யூதித்து (நூல்)

யூதித்து (Judith) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

Cristofano Allori 002
ஒலோபெரினின் தலையைக் கொய்த யூதித்து. ஓவியர்: கிறிஸ்தோஃபனோ அல்லோரி. ஆண்டு: 1613. காப்பிடம்: ஃபுளோரன்சு, இத்தாலியா.

பெயர்

யூதித்து என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் Ιουδίθ (Iudíth) என்றும், இலத்தீனில் Iudith என்றும் பெயர் பெற்றுள்ளது. எபிரேய மொழியில் இப்பெயர் יְהוּדִית (Yehudit, Yəhûḏîṯ ) என வரும்; இப்பெயரின் பொருள் "யூதப் பெண்மணி" என்பதாகும்; "புகழ்பெற்றவர்" என்றும் பொருள்கொள்ளலாம்.

இந்நூல் இணைத் திருமுறை விவிலிய நூல் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டது. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இது விவிலியத் திருமுறை நூலாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது [1].

உள்ளடக்கமும் செய்தியும்

செலூக்கியர் ஆட்சியின்போது யூதர்கள் அனுபவித்த துயரத்தின் வரலாற்றையும், மக்கபேயர் வழியாகக் கடவுள் அவர்களுக்கு அளித்த முழுவிடுதலையையும் பின்னணியாகக் கொண்ட இந்நூல் ஒரு புதினம்.

இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம்.

யூதித்து நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்ல. ஆனால், அவர் பாலசுத்தீனாவில் பரிசேயரின் வழிமரபில் தோன்றிய ஒரு யூதர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; மூல நூல் கிடைக்காமையால், செப்துவசிந்தா (Septuaginta) என்று அழைக்கப்படும் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது.

ஒருவர் கடவுள் மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமைபடைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும். இக்கருத்தை யூதர்கள், என்றும் தங்கள் நினைவில் நிறுத்தும் பொருட்டு, கோவில் அர்ப்பணிப்பின் ஆண்டு விழாவின்போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

