மொழி

மொழி (language) என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக ரூசோ போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.

மனித மொழி உற்பத்தித்திறன், இடப்பெயர்ச்சி ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.[1]

மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது.[2]

மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.

மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். ஆடலாலோ பாடலாலோ உணர்த்தப்படும் மொழி பேச்சொலி (Phonology) வகைக்குள் அடங்குகின்றது.

விளக்கங்கள்

மொழியியல் ஆய்வின் மூலமாக , '"மொழி'" என்பது இரண்டு அடிப்படை அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது:

 1. கருத்தியல் சார்பானது
 1. குறிப்பிட்ட மொழியியல் அமைப்பு.

எ.கா: பிரஞ்சு மொழி

தகவலுக்கான கருவி

மற்றுமொரு விளக்கமானது மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது. இது வாய்மொழி அல்லது குறியீட்டு ஒலிப்புகளை பரிமாறிக்கொள்ள மனிதர்களுக்கு உதவுகிறது. இந்த வரையறை, மொழியின் சமூக செயல்பாடுகள் மற்றும் மனிதர்கள் தங்களை வெளிப்படுத்தவும், பொருட்களை கையாளவும் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. இலக்கணத்தின் செயல்பாட்டுக் கோட்பாடுகள் இலக்கண அமைப்புகளையும் அவற்றின் தொடர்புகளையும் புரிந்து கொண்டு அதனை இணக்கத்துடன் பயன்படுத்த உதவுகின்றன.[3]

மொழித் தோற்றம்

மொழி எப்போது உருவானது என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைக்கின்றது. அவரவர்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து இவை மாறுபடுகின்றன. எனவே உறுதியான முடிவு தெரியவில்லை. மேலும் பலருடைய ஆராய்ச்சி முடிவுகளும் மொழியின் வடிவத்தை இறுதி செய்ய முடியவில்லை.அது குழப்பமாதாகவே உள்ளது. மேலும் மொழி என்பது தங்களுடைய முன்னோர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வகையான கோட்பாடுகள் தொடர்ச்சி சார்ந்த கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தவகையான கோட்பாடுகள் மொழி என்பது மனிதர்களுக்கு மட்டுமான ஒன்று என கூறுகிறது. மேலும் உயிருள்ளபிற விலங்குகளுக்கு இத்தகைய ஒன்று இல்லை என்பதாக கூறுகின்றனர்.[4]

முன் வரலாறு

மொழி பற்றிய முறையான ஆராய்ச்சி என்பது இந்தியாவின் பானினி என்பதிலிருந்து தொடங்கியது. மேலும் அவற்றில் கி.மு 5 ல் 3,959 சமஸ்கிருத இலக்கண வரையறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கி.மு 1900 லேயேஎ சுமேரிய எழுத்தாளர்கள் சுமேரிய மற்றும் அக்கேடியன் எழுத்துகளுக்க்கிடையேயான இலக்கண வேறுபாடுகளை கூறியுள்ளனர்.

மொழி

உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ - ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை. தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன.

மொழி மற்றும் பேச்சு பற்றிய உடலியக்கவியல் மற்றும் நரம்பியல் கட்டமைப்பு

பேச்சு என்பது எல்லா கலாச்சாரங்களிலும் மொழிக்கான இயல்புநிலையிலேயே இருந்து வந்துள்ளது.பேச்சு என்பது உதடு, நாக்கு மற்றும் குரல்வளைகளின் பிற கூறுகளை கட்டுப்படுத்தும் திறன்களைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய உடல்கூறுகள் இயல்பாகவே ஒலி ஒலிக்கும் திறன்களை கொண்டுள்ளது.[5] மனித மொழிக்கான மரபணு தளங்களின் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.மேலும் FOXP2 என்ற மரபணு ஒலியை எழுப்ப பயன்படுவதாக கூறப்படுகிறது.[6]

மூளை

Brain Surface Gyri
Brain Surface Gyri

மூளை அனைத்து மொழியியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படுகிறது.அது மொழியியல் அறிவாற்றல் மற்றும் பேச்சுக்களின் இயக்கவியல் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. மொழியின் அடிப்படை நரம்பியல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகக் குறைவாக உள்ளது, இருப்பினும் நவீன பட நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதில் கணிசமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம். மொழியின் நரம்பியல் அம்சங்களைப் படிப்பதனை நரம்பியல் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.[7]

