முடியாட்சி

முடியாட்சி (monarchy) என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார். முடியாட்சியில் மன்னருக்கான அதிகாரமானது தற்காலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மன்னருக்கு முழுமையான அதிகாரமற்று முற்றிலும் குறியீடாக (கிரீடம் பெற்ற குடியரசு), பகுதியளவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் (அரசியலமைப்பு முடியாட்சி), முற்றிலும் சர்வாதிகாரம் (முழுமையான முடியாட்சி) என்று வேறுபடுகிறது. பாரம்பரியமாக மன்னர் இப்பதவியில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது பதவியில் இருந்து விலகும் வரை வகிப்பார். அதன்பிறகு மரபுரிமையில் அடுத்த அரசர் பதவிக்கு வருவார்.   ஆனால் தேர்தலின் வழியாகக்கூட முடியாட்சிகளில் மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. ஐக்கிய இராச்சியம், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அரசியல்சட்ட முடியாட்சிகளில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. தலைமுறை ஆட்சி ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக வத்திக்கானின் அரசராகக் கருதப்படும் திருத்தந்தையை கர்தினால்கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.

Richard Löwenhez, Salbung zum König
13 ஆம் நூற்றாண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் முடிசூட்டுவிழாவில் திருமுழுக்கு பெறும் காட்சி.

19 ம் நூற்றாண்டு வரை முடியரசானது மிகவும் பொதுவான வடிவமாக இருந்தது, ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை. இப்போது பொதுவாக அரசியலமைப்பு முடியாட்சியே நிலவுகிறது.  இதில் மன்னர் ஒரு சட்ட மற்றும் சடங்கு பாத்திரத்தையே வகிக்கிறார், அரசருக்கு குறைந்த அதிகாரம் அல்லது அரசியல் அதிகாரம் இல்லாத நிலையோ உள்ளது:  எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ், மற்றவர்கள் ஆளும் அதிகாரத்தை கொண்டுள்ளனர். தற்சமயம் உலகில் 47 நாடுகள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 19 நாடுகள் பொதுநலவாய நாடுகள் குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தைத் தவிர, அனைத்து ஐரோப்பிய முடியாட்சிகளும் அரசியலமைப்பு முடியாட்சிகளாகும்,   ஆனால் சிறிய நாடுகளில் உள்ள அரச இறையாண்மையானது பெரிய நாடுகளின் அரசர்களைவிட தங்கள் நாடுகளில் பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டதாக உள்ளது. கம்போடியா, ஜப்பான், மலேசியாவில் மன்னராட்சி என்றாலும், அவர்கள் அதிகாரத்தின் அளவுக்கு கணிசமான மாறுபாடுகள் உள்ளன. அவை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்தாலும், புரூணை, மொராக்கோ, ஓமன், கத்தார், சவூதி அரேபியா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள எந்தவொரு தனித்துவமான அதிகாரத்தையும் விட அதிகமான அரசியல் செல்வாக்கை அரசியலமைப்பாலோ அல்லது பாரம்பரியங்களாலோ மன்னர்களால் தொடர்ந்து பயன்படுத்துவது தொடர்கிறது.

World Monarchies
  குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி
  முழுமையான முடியாட்சி
  துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)

சொற்பிறப்பு

முடியாட்சியை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லான "monarch" (இலத்தீன்: monarcha) என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான μονάρχης, monárkhēs இருந்து வருந்தது. தற்போதைய பயன்பாட்டில், முடியாட்சி என்ற சொல் வழக்கமாக பரம்பரை ஆட்சியின் பாரம்பரிய முறைமையை குறிக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சிகள் அரிதானதாக இருந்தன.

மன்னர் தலைமையின் பட்டப் பெயரைப் பொறுத்து, முடியாட்சியானது பல்வேற நாடுகளில் கிங்டம், பிரின்சிபாலிட்டி, டச்சீ, பேரரசர், பேரரசு, சாம்ரோம், எமிரேட், சுல்தானகம், கஹானேட் போன்றவாறு குறிப்பிடப்படுகிறது.

வரலாறு

Zygmunt III w stroju koronacyjnym
முடியாட்சி அதிகாரத்தின் சின்னங்களான செங்கோல் மற்றும் குளோபஸ் க்ருசிகெர் ஆகியவற்றை ஏந்திய போலந்தின் மூன்றாம் சிங்கிஸ்முட் மன்னர்.