துன்பியலும் மகிழ்வியலும் கலந்த நாடகக் கதை

 • யூதித்து நூல் கிரேக்க கலாச்சாரத்தில் நிலவிய துன்பியல்-மகிழ்வியல் கலந்த ஒரு நாடகக் கதைபோல் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கதையின் பின்னணி பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் காலம். அவன் "நினிவே நகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான்" என்று யூதித் நூல் கூறுகிறது (1:1). இது வேண்டுமென்றே கதை நடந்த காலத்தையும் இடத்தையும் வெளிப்படையாகச் சொல்லாதிருக்கப் பயன்படுத்திய உத்தியாக இருக்கலாம்.
 • யூதித்து கதைப்படி, நெபுகத்னேசர், மேதியர் மீது ஆட்சிசெய்த அர்ப்பகசாதுவோடு போரிட்டு வெற்றிபெற்றான். பிறகு அவன் மேற்கு நாடுகளோடு போரிடத் திட்டமிட்டான். நெபுகத்னேசரின் படைத்தலைவன் பெயர் ஒலோபெரின். மன்னன் ஒலோபெரினை அழைத்து, படைகளைத் திரட்டிக்கொண்டு போரிடச் செல்லுமாறு பணித்தான். ஒலோபெரின் தன் மன்னனின் கட்டளைகளை மீறாமல் மிகப் பிரமாணிக்கமாய்ச் செயல்பட்டவன். அவன் இராசியர், இசுமவேலர், மீதியர் போன்ற மக்களினத்தாரைத் தோற்கடித்துவிட்டு, வெற்றி மமதையில் முன்னேறிக் கொண்டிருந்தான்.
 • ஒலோபெரினின் அடுத்த இலக்கு இசுரயேலைத் தாக்கி அவர்களை முறியடிப்பது. அவன் படைகளோடு வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட இசுரயேலர் அஞ்சி நடுங்கினார்கள். எதிரியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க தங்களால் இயலாது என்ற நிலையிலும், தங்கள் குருக்களின் அறிவுரையை ஏற்று, அவர்கள் போருக்கு அணியமானார்கள். மக்கள் நோன்பிருந்து இறைவனை நோக்கி வேண்டிக்கொண்டனர்.
 • இதற்கிடையில், அம்மோனியர் தலைவனான அக்கியோர் என்பவன் ஒலோபெரினிடம் சென்று, இசுரயேலின் கடவுள் வலிமை மிக்கவர் ஆதலால் அவர்கள் துணிந்து எதிர்த்து நிற்பார்கள் என்றும், அவர்களை முறியடிப்பது இயலாது என்றும் கூறினான். இதைக் கேட்டு சினமுற்ற ஒலோபெரின், "நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ? அவர் தம் படையை அனுப்பி இசுரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்" என்று இறுமாப்போடு மொழிந்தான் (6:2).
 • பின்னர் இசுரயேலர் வாழ்ந்த மலைப்பகுதியினை ஒலோபெரினின் படைகள் சூழ்ந்தன. மலையடிவாரத்திலிருந்த நீரூற்றுக்களைக் ஒலோபெரின் கைப்பற்றினான். பெத்தூலியா பகுதி முழுதுமாக முற்றுகையிடப்பட்டது. தப்பி ஓடவும் வழியில்லாமல், உண்பதற்கோ குடிப்பதற்கோ ஒன்றுமில்லாமல் இசுரயேலர் அவதிப்படலாயினர். உள்ளம் தளர்ந்துபோன இசுரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்.
 • முற்றுகையிடப்பட்டு 34 நாள்கள் கடந்துவிட்டன. குழந்தைகள் சோர்வுற்றார்கள்; பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள். பசிதாகத்தால் மடிவதைவிட எதிரிகளிடம் சரணடைந்து அடிமைகளாக்கப்படுவது மேல் என்று எல்லாரும் தீர்மானித்த வேளையில் நகரப் பெரியவர் ஊசியா மக்களைப் பார்த்து, "மேலும் ஐந்து நாட்களுக்குப் பொறுத்துக்கொள்வோம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டுவார். கடவுளின் உதவி கிடைக்காவிட்டால் சரணடையலாம்" என்று கூறி அவர்களுக்கு ஊக்கமளித்தார் (7:30).
 • இசுரயேல் மக்கள் நம்பிக்கை இழந்து சோர்வுற்றிருப்பதை யூதித்து என்னும் பெண்மணி கேள்விப்பட்டார். அவர் மனாசே என்பவரை மணந்திருந்தார். கணவரின் இறப்பிற்குப் பிறகு கைம்பெண்ணாகவே வாழ்ந்து வந்தார். செல்வம் மிகுந்த அவர் பார்வைக்கு அழகானவருமாய் இருந்தார். தம் குலத்தைச் சார்ந்த மக்களின் துன்பத்தையும், அவர்கள் எதிரிகளின் கைகளில் சரணடைய எண்ணியதையும் பற்றிக் கேள்வியுற்ற யூதித்து பெத்தூலியா நகரத் தலைவர்களை அழைத்து, அவர்களைக் கடிந்துகொண்டார். இசுரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் வல்லமை குறித்து ஐயுற்றவர்கள் செய்த தவற்றை அவர்களுக்கு யூதித்து சுட்டிக்காட்டினார். தாமே முன்வந்து, கடவுளின் உதவியோடு தம் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரப் போவதாகக் கூறினார்.
 • யூதித்து தம் கைம்பெண் கோலத்தைக் களைந்தார்; தம்மைப் பட்டு உடையாலும் தங்க நகைகளாலும் அழகுபடுத்திக்கொண்டார். ஒலோபெரினிடம் சென்று, "இசுரயேலரின் கடவுள் வலிமை மிக்கவர்; அவருக்கு எதிராக மக்கள் பாவம் செய்யும்போது மட்டுமே அவர் அவர்களைத் தண்டிப்பார். இப்போதும்கூட அவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்ய முனைந்துள்ளனர். எனவே அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நான் உம்மிடம் தெரிவிப்பேன்" என்று கூறித் தம் மக்களைக் காட்டிக்கொடுப்பது போலப் பேசினார்.
 • யூதித்தின் அழகையும் அறிவையும் கண்டு மயங்கிய ஒலோபெரின் அவரை விருந்துக்கு அழைத்தான். யூதித்தும் தம்மைச் சிறப்பாக அழகுபடுத்திக்கொண்டு அவன்முன் வந்தார். கூடாரத்தில் விருந்து முடிந்த வேளையில் யூதித்தும் ஒலோபெரினும் தனித்திருந்தனர். யூதித்தைத் தன் ஆசைக்கு இணங்கவைக்க அதுவே தருணம் என்றுதான் ஒலோபெரின் நினைத்திருந்தான். ஆனால் குடிபோதையில் மயங்கிப் போய் மஞ்சத்தில் விழுந்தான்.
 • யூதித்து ஒலோபெரின் அருகே சென்றார். அருகிலிருந்த அவனுடைய வாளைக் கையிலெடுத்தார். கைநடுங்காமல் துணிவோடிருக்க கடவுளை நோக்கி வேண்டிக்கொண்டார். ஓங்கிய வாளைக் கொண்டு ஒலோபெரினின் தலையைக் கொய்து எடுத்தார். துண்டிக்கப்பட்ட தலையைக் கூடார வாயிலில் நின்றிருந்த தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார். இருவரும் கூடாரத்தை விட்டு அகன்று இசுரயேல் மக்களிடம் திரும்பிச் சென்று, தங்களை அச்சுறுத்திய எதிரியைக் கடவுள் தண்டித்துவிட்டார் என்று கூறினர்.
 • இசுரயேல் மக்கள் மகிழ்ச்சி பொங்கி ஆரவாரித்தனர். தாங்கள் பெற்ற வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். யூதித்துக்கும் புகழாரம் செலுத்தினர். இவ்வாறு யூதித்து நூல் நிறைவுறுகிறது.