நரம்பியல் விஞ்ஞானம் என்பதில் எவ்வாறு மூளையானது பேச்சு மற்றும் மொழியில் இடையூறு அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த நரம்பியல் அறிவியலாளர்கள், மூளையில் உள்ள இரண்டு பகுதிகள் மொழி செயலாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். முதன்மையான பகுதி வர்னிக்கேவின் (Wernicke's area) பகுதியாகும். இதில் மொழி புரிந்துகொள்ளல் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பேசுகையில் அதன் ஒலிப்பு முறை, வாக்கியத்தை மேற்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி ப்ரோகாவின் (Broca's area) பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏற்படும் காயங்களால் தாங்கள் நினைப்பதை கூற இயலாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.[8]

கட்டமைப்பு

மொழியானது அடையாளத் தொடர்பாடல் முறையாக விவரிக்கப்படும் போது, அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை அறிகுறிகள், அர்த்தங்கள் மற்றும் அர்த்தங்களையும் அறிகுறிகளையும் இணைக்கும் குறியீடுகள். இந்த அறிகுறிகள் என்பவை ஒலிகள், சைகைகள், எழுத்துக்கள், அடையாளங்கள் என்பவற்றின் தொகுப்பாக இருக்கின்றன. அவை மொழியைப் பயன்படுத்தும் முறையில் தங்கியிருக்கும். அதாவது மொழியானது எழுதுவதற்கு, பேசுவதற்கு, குறியிடுவதற்கு என வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தப்படும்போது, வெவ்வேறு அறிகுறிகளின் தொகுப்பாக இருப்பதுடன் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை உருவாக்கும். ஒரு தொடர்பாடலில், அறிகுறிகளானவை வழங்குபவரிடமிருந்து ஒரு குறியீடாகக் கடத்தப்படும்போது, அதனைப் பெறுபவர் அந்தக் குறியீட்டைச் சீர்படுத்தி அர்த்தத்தை புரிந்து கொள்வார்.[9]

மொழியியல் வேறுபாடு

மொழி தாய்மொழி பேசுபவர்கள்
(millions)[10]
மாண்டரின் 848
ஸ்பானிசு 329 [11]
ஆங்கிலம் 328
போர்த்துகீசியம் 250
அரேபியம் 221
இந்தி 182
வங்காளம் 181
ரஷ்யா 144
ஜப்பான் 122

கலாச்சாரம்

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட விவாத நெறிமுறையாகவே அங்கு நிலவிய மொழிகள் விளங்கின. மேலும் அவர்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அவைகள் விளங்கின. மொழிகள் உச்சரிப்பில், சொல்லகராதி மற்றும் இலக்கணத்தில் மட்டும் வேறுபட்டு இருப்பன அல்ல. மேலும் அவைகள் அந்தந்த இடங்களின் கலாச்சாரத்தின் மூலமாகவும் வித்தியாசப்படுகின்றன. மேலும் மனிதர்கள் தங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் தங்களுடைய மொழியினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அது எவ்வாறு மற்றவர்களின் கல்லாச்சாரத்திலிருந்து வேறுபட்டுள்ளது என்பதனை எடுத்துக்கூறுகிறது. ஒரே கலாச்சாரத்தினைப் பின்பற்றுபவர்கள் கூட மொழியினை பயன்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றனர். அவ்ர்கள் அதனை உச்சரிப்பதிலும், சைகை காண்பிப்பதிலும் வேறுபடுகின்றனர்.

மொழியியலாளர்கள் ஒரு மொழியினை பல வழிகளில் பயன்படுத்தும் முறையினை வகைப்பாடு என்று கூறுகிறார்கள். இதனை வட்டார மொழி என்றும் கூறப்படுகிறது. மொழியியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட மொழிகளை அது பயன்படுத்தப்படும் முறைகளைப் பொறுத்து அதற்கு தொடர்புடைய கலாச்சாரப் பின்னனி கொண்டவர்களே அதனை புரிந்துகொள்ள இயலும் எனவும் கூறுகின்றனர்.