வாரிசு தலைமை அல்லது பரம்பரை அரசாட்சி என்று அறியப்படும் சமூக பரம்ரை ஆட்சிமுறை வடிவமானது வரலாற்றுக்கு முந்தையது. மரபுசார் பழங்காலத்தில் மன்னர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் "கிங்" (king) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து, எகிப்திய மற்றும் மெசொப்பொத்தேமியா முடியாட்சிகள், அதேபோல் புரோடோ-இந்தோ-ஐரோப்பிய சமயக் காலங்களில், மன்னர் என்பவர் புனிதத்தன்மை கொண்டவர்கள், அல்லது வழிபாட்டுக்கு உரிய பேரரசர் எனக் கருதப்பட்டனர்.

இடைக்காலத்தில் ரோமானிய சாம்ராச்சிய மன்னர்கள் கிறித்தவத்தின் பாதுகாப்பாளராகவும் "தெய்வீக உரிமைபடைத்த அரசர்கள்" என்ற கருத்தை உருவாக்க புனித அம்சங்களுடன் இணைக்கப்பட்டனர்.  சீனா, ஜப்பானிய, நேபாள மன்னர்களும் நவீன காலத்திய கடவுளாக வாழ்கின்றனர்.

பழங்காலத்தில் இருந்து, முடியாட்சியின் ஜனநாயக வடிவங்கள் வேறுபடுகின்றன, அங்கு நிர்வாக சக்திகள் குடிமக்களின் பங்களிப்பு அற்ற அவைகள் மூலம் கையாளப்பட்டன.

பழங்கால ஜெர்மனியில், அரசதிகாரம் என்பது முதன்மையான ஒரு புனித அம்சம் கொண்டதாக கருதப்பட்டது, மேலும் அரசர் என்பவர் சில மரபினரின் பரம்பரையின் நேரடி வாரீசாக இருந்தார், அதே சமயம் அவையோர்களால் அவர் அரச குடும்பத்தில் தகுதி வாய்ந்த அங்கத்தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1649 இல் இங்கிலாந்தின் பாராளுமன்றம் ஆங்கிலேய முடியாட்சியைத் தற்காலிகமாக தூக்கியெறிந்து, 1776 ஆம் ஆண்டின் அமெரிக்கப்புரட்சி மற்றும் 1792 பிரெஞ்சுப் புரட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றவாதமும், முடியாட்சி எதிர்ப்புவாதமும் நவீன காலத்தில் எழுச்சியடையத் தொடங்கியது. 19 ம் நூற்றாண்டு அரசியலின் பெரும்பகுதி, முடியாட்சிக்கான எதிர்ப்பு வாதம் மற்றும் முடியாட்சியாளர் பழமைவாதம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள பிளவுகளால் வகைப்படுத்தப்பட்டது.

பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில் முடியாட்சியை அகற்றின, குறிப்பாக முதலாம் உலகப் போரின்போது அல்லது இரண்டாம் உலகப் போரின்போது குடியரசுகளாக மாறின. குடியரசுக்காக வாதிடுதலை குடியரசுக் கட்சியினர் என்று அழைப்பர், அதே நேரத்தில் முடியாட்சிக்கு ஆதரவான வாதத்தை முடியாட்சிவாதிகள் என்று அழைக்கின்றனர். நவீன சகாப்தத்தில், முடியாட்சியானது பெரிய நாடுகளைவிட சிறிய நாடுகளில் கூடுதலாக உள்ளன.[2]

பண்புகள்

முடியாட்சியானது பெரும்பாலும் மரபுரிமை ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியில் மன்னர் தன் ஆயுள் முழுவதும் மன்னராக இருப்பார். (சில முடியாட்சிகளில் மன்னர்களின் வாழ்நாள் முழுவதும் ஆள்தில்லை: உதாரணமாக, மலேசியாவின் யாங் டி பெர்துவான் அகோங் ஐந்து வருட காலத்திற்கு ஆள இயலும்) மேலும் மன்னர் இறக்கும் போது அவரின் குழந்தை அல்லது அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அதிகாரத்தை அடைவார். வரலாற்று காலத்திலும் நவீன நாளிலும் பெரும்பாலான பேரரசர்கள், அரச குடும்பத்தில் பிறந்து அரசவையை பார்த்து வளர்ந்தவர்களே. பெரும்பாலும் முடியாட்சியினல் எதிர்காலத்தில் மன்னராக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் வாரீசுக்கு எதிர்கால ஆட்சிப் பொறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

முடியாட்சி முறைமையின் குறைகள்

ஒரு அரசனால் ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை மக்களாட்சியுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு.

