மறைமாவட்டம்

மறைமாவட்டம்(diocese) என்பது கிறித்தவத் திருச்சபைகளில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு ஆயரின் ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.[1] டயோசிஸ் (diocese) என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் மறைமாவட்டம் என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயரால் ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு பங்குதளங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டத்தின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், பேராயர் என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து மறைமாநிலம் என அழைக்கப்படுகின்றன.

ஒரு மறைமாவட்டத்தை நிறுவும் உரிமை திருத்தந்தைக்கே உரியது.

கத்தோலிக்க திருச்சபை சட்டம் 369, ஒரு மறைமாவட்டத்தை பின்வருமாறு விளக்குகின்றது. {{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்;

மக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், ஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவியியல் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆயினும் பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் வழிபாட்டு முறையால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள மறைமாவட்டங்கள் பல ஒரே எல்லைக்குள் திருத்தந்தையால் நிறுவப்படலாம்.

மறைமாவட்டம் என அழைக்கப்படாவிட்டாலும் பின்வருபவையும் மறைமாவட்டத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றது:

  • எல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சி வட்டம் அல்லது எல்லை சார்ந்த ஆதீனம் - இவை எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ள இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் கண்காணிப்பு ஒரு மேல்நரிடம் அல்லது ஆதீனத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டும்; அதை, அதன் உரிய மேய்ப்பராக, ஒரு மறைமாவட்ட ஆயரைப்போல் அவர் ஆள்கிறார்.
  • திருத்தூதராக மறைஆட்சி வட்டம் அல்லது திருத்தூதராக ஆளுகை வட்டம் - இவை இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதராகப் பதில் ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.
  • நிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம் - சிறப்பான மற்றும் தனிப்பட்ட கனமான காரணங்களுக்காக, திருத்தந்தையால் ஒரு மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும். அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் ஆளுகின்ற ஒரு திருத்தூதரக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.

மேற்கோள்கள்

  1. http://www.newadvent.org/cathen/05001a.htm
உதகை மறைமாவட்டம்

உதகை மறைமாவட்டம் (இலத்தீன்: Ootacamunden(sis)) என்பது உதகை திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

குழித்துறை மறைமாவட்டம்

குழித்துறை மறைமாவட்டம் என்பது இந்தியாவில் தமிழகத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மறைத்தளம் ஆகும். இது கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து முளகுமூடு, திருத்துவபுரம் மறைவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தனி மறைமாவட்டமாகத் திருத்தந்தை பிரான்சிசு அவர்களால் 2014, திசம்பர் 22ஆம் நாள் நிறுவப்பட்டது.

இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சலேசிய சபையின் சென்னை மறைநிலத்தைச் சார்ந்தவர். சலேசிய சபைத் துறவியரின் பயிற்சி இல்லத்தின் தலைவராகச் செயல்பட்டுவந்தார். இவர் ஆயராக 2015-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24-ம் நாள் கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு

கொழும்பு (ஆங்கிலம்:Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

கொழும்பில் சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர்.

கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன.

கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்டம் (இலத்தீன்: Kottaren(sis)) என்பது கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் உட்பட்ட கத்தோலிக்க ஆட்சி பகுதியாகும். இது குளச்சல் மற்றும் கோட்டாறு ஆகிய மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 20, 1930ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு. நசரேன் சூசை ஆகும். இது உருவாகும் போது சுமார் 96,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள்.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madraspolitan(us) et Meliaporen(sis)) என்பது சென்னை சாந்தோம் புனித தோமையார் பீடப் பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கிறித்தவம்

தமிழ்நாட்டில் கிறித்தவம் என்பது கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்து அது தமிழகத்தில் காலூன்றி வளர்ந்த வரலாற்றையும், இன்று அதன் நிலையையும் குறிக்கிறது.

திருகோணமலை மறைமாவட்டம்

திருகோணமலை மறைமாவட்டம் (Diocese of Trincomalee, இலத்தீன்: Dioecesis Trincomaliensis) இலங்கையின் கிழக்கேயுள்ள ஒரு உரோம கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இதன் தற்போதைய ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை ஆவார்.

திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்

திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் (இலத்தீன்: Tiruchirapolitan(us)) என்பது திருச்சிராப்பள்ளி ஆரோக்கிய அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

தென்னிந்தியத் திருச்சபை

தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்னும் கிறித்தவ சபைப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்டது.

இயேசு, தம்மை ஏற்று நம்பிக்கை கொள்கின்ற மக்களிடையே நிலவ வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்தி உரைத்த கீழ்வரும் சொற்கள் தென்னிந்தியத் திருச்சபை உருவாவதற்கு உந்துதலாக அமைந்தன:

"அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (That they all may be one) என்னும் விவிலியக் கூற்று தென்னிந்தியத் திருச்சபையின் விருதுவாக்காகவும் உள்ளது.

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம் ( இலத்தீன்: Pondicherien(sis) et Cuddaloren(sis) என்பது புதுச்சேரி அமலோற்பவ அன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் புதுவையில் ஆட்சிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. 2011ஆம் ஆண்டில் இந்த உயர்மறைமாவட்டம் தனது 125வது ஆண்டை சிறப்பித்தது.

புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)

புனித அன்னை மரியா பெருங்கோவில் (Basilica of Our Lady of Ransom, Vallarpadam-Ernakulam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வராப்புழை உயர்மறைமாவட்டத்தில் உள்ள வல்லார்பாடம் என்னும் ஊரில் அமைந்துள்ள புகழ்மிக்க கத்தோலிக்க கோவில் ஆகும். இக்கோவில் “ஈடு வழங்கும் அன்னை மரியா” (Our Lady of Ransom) என்ற பெயரிலும் “வல்லார்பாடத்து அம்மா” என்றா பெயரிலும் மரியாவைச் சிறப்பிக்கும் வழிபாட்டு இடமாக உள்ளது. இங்கு பல சமயங்களைச் சார்ந்தவர்களும் திருப்பயணிகளாக வருகின்றனர்.

புனித பேட்ரிக்

புனித பேட்ரிக் அல்லது புனித பத்ரீசியார் (இலத்தீன்: Patricius; தற்கால ஐரிஷ்: Pádraig; வேல்சு: Padrig) என்பவர் 5ம் நூற்றாண்டைச்சேர்ந்த உரோம-பிரித்தானிய கிறித்தவ மறைப்பணியாளரும், அயர்லாந்தின் அர்மாகின் ஆயராக இருந்தவரும் ஆவார். இவரே அயர்லாந்துக்கு கிறித்துவத்தை கொண்டுவந்தார் என்பர். ஆதலால் இவர் அயர்லாந்தின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். புனித கொலும்பா மற்றும் புனித பிரிஜித் ஆகியோருடன் இவரும் அயர்லாந்தின் பாதுகாவலர் ஆவார்.

இவரின் காலத்தை உறுதியுடன் அறிய இயலவில்லை. ஆயினும் இவர் அயர்லாந்தில் 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பணிபுரிந்தார். இவரே அயர்லாந்தின் அர்மாகின் முதல் ஆயர் என்பது மரபு.

இவருக்கு சுமார் 16 வயதிருக்கும் போது, பெரிய பிரித்தானியாவில் இருந்த தனது இல்லத்திலிருந்து பிடிக்கப்பட்டு, அயர்லாந்துக்கு அடிமையாக எடுத்துச்செல்லப்பட்டார். ஆறு ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்தப்பின்னர் அங்கிருந்து தப்பி வீடு திரும்பினார். ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டப்பின்பு வடக்கு மற்று மேற்கு அயர்லாந்துக்தில் ஆயராக பணிபுரிந்தார். ஆயினும் அவர் பணிபுரிந்த இடங்களைப்பற்றி சிறிய அளவே அறியக்கிடைக்கின்றது. ஏழாம் நூற்றாண்டு முதலே இவர் அயர்லாந்தின் பாதுகாவலர் என்னும் பட்டத்தின் இவர் வணக்கம் செலுத்தப்பட்டார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

புனித பேட்ரிக்கின் நாள் ஆண்டுதோறும் இவரின் இறந்த நாளான 17 மார்ச் அன்று கொண்டாடப்படுகின்றது. இது அயர்லாந்துக்துக்கு வெளியேயும் கலாச்சாரம் மற்றும் சமய நிகழ்வாக கொண்டாடப்படுகின்றது. அயர்லாந்து மறைமாவட்டத்தில் இது பெருவிழாவும் கடன்திருநாளும் ஆகும்.