ஏனெனில் மொழிக்கான கட்டமைப்புகள் அதனைப் பயன்படுத்தும் மக்களின் மூலமாகவே சென்றடைகின்றன. மேலும் ஒருவர் பயன்படுத்தும் அந்த குறியீடுகளும் அவ்வாறே பிற மக்களை சென்று சேர்கின்றன. மேலும் அவர்களுக்கு அது இரண்டாவது மொழியாக இருப்பின் அதன் உச்சரிப்பில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவையெல்லாம் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒருவருடைய பிறந்த இடம், அவர்களின் பொருளாதார பின்னனி ஆகியவையும் இதில் பங்காற்றுகின்றன.இவைகள் அனத்தும் மொழியியலின் வகைகளாக அல்லாது இருந்த போதிலும் பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் நான்கு மொழிக் குடும்பங்கள்

இந்திய-ஆரிய மொழிகள்

வட இந்திய மொழிகள் பல இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இன்று உள்ள பெரும்பாலான வட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியனவே.

திராவிட மொழிக் குடும்பம்

இந்தியாவில் உள்ள முக்கிய மொழி குடும்பங்களின் ஒன்று திராவிட மொழிக் குடும்பம், இதில் மூத்த மொழி தமிழ்.மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவையாகும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

 1. Michael Tomasello (1996). "The Cultural Roots of Language". in B. Velichkovsky and D. Rumbaugh. Communicating Meaning: The Evolution and Development of Language. Psychology Press. பக். 275–308. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8058-2118-5.
 2. [1]
 3. Robert Van Valin, Jr. (2001). "Functional Linguistics". in Mark Aronoff. The Handbook of Linguistics. Blackwell. பக். 319–337.
 4. Ulbaek, Ib (1998). "The Origin of Language and Cognition". in J. R. Hurford & C. Knight. Approaches to the evolution of language. Cambridge University Press. பக். 30–43.
 5. Larry Trask (1999). Language: The Basics (2nd ). Psychology Press.
 6. Fisher, Simon E.; Lai, Cecilia S.L.; Monaco, Anthony P. (2003). "Deciphering the Genetic Basis of Speech and Language Disorders". Annual Review of Neuroscience 26: 57–80. doi:10.1146/annurev.neuro.26.041002.131144. பப்மெட்:12524432.
 7. Lesser, Ruth (1989). "Language in the Brain: Neurolinguistics". in Collinge, N.E.. An Encyclopedia of Language. London:NewYork: Routledge.
 8. Larry Trask (1999). Language: The Basics (2nd ). Psychology Press.
 9. ( [[#CITEREF|]])
 10. "Ethnologue statistics". SIL.
 11. Lewis, M. Paul (ed.) (2009). "Ethnologue: Languages of the World, Sixteenth edition". Dallas, Tex.: SIL International.
அரபு மொழி

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 21 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது.இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.

அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.

ஆங்கிலம்

ஆங்கிலம் என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன்மத்திய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். இம்மொழி ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சில கரீபியன் நாடுகளில் பெரும்பாலான மக்களால் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மண்டாரின் சீனம் மற்றும் எசுப்பானிய மொழிக்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது பெரிய சுதேச மொழியாகவும் இது காணப்படுகிறது. மேலும் இது உலகம் முழுவதும் இரண்டாவது மொழியாகவும் பயிலப்படுகிறது. இம் மொழி ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு உலக அமைப்புக்களின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது.

ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு ஸ்கொட்லாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும் உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.வரலாற்று ரீதியாக, 5ம் நூற்றாண்டில் ஜெர்மானிக் குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும். ஆங்கிலம் எனும் சொல்லின் மூலம் ஏங்கில்ஸ் எனும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இது அவ்வினத்தாரின் மூதாதையரின் தேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆங்கிலச் சொற்களில் குறிப்பிடத்தக்களவு லத்தீன் மொழியிலிருந்தே உருவாயின. ஏனெனில் லத்தீன் மொழியே கிறித்தவ தேவாலயத்தினதும் ஐரோப்பிய அறிஞர் சமுதாயத்தினதும் பொது மொழியாகக் காணப்பட்டது. மேலும், 9ம் மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற வைக்கிங்குகளின் படையெடுப்பினால் ஆங்கிலத்தில் பண்டைய நோர்சு மொழியின் தாக்கமும் ஏற்பட்டது.

11ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மீது மேற்கொள்ளப்பட்ட நோர்மன் படையெடுப்பினால் நோர்மன் பிரெஞ்சு மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. மேலும், இதன் உச்சரிப்பும் சொல்வளமும் ரோமானிய மொழிகளுடன் நெருங்கிய உறவுடையன போன்ற தோற்றத்தை அளித்துள்ளன. இத்தாக்கங்களுக்கு உட்பட்ட ஆங்கிலம் மத்தியகால ஆங்கிலம் எனப்பட்டது. 15ம் நூற்றாண்டில் தெற்கு இங்கிலாந்தில் உருவான பாரிய உயிரெழுத்துத் திரிபு காரணமாக மத்திய ஆங்கிலத்திலிருந்து நவீன ஆங்கிலம் உருவானது.

வரலாறு முழுவதும் ஏனைய பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கிக்கொண்டமையினால் நவீன ஆங்கிலம் பரந்த சொல்வளமும் சிக்கலான குழப்பமான உச்சரிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. நவீன ஆங்கிலம் ஐரோப்பிய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மொழிகளிலும் இருந்து சொற்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 250,000க்கும் அதிகமான வித்தியாசமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் பல தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் கொச்சைச் சொற்கள் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இடாய்ச்சு மொழி

இடாய்ச்சு மொழி (ஜெர்மன், Deutsch - டாய்ட்ஷ் ) 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும் உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றுமாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இதன் பல சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து பெறப்பட்டவையாகும். பல சொற்கள் இலத்தீன், கிரேக்கத்திலிருந்தும், சில சொற்கள் பிரெஞ்சு, ஆங்கிலத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இடாய்ச்சு மொழியைப் போலவே உள்ள மொழிகள் இலுகுசெம்பூர்கிய மொழி, டச்சு, பிரிசியன், ஆங்கிலம் மற்றும் இசுகாண்டிநேவிய மொழிகளாகும்.

இடாய்ச்சு இலத்தீன் அகரவரிசை கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக்களை உயிர் மாற்றக் குறியீடுகளுடனும் (Ä/ä, Ö/ö, Ü/ü) எழுத்து ßவையும் பயன்படுத்துகின்றது.

ஆத்திரிய இடாய்ச்சு, சுவிசு இடாய்ச்சு போன்று இடாய்ச்சு மொழி பல வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளது.

இடாய்ச்சு மொழி ஜெர்மனி, ஆசுதிரியா, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளில் அலுவல்மொழியாகவும் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இத்தாலி, சுலோவீனியா, அங்கேரி, நமீபியா, போலந்து போன்ற பல நாடுகளில் சிறுபான்மை மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மிகவும் பயன்படுத்தப்படும் மொழியாக அறிவியலில் இரண்டாவதாகவும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் மூன்றாவதாகவும் உள்ளது; வணிகம் மற்றும் பண்பாட்டில் முதன்மையான மொழியாக விளங்குகின்றது. உலகளவில், புதிய நூல்கள் வெளியிடுவதில் இடாய்ச்சு மொழி ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகின் அனைத்து நூல்களிலும் (மின்னூல்கள் உட்பட) பத்தில் ஒன்று இடாய்ச்சில் உள்ளது. இணையதளங்களில் உள்ளுரைக்காக மிகவும் பயன்படுத்தப்படும் மொழிகளில் மூன்றாவதாக உள்ளது.

இந்தி

இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று . இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

இலத்தீன்

இலத்தீன் (Latin) என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழியாக இருக்கிறது. ஆனால் கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தின் ஆட்சி மொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும். இது முதலில் இத்தாலி தீபகற்பத்தில் உள்ள ரோம் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது.ரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், டைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன்(Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெல்டிக்மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது.

சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.

இன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது.