 • சட்டமியற்றல், நிர்வாகம், நீதிபரிபாலனம் ஆகியவற்றின் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும். அதாவது, அரசனே பொதுவாக மூன்று அம்சங்களையும் கட்டுப்படுத்துபவனாக அமைகின்றான். இது சர்வதிகாரத்துக்கு வழி சமைக்கின்றது.
 • சர்வதிகாரம்
 • மக்கள் அதிகாரம் அற்றோராக இருத்தல்.
 • அரசு கொள்கையடிப்படையில் அமையாமல், அரசனின் விருப்பு/வெறுப்பு திறன்/திறன் இன்மை ஏற்ப அமைய ஏதுவாகின்றது.
 • அரசன் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டியவனாக இருக்கின்றான். அல்லது குறைந்த பட்சம் நல்ல அமைச்சர் மற்றும் பிற துறைசார் திறன்களைத் தேடிக்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றான். இது தனிமனிதனுக்கு பாரிய ஒரு சுமை.
 • கருத்து வேறுபாட்டுக்கு இடமின்மை. எப்படிப்பட்ட நல்லாட்சி மன்னன் ஆட்சியிலும் அவனது ஆட்சிக்கு எதிராக கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். எதிரான கருத்துக்களுடன் ஒத்து அல்லது ஏற்றுப்போகவேண்டும், இல்லாவிட்டால் அதை வன்முறையால் அடக்கவேண்டும்.
 • பிறப்பு-சாதியை வலியுறுத்தும். பொதுவாக முடியாட்சி ஆட்சி மகன்வழியாகவே உரிமை கொள்ளப்படுகின்றது. தனது இருப்பை பிறப்பு வழியால் நியாயப்படுத்தும் ஒரு முறை பிறப்பு வழிச் சாதிய முறையையும் நியாப்படுத்தும்.
 • சமூக வர்க்க அசைவியக்கம் மட்டுப்படுதல்.
 • உரிமைப் போர்கள்: முடியாட்சி ஆட்சிமுறையில் அண்ணன் தம்பி, பல மனைவிமார் மகன்கள் என ஆட்சிபீட உரிமைக் கோரிக்கைக்காக நாட்டைப் போருக்கு இட்டுச் செல்வதை வரலாற்றில் காணலாம். தனிமனித அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஒரு நாட்டின் பிரச்சினையாக்கப்பட்டுப் போருக்கு காரணமாகின்றன.
 • வர்க்க இடைவெளி: அரசனுக்கும் மக்களுக்கும் பொருளாதார இடைவெளி பெரிதென்பதால், மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தருவதிலோ, மக்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவதிலோ அரசன் திறனுடன் இயங்குவதற்குத் தடையாக இருக்கும்.
 • திறன் இன்மை: பிறப்பால் அரசுரிமை பெற்ற ஒரு அரசன் அரசை வழிநடத்துவதற்குரிய திறனைத் தன்னகத்தே இயல்பாக கொண்டிருப்பான் என எதிர்பார்க்க முடியாது.
 • ஒரு மிகத்திறன் படைத்த கொண்ட அரசன் அரசு அமைத்தாலும், அப்படிப்பட்ட ஒரு அரசன் அவனைப் பின் தொடர்வது முடியாமல் போகும்போது, நாடு சீரழிந்து போகின்றது.
 • பிற திறன்படைத்தவர்கள் அரசாட்சி செய்வதற்கு வழியின்மை.
 • வரலாற்றில் அரசன் ஆடம்பரமான சாதாரண மக்களோடு ஒப்பீடு செய்யமுடியாத வாழ்வுநிலையைக் கொண்டிருந்தையே முடியாட்சி முறையில் காணலாம்.

