகிறது. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும். பெரும்பாலும் வாட்கள் இந்த இருவகைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. வாள் போரின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே மாற்றங்கள் பெரிதும் இன்றி இருந்துள்ளன. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முதன்மையாக வாள் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதுமான வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றியலாக, வாள் வெண்கலக் காலத்தில் குத்துவாளில் இருந்து தோன்றியது; மிகப் பழைய வெண்கலக்கால வாள் கி.மு 1600 அளவில் கிடைத்துள்ளது. பிந்தைய இரும்புக் கால வாள் மிகவும் குறுகியதாகவும் பிடியில் குறுக்குக் காப்பு இல்லாமல் அமைந்தது.

வாளைப் பயன்படுத்தும் தேர்ச்சி வாள்போர்க் கலை எனப்பட்டது. தொடக்க புத்தியல் காலத்தில் மேலைநாட்டு வாள் வடிவமைப்பு குத்துவாள், போர்வாள் என இரண்டு வடிவங்களாகப் பிரிந்தது.

உடைவாள் போன்ற குத்தும் கத்திகள் பின் குறுவாளாக மாறின. இவை இலக்கை வேகமாகவும் ஆழமான குத்துக்காயம் ஏற்படும்படியும் வடிவமைக்கப்பட்டன. இவற்றின் நேராக நீண்ட மெல்லிய சமனிலை வடிவமைப்பு இரட்டையர் போரில் அச்சமூட்டுவதக இருந்தது. ஆனால் வெட்டுவதிலும் தறிப்பதிலும் மிக பயனற்றதாக இருந்தது. குறிபார்த்து மேற்கொள்ளுக் குத்து போரை நொடிகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

பட்டா(ள)க் கத்தியும் அகல்குறுவாளும் போன்ற வளைந்த அலகுகள் கொண்ட வாட்கள் போரிடுவதற்காக மிகவும் கூடுதலான எடையுடன் வடிவமைக்கப்பட்டன. இவை பல பகைவரைக் குதிரை மேலிருந்து வெட்டவும் தலைகளைச் சீவவும் ஏற்றவை. பட்டளக் கத்தியின் வளைந்த அலகின் முனைப்புற எடை போர்க்களத்தில் சமனிலையோடு அச்சமூட்டும் போர்நிகழ்த்த வழிவகுத்தன. இவை கூரிய முனையும் இருபுற வெட்டுவிளிம்பும் கொண்டவை. இவை காலாட்படையில் ஒவ்வொரு வீரராக்க் குடலை ஊடுறுவிச் சாய்க்க பொருத்தமாக அமைந்தன. எனவே இவை 20 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்பாட்டில் விளங்கின. அமெரிக்க நாவாய்ப்படை இரண்டாம் உலகப்போர் வரை தன் படைக் கொட்டடையில் இவ்வகை அகல்குறு வாள்களைக் குவித்து வைத்திருந்தது. பின்னர் அவை காடுதிருத்த வழங்கப்பட்டன.

ஐரோப்பாவுக்கு வெளியே வாள்களாக நடுவண்கிழக்குப் பகுதியின் சுசிமிதார் ச்னாவின் தாவோ யப்பானியக் கடானா அகியவை அமைகின்றன. சீனாவின் யியான் இருகூர் விளிம்பு வாளாகும். இது ஐரோப்பிய இரும்ப்புக் கால இருகூர்விளிம்பு கொண்ட வாளாகும்.

வியட்நாம்

வியட்நாம் (/ˌviːətˈnɑːm/, /viˌɛtʔ/, /ʔˈnæm/, /ˌvjɛtʔ/; வார்ப்புரு:IPA-vi), அல்லது உத்தியோகபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (SRV; Cộng hòa Xã hội chủ nghĩa Việt Nam ( listen)), என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.

கி.பி. 938ல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்கு தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் சப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர். அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது.

வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது. 2000ம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு, 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது. இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக வணிக அமைப்பில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

வெண்கலம்

வெண்கலம் என்பது ஒரு செப்பு மாழைக் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு (கீழே பார்க்கவும்). இம் மாழைக் கலவை மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது. இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு. செப்பு என்பதற்கு பாரசீகச் சொல்லாகிய `பிரிஞ்ச் ("birinj,") என்பதில் இருந்து ஆங்கிலச் சொல்லாகிய `பிறான்ஸ் (Bronze) என்னும் சொல் உருவாகியது.

வேதியியலின் வரலாறு

வேதியியலின் வரலாறு (History of chemistry) என்பது பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதியைப் பிரதிபலிக்கிறது. கி.பி 1000 ஆண்டுகளில் வாழ்ந்த குடிமக்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் முடிவில் வேதியியலின் பலவகைப் பிரிவுகளாக உருவாகியுள்ளன. தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல், மருந்துக்காகவும் நறுமணத்திற்காகவும் தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், கொழுப்பை சோப்பாக மாற்றுதல் மற்றும் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம்.

வேதியியலின் முற்காலக் கொள்கையான இரசவாதம் என்ற கொள்கை பருப்பொருளின் இயற்கையையும் அதன் மாற்றங்களையும் விளக்குவதில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் பதிவு செய்த அச்சோதனைகளின் முடிவுகள் முதலியனவற்றிலிருந்து இரசவாதிகள் நவீன வேதியியலுக்கான புதிய தளம் அமைத்தனர் என்பது தெளிவாகிறது. இரசவாதம் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை 1661 ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் தன்னுடைய நூலில் தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கின.

ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயங்கியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது.

ஹுரியத் மக்கள்

ஹுரியத் மக்கள் (Hurrians) பண்டைய அண்மை கிழக்கில், நடு வெண்கலக் காலத்தில் வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் அனதோலியாவில் (தற்கால வடக்கு ஈராக் மற்றும் வடகிழக்கு சிரியா) வாழ்ந்தவர்கள். இவர்கள் ஹுரியத் மொழி பேசினர்.

பண்டைய அண்மை கிழக்கில், இந்திய - ஈரானிய மொழி பேசிய ஹுரியத் மக்களின் முக்கிய இராச்சியங்களாக இட்டைட்டு பேரரசு (கிமு 1600 – கிமு 1178) மற்றும் மித்தானி இராச்சியம் (கிமு 1475 – கிமு 1275), அரராத்து இராச்சியம் கிமு 858 - 590) விளங்கியது. துவக்க இரும்புக் காலத்தில் ஹுரியத் மக்கள் பிற இன மக்களுடன் திருமண உறவு கொண்டு கலந்தனர். ஹுரியத் கலப்பின மக்களின் வழித்தோன்றல்களான அரராத்து மக்கள் கிமு 858 முதல் கிமு 735 முடிய கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டனர். தற்கால ஆர்மீனியா மக்கள் ஹுரியன் மற்றும் அரராத்து மொழிகளின் கலப்பின மொழியை பேசுகின்றனர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.