ஆணாதிக்க எதிர்ப்புப் புனைவு

ஆணாக்கம் நிலவிய இசுரயேல் சமூகத்தினர் யூதித்து கதையை ஏற்றுக்கொண்டது வியப்பைத் தரலாம். சமுதாயத்தில் தாழ்நிலைக்கு ஒதுக்கப்பட்ட பெண், அதுவும் ஒரு கைம்பெண், அன்று தலைவர்களாகக் கருதப்பட்ட ஆண்களின் ஆட்சிக்குச் சவால் விடுத்தார். அவர்கள் கோழைத்தனமாக நடந்துகொண்டதற்காக அவர்களைக் கடிந்துகொண்டார். ஆனால் அவரிடம் நாட்டுப்பற்று இருந்தது; கடவுள் நம்பிக்கையும் மிகுந்திருந்தது. எனவே யூதித்து யூத வரலாற்றிலும் உணர்வுநிலையிலும் ஒரு சிறப்பிடம் வகிக்கின்றார்.

கிறித்தவர்கள் யூதித்து என்னும் பெண்மணி மரியாவுக்கு ஒரு முன்னறிவிப்பு என்று கருதுகின்றனர்[2]. யூதித்தின் நற்பண்புகளையும் அழகையும் அறிவையும் வியந்து, மக்கள் பாடிய வாழ்த்துப் பாடல் மரியாவுக்குப் பொருந்துவதாகக் கிறித்தவம் விளக்குகிறது:


"நீரே எருசலேமின் மேன்மை;
நீரே இசுரயேலின் பெரும் மாட்சி;
நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!
இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்;
இசுரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர்.
இவை குறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும்
உமக்கு ஆசி வழங்குவாராக!"

சில பகுதிகள்

யூதித்து 7:19-22
உள்ளம் தளர்ந்துபோன இசுரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்;
ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை.
காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழுவதும்
முப்பத்துநான்கு நாள் இசுரயேலரைச் சூழ்ந்துகொள்ள, பெத்தூலியாவில் வாழ்ந்தவர்கள்
அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின. நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன.
ஒரு நாளாவது தண்ணீர் கிடைக்கவில்லை; அவர்களுக்குக் குடிநீர் அளவோடுதான் கொடுக்கப்பட்டது.
அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்; பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து
நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள். ஏனெனில் அவர்களிடம் வலுவே இல்லை."

யூதித்து 16:1-9
"யூதித்து பாடிய பாடல்:
என் கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்;
ஆண்டவருக்கு மேள தாளங்களோடு
பண் இசையுங்கள்...
அசீரியன் வடக்கு மலைகளிலிருந்து வந்தான்;
எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான்.
அவர்களது பெருந்திரள் ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது.
அவர்களுடைய குதிரைப்படை மலைகளெங்கும் பரவியிருந்தது...
எல்லாம் வல்ல ஆண்டவரோ ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.
வலிமைவாய்ந்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை;
அரக்கர்கள் அடித்து நொறுக்கவில்லை;
உயரமான இராட்சதர்கள் தாக்கவில்லை;
ஆனால் மெராரியின் மகள் யூதித்து
தம் முக அழகால் அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்...
அவரது அழகு அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
அவரது வாள் அவனது கழுத்தைத் துண்டித்தது..."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர் 1:1 - 7:32 25 - 34
2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி 8:1 - 16:25 34 - 48

ஆதாரங்கள்

 1. யூதித்து நூல்
 2. யூதித்தும் மரியாவும்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.