புறநானூற்றில் அரசனின் அதிகார கட்டமைப்பு

 • "புறநானூற்றுப் பாடல்களில் ஒரு தனிமனிதனின் அதிகாரம், "மன்னன்" என்ற தளத்தில் நேரடியாகக் கட்டப்படுவதை எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாம். மன்னன் எதிரிநாட்டு மக்கள்குப் பயங்கரமானவன்; எதிர்நாட்டை தீயிட்டுக் கொளுத்துபவன், எதிரிநாட்டுப் பெண்களுக்கு அச்சம் தரத்தக்கவன்;...சிதைத்தலில் வல்ல நெடுந்தகை அவன். இப்படி உடல் சார்ந்து வேற்றுநாட்டின் மேல் அதிகாரத்தை காட்டும் மன்னன் செயல்கள் புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றில் பரக்கக் காணலாம். இது வெளிப்படையான செயல்பாடு. ஆனால் தன் ஆளுகைக்கு உட்பட்ட தன்நாட்டு மக்களின் மனத்தில், அவர்கள் அறியாமலேயே, தன் அதிகாரத்தை அவர்கள் தானே முன்வந்து இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு மனவியலைக் கட்டமைக்கிற சொல்லாடல்தான் அதிகார அரசியலின் உச்சகட்ட தந்திரமாக படுகின்றது." [3]
 • "மன்னன் - புலவர் உறவில் பளிச்செனப் படுவது ஒருவர் வள்ளல்; ஒருவர் இரவலர் என்று கட்டப்பட்டுள்ள முரண்தான். எப்பொழுதுமே அதிகாரம் தன்னைவிட எளிய உருவகங்களை உருவாக்கி, அவைகள் தன்னை சார்ந்து வாழும்படியான ஒரு அமைப்பை வடிமைத்து கொள்ளும்." [4]
 • "புலவர் கடிந்துகொள்ளும் போதும் அதிகாரத்திற்கு எதிரான குரல் ஒலிப்பது போலத் தோன்றினாலும், இத்தகைய சொல்லாடல்களிலும் உள்ளுறைந்து வினைபுரிவது மன்னனின் அதிகாரக்கட்டமைப்புச் செயல்பாடுதான். தன்னை விமர்சிக்கிற குரலையும் உள்வாங்கி, தன்னைத் திருத்தி வளர்த்தெடுத்துக் கொள்ளும் மாமனிதன் என்ற கட்டுமானமே இத்தகையே சொல்லாடல் மூலம் மனத்தில் பதிவாகின்றது." [5]
 • "தாயைத் தியாகம் செய்யும்படியாகவும், அரசின் அதிகாரத்துக்கு ஏற்ப மகனை வளர்த்துக் கொடுக்கும்படியாகவும் தாயின் மனோபாவத்தை வடிவமைக்கின்றது." [6]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

 1. Stuart Berg Flexure and Lenore Carry Hack, editors, Random House Unabridged Dictionary, 2nd Ed., Random House, New York (1993)
 2. Veenendaal, Wouter (2016-01-01). Wolf, Sebastian. ed (in en). State Size Matters. Springer Fachmedien Wiesbaden. பக். 183–198. doi:10.1007/978-3-658-07725-9_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783658077242. http://link.springer.com/chapter/10.1007/978-3-658-07725-9_9.
 3. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 80-81.
 4. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 81.
 5. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 82.
 6. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 85.

வெளியிணைப்புகள்

அரசியல்

அரசியல் (ஒலிப்பு ) எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற சொல்லிலிருந்து உருவானது.

வரையறை: "நகரங்களின் விவகாரங்கள்" என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும்.

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.

அரசியல்சட்ட முடியாட்சி

அரசியல்சட்ட முடியாட்சி அல்லது அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி (Constitutional monarchy) அல்லது குறுகிய முடியாட்சி (limited monarchy) என்பது, ஒரு வகையான அரசியல் முறைமை. இதில், எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியல்சட்டத்துக்கு அமைய அரசன் அல்லது அரசி நாட்டின் தலைவராக இருப்பார். இது முழுமையான முடியாட்சியில் இருந்தும் வேறு பட்டது. முழுமையான முடியாட்சியில் அரசன் அல்லது அரசியிடமே கட்டற்ற அரசியல் அதிகாரம் இருக்கும் என்பதுடன் அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

பெரும்பாலான அரசியல்சட்ட முடியாட்சிகள் நாடாளுமன்ற முறையைக் கைக்கொள்கின்றன. இம்முறையில், அரசர் ஒரு சடங்குமுறையான ஆட்சித் தலைவராக இருப்பார். நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் பிரதம அமைச்சராக இருப்பார். உண்மையான அரசியல் அதிகாரத்தை இவரே செயல் படுத்துவார். கடந்த காலங்களில், அரசர்கள் பாசிச இத்தாலி, பிராங்கோயிய எசுப்பெயின் போன்ற பாசிச, குறைப் பாசிச அரசியல் சட்டங்களுடனும், இராணுவ வல்லாண்மைகளுடனும் சேர்ந்து இயங்கியுள்ளனர்.