உருசிய மொழி

உருசிய மொழி (ру́сский язы́к, russkij jazyk, உச்சரிப்பு [ˈruskʲɪj jɪˈzɨk]) என்பது ரசியக் கூட்டமைப்பு, பெலாரசு, உக்ரேன், கசக்சுதான் மற்றும் கிர்கிசுத்தான் ஆகிய நாடுகளில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு சிலாவிய மொழியாகும். மோல்டோவா, லத்வியா, லிதுவேனியா, எசுதோனியா ஆகிய நாடுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாக இல்லாவிட்டாலும் பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், முன்னைய சோவியத் ஒன்றிய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சிறியளவில் பேசப்படுகிறது. ரசிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். மேலும், இது இன்று காணப்படும் மூன்று கிழக்கு சிலாவிய மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. பண்டைய கிழக்கு சிலாவிய மொழியின் எழுத்துச் சான்றுகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகின்றன.

ரசிய மொழி, யூரேசியப் பிரதேசத்திலேயே பாரிய புவியியற் பரம்பலைக் கொண்ட மொழியும், சிலாவிய மொழிகளிலேயே பரந்தளவில் பேசப்படும் மொழியுமாகும். மேலும், ரசியா, உக்ரேன் மற்றும் பெலாரசு ஆகிய நாடுகளிலுள்ள 144 மில்லியன் மக்களை உள்ளடக்கி, ஐரோப்பாவின் பெரிய சுதேச மொழியாகவும் விளங்குகின்றது. சுதேச மொழியாகப் பேசப்படும் மொழிகளில் இது 8ம் இடத்திலும், மொத்த மக்கள்தொகை அடிப்படையில் 5ம் இடத்திலும் காணப்படுகிறது. ரசிய மொழி ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

உருது

உருது (Urdu) 13ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து "இந்துஸ்தானி" என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20 ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது பாகிஸ்தானின் அரசகரும மொழியாகவும், இந்தியாவின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே

ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால்தான் 'உருது' எனறு பெயர் பெற்றது. துருக்கி மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (army camps) ஒர்து என்றே அழைப்பர்.

எசுப்பானியா

எசுப்பானியா (Spain, ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ( கேட்க)) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.

இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் எசுப்பானிய மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.

எசுப்பானியா, அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்ற முறையில் அமைந்ததுமான ஒரு குடியரசு நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது ஐக்கிய நாடுகள் அவை, நேட்டோ, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.

ஐ. எம். டி. பி இணையத்தளம்

ஐ. எம். டி. பி (IMDb) இவ்விணையத்தளம் ஆனது உலக திரைப்படங்களினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது. மேலும் இவ்விணையத்தளத்தினை இலவசமாகப் பயனர் பகுதியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உண்டு. உலகளவில் திரைப்படங்களிற்காகப் பார்க்கப்படும் தளங்களில் இத்தளம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவுத் தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.

சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்தப் படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.

1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.

2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.

கன்னடம்

கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே. இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.இம்மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து இருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும்.

சமசுகிருதம்

சமற்கிருதம் (Sanskrit), அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. தற்போது கர்நாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது. எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் கூறுவர். சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.

சீனா

சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது.

உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. 1949 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக இறைமை, தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும்.

இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் வல்லரசும் ஆகும். சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு, சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த வறுமை வீதம் (poverty rate) 2001 ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும்.

தமிழ்

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆவது ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

தெலுங்கு

தெலுங்கு

தெலுங்கு மொழி - தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க திராவிட மொழிகளுள் ஒன்று.

தெலுங்கு எழுத்துமுறை - தெலுங்கு மொழியை எழுதுவதற்கான வரிவடிவம்

தெலுங்கர் - தெலுங்கு மொழி பேசும் இந்திய இனக்குழு

பிரெஞ்சு மொழி

பிரெஞ்சு மொழி (le français [lœ fʁ̥ɒ̃sɛ] (listen) அல்லது la langue française [la lɑ̃ɡ fʁɑ̃sɛz]) ஒரு ரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் ரோமண்டிப் பகுதி, பெல்ஜியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரென்சுவிக் (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், லூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர். ஆபிரிக்காவில், காபொன் (80%), மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரெஞ்சு மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரெஞ்சு மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரெஞ்சு மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரெஞ்சு மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரெஞ்சு மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரெஞ்சு அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து லா பிரான்கோபோனீ எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்), பெல்ஜியம் (மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து (மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன. ஐரோப்பாவில் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர். இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும். 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரெஞ்சு மொழி பேசுவோரால் ஆளப்பட்டது). ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி அறிமுகமானது.

லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராட்டிரம்

மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्र Mahārāṣṭra, பலுக்கல்: [மகாராஷ்ட்ரா] ) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில் ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.

முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%உம் பங்களிக்கிறது.

மலையாளம்

மலையாளம் (Malayalam மலையாளம்: മലയാളം, "மலயாளம்") தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். தமிழினை மூல மொழியாக கொண்டு தோன்றிய மலையாளம், நாளடைவில் தனி மொழியாக உருப்பெற்றது. சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.

யப்பான்

யப்பான் (ஜப்பான்; Japan) அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.

வங்காள மொழி

வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி இந்தியத் துணைக்கண்டத்தில் வங்காள தேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் வாழும் மக்கள் பேசுகின்றனர். இது வங்கதேச குடியரசின் தேசிய மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகும், மற்றும் இந்திய குடியரசின் சில கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் (பாரக் பள்ளத்தாக்கு) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது. மேலும் இது இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும் இது மொத்தம் 250 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, உலகிலேயே மிகுதியான மக்கள் பேசும் மொழிகளில் ஏழாவது இடத்தைவகிக்கிறது. இது பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியது. இது தெற்காசியாவில் பரவலாக உள்ள மற்ற மொழிக் குடும்பங்களான, குறிப்பாக திராவிட மொழிகள், ஆசுத்ரோ-ஆசிய மொழிகள், திபெத்திய-பர்மிய மொழிகள் ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளது, இவை அனைத்தும் வங்காள சொல்லவளத்துக்கு பங்களிப்பு செய்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மொழியின் சொற்களில் வங்க மொழிச் சொற்கள் பாதிக்கும் மேலானதாகவும் (அதாவது, சமஸ்கிருத சொற்களின் உள்ளூர் திரிபுகள், சமஸ்கிருத சொற்களின் சிதைந்த வடிவங்கள் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இருந்து கடனாக பெற்றவை), 30 சதவிகிதம் சமஸ்கிருத சொற்களாகவும், மேலும் மீதமுள்ளவை வெளிநாட்டு சொற்களாகும். கடைசியாக கலந்த சொற்களில் மேலாதிக்கமானவை பாரசீகமாக இருந்தது, இது சில இலக்கண வடிவங்களின் ஆதாரமாக இருந்தது. மேலும் சமீபத்திய ஆய்வுகளில் இம்மொழியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சொற்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, முக்கியமாக வங்க மொழியை பேசுபவர்களின் பாணியாலும் விருப்பம் காரணமாகவும். இன்று, வங்கதேசத்தில் வங்காளமொழி மிகுதியானவர் பேசும் மொழியாக உள்ளதாகவும், இந்தியாவில் பரவலாக பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் உள்ளது.வங்காள மொழியானது ஆயிரமாண்டு நீண்ட, பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். வங்காள மறுமலர்ச்சிக்குப் பிறகு பரவலாக வளர்ந்திருக்கிறது மேலும் இது ஆசியாவில் மிக முக்கியமான மற்றும் வேறுபட்ட இலக்கிய மரபுகளில் ஒன்றாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. தமிழில் உள்ள செந்தமிழ், கொடுந்தமிழ் போலவே இரட்டை வழக்கு வங்காளத்திலும் உண்டு. வங்காள மொழியின் இலக்கிய வழக்கும், வட்டார வழக்குகளும் பெருமளவில் வேறுபடுகின்றன. இரண்டு நாடுகளின் நாட்டுப்பண்கள் இந்தியா ஜன கண மன, வங்காள தேசம் (அமர் சோனர் பங்களா), வங்காள மொழியில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டின் பாக்கிஸ்தானின் ஆட்சி மொழி நிலைப்பாடானது வங்காள மொழி இயக்கம் துவக்கப்பட காரணமாயிற்று. 1999 ஆம் ஆண்டில், கிழக்கு பாக்கிஸ்தானின் (இன்றைய வங்கதேசம்) மொழி இயக்கத்தை அங்கீகரிக்கும்விதமாக பன்னாட்டு தாய் மொழி நாளாக பெப்ரவரி 21 ஐ யுனெஸ்கோ அங்கீகரித்தது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.