பேராலயம்

பேராலயம், மறைமாவட்டப் பேராலயம், மறைமாவட்டத் தலைமைக் கோவில் அல்லது கதீட்ரல் (cathedral, இலத்தீனிடமிருந்து பிரான்சியம் cathédrale. கிரேக்க மொழியில் cathedra என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் மெற்றிறாசனக் கோவில் என்பது ஆயரின் தலைமைபீடம் அடங்கிய கிறித்தவத் தேவாலயம் ஆகும். இது ஓர் மறைமாவட்டம், கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் ஆயரின் தலைமை ஆலயமாகும். கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது. ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் இத்தாலி, கால், எசுப்பானியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.

கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்களும், படிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. ஆயினும் அந்த இடங்களில் இருந்த மறைமாவட்டப் பேராலய கட்டிடங்கள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன; 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதிய பணித்தளங்களை தோற்றுவித்தன. மேலும் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்திருச்சபையின் ஆட்சிவட்டத்துள் பல புதிய மறைத்தூதுப் பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரில் பல்வேறு திருச்சபைகளுக்கான மறைமாவட்டப் பேராலயங்கள் இருக்கலாம்.

ஒரு பங்கு ஆலயம் தற்காலிகமாக மறைமாவட்டப் பேராலயமாக பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்டப் பதில் பேராலயம் (Pro-cathedral) என்று அழைக்கின்றனர். பேராயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிப்பீடம் உயர்மறைமாவட்ட பேராலயம் (Metropolitan cathedral) என அழைக்கப்படுகிறது. ஒரே மறைமாவட்டத்துக்குள்ளேயே ஒரே திருச்சபையின் இரண்டு ஆலயங்கள் ஒரே ஆயரின் ஆட்சிப்பீடமாக அமைந்திருக்கலாம். இவ்வகை ஆலயங்களில் ஒன்று மறைமாவட்டப் பேராலயம் எனவும் மற்றொன்று மறைமாவட்டப் துணை பேராலயம் (Co-cathedral) எனவும் அழைக்கப்படும்.

மட்டக்களப்பு மறைமாவட்டம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் (Diocese of Batticaloa, இலத்தீன்: Dioecesis Batticaloaensis) என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இம்மறைமாவட்டத்தின் ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி யோசப்பு பொன்னையா ஆவார்.

மதுரை உயர்மறைமாவட்டம்

மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம் (Diocese of Mannar, இலத்தீன்: Dioecesis Mannarensis) என்பது இலங்கையின் வட-மேற்கே அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இம்மறைமாவட்டம் மன்னார், முருங்கன், மடு, வவுனியா ஆகிய நான்கு பிராந்திய மாவட்டங்களைக் (deanery) கொண்டுள்ளது. 1981 இல் உருவாக்கப்பட்ட இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் இராயப்பு யோசப் ஆவார்.

யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்

யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் (Diocese of Jaffna , இலத்தீன்: Dioecesis Jaffnensis) என்பது இலங்கையின் வடக்குப் பகுதிக்கென உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். புனித பிரான்சிஸ் சவேரியாரின் காலத்திலிருந்தே தோன்றிய இந்த மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயராகப் பணியாற்றுபவர் அதிவணக்கத்துக்குரிய தாமஸ் சவுந்தரநாயகம் ஆவார்.

யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை)

யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (Jaffna Diocese) என்பது இலங்கையின் தென்னிந்தியத் திருச்சபையின் மறைமாவட்டங்களில் ஒன்றாகும். இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் டானியல் தியாகராஜா ஆவார்.

வேலூர் மறைமாவட்டம்

வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.