தற்காலத்தில் ஆசுத்திரேலியா, பெல்சியம், கம்போடியா, கனடா, டென்மார்க், சப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, நார்வே, எசுப்பெயின், சுவீடன், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் என்பன அரசியல்சட்ட முடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் ஆகும்.

ஆட்சிக் காலம்

ஆட்சிக் காலம் (regnal year) என்பது, ஒருவர் நாட்டின் (முடியாட்சி) மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.

ஆத்தூர் (சேலம்)

ஆத்தூர் (Attur) சேலம் மாவட்டத்திலுள்ள உள்ள ஆத்தூர் வட்டம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சேலம்) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும்.

இது வசிஷ்ட்ட நதியின்(வற்றாத ஆறு எனப்பொருள்) தென் புறம் அமைந்துள்ளது. பேரூராட்சியாக இருந்த இந்நகரம் 1965 சனவரி நான்காம் தேதி நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. இந்நகரின் வழியாக தேசியநெடுஞ்சாலை 68 செல்கிறது. மாநில நெடுஞ்சாலைகள் 30 & 157 ஆகியவை இங்கு தொடங்குகின்றன. மாநில நெடுஞ்சாலை 30 ஆத்தூரையும் முசிறியையும் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை 157 ஆத்தூரையும் பெரம்பலூரையும் இணைக்கிறது

இங்கிலாந்து இராச்சியம்

இங்கிலாந்து இராச்சியம் மேற்கு ஐரோப்பாவில் 927 முதல் 1707 வரை இருந்த ஒரு இராச்சியமாகும். தனது உயர்ந்தநிலையில் இங்கிலாந்து இராச்சியம் பிரித்தானியாவின் மூன்றில் இரண்டு பங்கு தென்பகுதியையும் பல சிறுதீவுகளையும் அடக்கியிருந்தது. வடக்கில் இதன் எல்லையாக இசுகாட்லாந்து இராச்சியத்தைக் கொண்டிருந்தது. துவக்கத்தில் இதன் தலைநகரமும் முதன்மை அரண்மனைகளும் வின்செஸ்டரில் இருந்தன. பின்னர் வெஸ்ட்மின்ஸ்டரும் குளோசெசுடரும் ஒரே தகுதிநிலையில் இரு தலைநகரங்களாக இருந்து மெதுவாக வெஸ்ட்மின்ஸ்டர் முன்னுரிமை பெறலாயிற்று.

ஈராக்கு

ஈராக்கு குடியரசு (அரபு மொழி: العراق , இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக்கு தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும். யூபிரட்டிசு, டைகிரிசு ஆகிய ஆறுகளுக்கு இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.

வடக்கில் துருக்கியும் கிழக்கில் ஈரானும் தென்கிழக்கில் குவைத்தும் தெற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யோர்தானும் மேற்கில் சிரியாவும் இதன் எல்லைகளாக உள்ளன. ஈராக்கிற்கு வடக்கு பாரசீக வளைகுடாவில் 58 km (36 mi) தொலைவுள்ள குறுகிய கடற்கரை உள்ளது. இங்குள்ள உம் காசர் என்ற பகுதியில்தான் உலகின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.

ஈராக்கில் பெரும்பான்மையாக அராபியர்களும் குர்து மக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர அசிரியர்கள், ஈராக்கிய துருக்கியர்கள், சபக்கியர்கள், ஆர்மீனியர்கள், மான்டியர்கள்,சர்காசியர்கள்,கவுலியாக்கள் சிறுபான்மை இனக்குழுக்களாவர். நாட்டின் 36 மில்லியன் மக்களில் 95% பேர் முஸ்லிம்களாவர்; சமயச் சிறுபான்மையினராக கிறித்தவர்கள், யர்சானியர்கள், யசீதி மக்கள் மற்றும் மான்டியர்கள் வாழ்கின்றனர்.

டைகிரிசு, யூபிரட்டீசு ஆறுகளுக்கிடையேயான நிலப்பகுதி பொதுவாக மெசொப்பொத்தேமியா எனப்படுகின்றது; கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி யெனப்பொருள்படும். இங்கு உலகின் மிகப் பழமையான நாகரிகம் தோன்றியதாகவும் எழுத்து பிறந்தவிடமாகவும் கருதப்படுகின்றது. கிமு 6ஆம் ஆயிரமாண்டு முதல் இங்கு அடுத்தடுத்து பல நாகரிகங்கள் தழைத்துள்ளன. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஈராக்கு அக்காடிய, சுமேரிய, அசிரிய, பாபிலோனியப் பேரரசுகளின் மையமாக இருந்துள்ளது. மேலும் மீடியன் பேரரசு, அகாமெனீது பேரரசு, செலுக்கட் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சாசனீது பேரரசு, உரோமைப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மங்கோலியப் பேரரசு, சஃபாவிது பேரரசு, அஃப்சரீது பேரரசு, மற்றும் உதுமானியப் பேரரசுகளின் அங்கமாக இருந்துள்ளது; உலக நாடுகள் சங்கம் ஆணைப்படி பிரித்தானியர் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டபோது ஈராக்கின் தற்கால எல்லைகளை 1920இல் உலக நாடுகள் சங்கம் வரையறுத்தது. ஈராக் பிரித்தானியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. 1921இல் முடியாட்சி நிறுவப்பட்டு 1932இல் ஈராக் இராச்சியம் விடுதலை பெற்றது. 1958ஆம் ஆண்டில் முடியாட்சி கவிழ்க்கப்பட்டு ஈராக் குடியரசு நிறுவப்பட்டது. 1968 முதல் 2003 வரை அராபிய சோசலிச பாத் கட்சியின் ஒருகட்சி ஆட்சி நிலவியது. 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் கூட்டாளிகளும் தொடுத்த படையெடுப்பினைத் தொடர்ந்து பாத் கட்சியின் சதாம் உசேன் நீக்கப்பட்டு 2005இல் பல கட்சிகள் பங்கேற்ற நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஈராக்கிலிருந்து அமெரிக்கர்கள் 2011இல் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சிரிய உள்நாட்டுப் போர் இங்கும் பரவி உள்நாட்டுக் கலவரம் தொடர்கின்றது.

ஈராக்கில் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும்.

கத்தார்

கத்தார் (Qatar அரபு: قطر ) மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும். இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது. அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளன. பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி இதனை அருகில் உள்ள தீவு நாடான பகுரைனில் இருந்து பிரிக்கிறது.

உதுமானியர் ஆட்சியைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1971 இல் விடுதலை பெறும் வரை, கத்தார் ஒரு பிரித்தானிய பாதுகாப்பு பெற்ற நாடாக விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தானிகள் அவை கத்தாரை ஆண்டு வருகிறது. ஷேக் ஜசீம் பின் முகமது அல் தானி கத்தார் அரசின் நிறுவனர் ஆவார். கத்தார் ஒரு மரபுவழி முடியாட்சி. அதன் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல் தானி ஆவார். இது ஒரு அரசியல்சட்ட முடியாட்சியா அல்லது முழுமுதல் முடியாட்சியா என்பது தெளிவாக இல்லை. 2003ல் நடந்த பொது வாக்கெடுப்பில், கத்தாரின் அரசியல் சட்டம் ஏறத்தாழ 98% பேராதரவுடன் ஏற்பு பெற்றது. 2017 இன் தொடக்கத்தில், கத்தாரின் மொத்த மக்கள் தொகை 2.6 மில்லியனாக இருந்தது. இவர்களுள் 313,000 மக்கள் கத்தார் குடிமக்கள். 2.3 மில்லியன் மக்கள் அயல்நாட்டைச் சேர்ந்த குடியிருப்போர். இசுலாம் இந்நாட்டின் அலுவல்முறை சமயம் ஆகும்.கத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு கத்தாரை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே மனித வளங்கள் அடிப்படையில் மிகவும் முன்னேறிய நாடாகவும் காண்கிறது.கத்தார் அரேபிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. அரேபிய வசந்தத்தின் போது, பல்வேறு போராளிக் குழுக்களுக்கு நிதியாகவும் உலகெங்கும் வளர்ந்து வரும் அதன் ஊடகப் பிரிவான அல் ஜசீரா ஊடகக் குழுமம் வழியாகவும் ஆதரவு அளித்ததாக கருதப்படுகிறது.கத்தார் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருப்பதால், இடைநிலை அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. கத்தார் 2022 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியை நடத்துகிறது. கத்தார் இப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு ஆகும்.சூன் 2017ல், சவூதி அரேபியா, பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது.

குடியரசு

குடியரசு (Republic) என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும். குடியரசுத் தலைவருக்கு விதிக்கப் கடமைகளைப் பொறுத்தும், மரபுகளை ஒட்டியும், அப்பதவி வெறுமனே ஒரு அரசியல் சாராத சடங்கு சார்ந்த பதவியாகவோ, அல்லது பெரும் செல்வாக்குள்ளதும், பெருமளவு அரசியல் சார்ந்ததுமாகவோ இருக்கக்கூடும்.

சியார்சியா

சியார்சியா அல்லது ஜார்ஜியா (Georgia, საქართველო, சக்கார்ட்வெலோ) என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.

ஜோர்தான்

ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடாகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும்.

டிசம்பர் 10

டிசம்பர் 10 (December 10) கிரிகோரியன் ஆண்டின் 344 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 345 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன.

தாய்லாந்து

தாய்லாந்து (Thailand, தாய்: ประเทศไทย, எழுதும்படி: தாய் பிரதேசம்), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (Siam, สยาม), என அழைக்கப்படும் நாடு; தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மியான்மர், லாவோஸ் ஆகியன வடக்கேயும், லாவோஸ், கம்போடியா ஆகியன கிழக்கேயும், தாய்லாந்து வளைகுடா, மலேசியா ஆகியன தெற்கேயும், அந்தமான் கடல் மேற்கேயும் அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடாவில் வியட்நாமும், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகியனவும் உள்ளன.

மன்னர் ஒன்பதாம் இராமாவின் தலைமையில் அரசியல்சட்ட முடியாட்சி ஆட்சியமைப்பு இங்கு நிலவுகிறது. 1946 இல் முடிசூடிய சக்கிரி வம்சத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார். தாய்லாந்து மன்னரே அந்நாட்டின் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.

மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும். இதன் பரப்பளவு 513,000 km2 (198,000 sq mi) ஆகும். 64 மில்லியன் மக்களுடன் மக்கள்தொகை அடிப்படையில் இது 20வதும் ஆகும். பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. மக்கள்தொகையின் 75% தாய் இனத்தவரும், 14% சீனரும் 3% மலாய் இனத்தவரும் ஆவர்; ஏனையோர் மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக உள்ளனர். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும். மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

1985 முதல் 1996 வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. தற்போது இந்நாடு முக்கிய தொழில்வள நாடாகவும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. தாய் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தாய்லாந்தில் 2.2 மில்லியன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.

தொங்கா

தொங்கா (Tonga, தொங்கா மொழி: Puleʻanga Fakatuʻi ʻo Tonga), அதிகாரபூர்வமாக தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) என்பது பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் தீவுக்கூட்டம் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர். 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.

தொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே பிஜி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே சமோவாவினாலும், கிழக்கே நியுவேயினாவும், வடமேற்கே கெர்மாடெக் தீவுகளினாலும் (நியூசிலாந்தின் பகுதி), மேற்கே நியூ கலிடோனியா (பிரான்சு), வனுவாட்டு ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது.

1773 இல் ஜேம்ஸ் குக் இங்கு வருகை தந்த போது அவர் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதனால், இத்தீவு நட்புத் தீவுகள் என அழைக்கப்பட்டது. அவர் வந்திறங்கிய போது அங்கு இனாசி என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது.தொங்கா தனது இறைமையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில், அரசியல் சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை முதலாவது சார்பாண்மை மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இதன்மூலம் முழுமையான அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது.

நேபாள இராச்சியம்

நேபாள இராச்சியம் (Kingdom of Nepal) (நேபாளி: नेपाल अधिराज्य), காத்மாண்டு சமவெளியின் மல்லர் வம்ச மன்னர்களை எதிர்த்து, 1767 - 1768களில் நடைபெற்ற கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களின் முடிவில், நேபாளப் பகுதிகளை ஒன்றினைத்து, ஷா வம்சத்து கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா 1768-இல் சேத்திரிகளின் துணையுடன் நேபாள இராச்ச்சியத்தை நிறுவினார். தற்கால நேபாளத்தில் 2008-இல் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, 240 ஆண்டுகள் ஷா வம்சத்து மன்னர்கள் நேபாள இராச்சியத்தை ஆண்டனர்.

1847 முதல் ஷா வம்சத்து நேபாள மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, ராணா வம்சத்தவர்கள் 1951 முடிய நேபாள இராச்சியத்தை நிர்வகித்தனர்.

நேபாள மன்னர்கள்

நேபாள மன்னர் அல்லது மகாராஜாதிராஜா (King of Nepal) என்ற பட்டத்துடன் நேபாளத்தில் நேபாள இராச்சியத்தை நிறுவிய ஷா வம்சத்து மன்னர்கள் முடியாட்சி முறையில் நேபாள நாட்டை 1768 முதல் 2008 முடிய 240 ஆண்டுகள் ஆண்டனர்.

2008ல் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தீர்மானத்தின் படி, நேபாளத்தில் முடியாட்சி முறை ஒழிக்கும் வரை ஷா வம்சத்து மன்னர்கள் நேபாளத்தை ஆண்டனர்.

பகுரைன்

பகுரைன் அல்லது பஹரைன் என்பது பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு ஆகும். இது 33 தீவுகளில் பெரிய தீவாகும். சவூதி அரேபியாவுடன் மேற்குப் பகுதியில் மன்னர் பகுது பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கே 200 கி.மீ தொலைவில் ஈரானும், தென் கிழக்கே கத்தாரும் உள்ளது.

பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாக பஹ்ரைன் இருந்தது.இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் . இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்.

பெரிசியன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றுமதியின் முலம் வளம் பெற்ற நாடுகளில் பஹ்ரைன் முதலாவது நாடாகும்.பஹ்ரைன் தலைநகரம் மனமா ஆகும். தலைநகரில் பல பணம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன. மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் உயர்ந்த இடத்தில் உள்ளது.இதை உலக வங்கி அங்கீகரித்து உள்ளது.

லீக்கின்ஸ்டைன்

லீக்கின்ஸ்டைன் (Liechtenstein, ; LIK-tin-styn; இடாய்ச்சு: [ˈlɪçtn̩ʃtaɪn]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும். இது லீக்கின்ஸ்டைன் இளவரசரின் தலைமையில் ஆளப்படும் ஒரு அரசியல்சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாடு மேற்கு, மற்றும் தெற்கே சுவிட்சர்லாந்து, கிழக்கு மற்றும் வடக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் (62 சதுர மைல்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை 37,000. 11 மாநகரசபைகளைக் கொண்ட இந்நாட்டின் தலைநகர் வாதூசு ஆகும்.

பொருளாதாரரீதியில், கொள்வனவு ஆற்றல் சமநிலை]யின் படி லீக்கின்ஸ்டைன் ஆள்வீத வருமான அடிப்படையில் உலகில் கத்தார் மற்றும் லக்சம்பர்க்கிற்கு அடுத்த படியாக மூன்றாவது நிலையில் உள்ளது. வேலையின்மை அடிப்படையில் இது உலகின் 1.5% என்ற வீதத்தில் உலகின் மிகக்குறைந்த நிலையில் உளது.

ஆல்ப்சு காலநிலை கொண்ட லீக்கின்ஸ்டைன், குறிப்பாக மலைப்பாங்கான நாடாகும். குளிர்கால விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சிறிய பண்ணைகள் காணப்படுகின்றன. நாட்டின் பலமான நிதிச் சேவைகள் வாதூசு நகரில் அமைந்துள்ளன. லீக்கின்ஸ்டைன் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய தடையற்ற வணிகக் கூட்டமைப்பில் உள்ளது.

வத்திக்கான் நகர்

வத்திக்கான் நகர் (Vatican City) இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், 2017 கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1000 ஆகவும் இருக்கிறது. ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.

இது ஒரு திருச்சபை அல்லது புனித தலம்-முடியாட்சி நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான - போப் ஆவார். இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர். 1377 ஆம் ஆண்டில் அவிஞானில் இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வத்திக்கான் நகரத்தில் உள்ள திருத்தூதரக அரண்மனையில் வசித்து வந்தனர்.

வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.

1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக உரோமை நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.

வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது.

ஷா வம்சம்

ஷா வம்சம் (Shah dynasty), கோர்க்கா நாட்டின் கஸ் குல ராசபுத்திர அரச வம்சத்தினர் ஆவார். இவ்வம்சத்தினர் பின்னர் நேபாள இராச்சியத்தையும், நேபாள நாட்டையும் கிபி 1768 முதல் 28 மே 2008 முடிய ஆண்டனர்.

நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்ச மன்னர்களுக்கு, தாபா வம்சத்தினரும், ராணா வம்சத்தினரும் பரம்பரை பிரதம அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாகவும் பணியாற்றினர்.

அரசாட்சி முறைமைகள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.