பொருளியல்

பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார்.

பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன

 1. சிற்றினப்பொருளியல் (microeconomics),
 2. பேரினப்பொருளியல் (macroeconomics).

என்பனவாகும். இவைதவிர

 • நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics),
 • கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics),
 • சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics).

எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள், [1] கல்வி,[2] குடும்பம், சட்டம், அரசியல், சமயம்,[3] சமூக நிறுவனங்கள், போர்,[4] அறிவியலுக்கும் [5] பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.[6]

பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள்

GDP growth (annualized)
1990 முதல் 2007 வரையிலான நாடுகளின் ஜிடிபி வளர்ச்சியை காட்டும் உலகப்படம்.

பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை.

செல்வம் பற்றி ஆராயும் இயல்

துவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல் என்று வரையறுக்கப்பட்டது.

பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல்

1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர் – நுகர்வோர், சேமிப்பாளர் – முதலீட்டாளர், முதலாளி – தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் நலப் பொருளாதாரம் எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.

கிடைப்பருமை பற்றிய இயல்

பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள் (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:
"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்".
இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் எனப்படுகிறது.

புதுக்கெய்னீசிய பொருளியல்

தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.

சில முக்கிய கருதுகோள்கள்

Ballard Farmers' Market - vegetables
பொருளியலாளர்கள் ஒரு சந்தையில் எவ்வாறு மக்கள் முடிவெடுக்கின்றனர் என ஆராய்கின்றனர்.

சில பொதுவான எடுகோள்கள்:

 • அனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும்.
 • ஒரு பண்டத்தின் விலை அதற்கு ஒருவர் கொடுக்கத்தயாராக உள்ள பணமாகும்.
 • ஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது சந்தர்ப்பச்செலவு எனப்படும்.
 • ஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும்.
 • பொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் ஆடம் சிமித் கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும்.
 • சிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை / தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுகத்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம்.
 • ஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும்.
 • மொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது பணவீக்கம் எனப்படுகிறது.

மதிப்பு

மதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.

மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும்.

மதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது.

கேள்வியும் நிரம்பலும்

சந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது.

ஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் தேவை விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது.

தேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது சமநிலை விலை எனப்படுகிறது.

கிடைப்பருமை

எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (Scarcity) எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

"அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார்.

சில புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்கள்

மேற்சான்றுகள்

 1. Friedman, David D. (2002). "Crime," The Concise Encyclopedia of Economics.'.' Retrieved October 21, 2007.
 2. உலக வங்கிக் குழுமம் (2007). "Economics of Education.". Retrieved October 21, 2007.
 3. Iannaccone, Laurence R. (1998). "Introduction to the Economics of Religion", Journal of Economic Literature, 36(3), pp. 1465–1495..
 4. Nordhaus, William D. (2002). "The Economic Consequences of a War with Iraq", in War with Iraq: Costs, Consequences, and Alternatives, pp. 51–85. American Academy of Arts and Sciences. Cambridge, Massachusetts. Retrieved October 21, 2007.
 5. Arthur M. Diamond, Jr. (2008). "science, economics of", The New Palgrave Dictionary of Economics, 2nd Edition, Basingstoke and New York: Palgrave Macmillan. Pre-publication cached ccpy.
 6. • Lazear, Edward P. (2000|. "Economic Imperialism", Quarterly Journal Economics, 115(1)|, p. 99–146. Cached copy. Pre-publication copy(larger print.)
     • Becker, Gary S. (1976). The Economic Approach to Human Behavior. Links to arrow-page viewable chapter. University of Chicago Press.

மேலும் அறிய

வெளி இணைப்புக்கள்

பொதுவான தகவல்
நிறுவனங்களும் அமைப்புகளும்
கல்வி வளங்கள்
அயர்லாந்து குடியரசு

அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.

இந்திய மாநில நெடுஞ்சாலைகள்

இந்திய மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படும் எண்களால் குறிக்கப்பெறும் நெடுஞ்சாலைகள் இந்திய மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை; நடுவண் அரசிற்கோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத்தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில்பேட்டைகளும் பொருளியல் முக்கியத்துவம் மிகுந்த இடங்களும் வளர்ச்சி அடைகின்றன.

இந்து தேசியம்

இந்து தேசியம் (Hindu nationalism) எனப்படுவது இந்தியாவின் வரலாற்றுவழியான ஆன்மீக, பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் சமூக, அரசியல் சிந்தனைகளின் தொகுப்பாகும். "இந்து தேசியம்" என்பதை இந்து நாட்டுவாதம் என்பது மிக எளிய நேரடியான மொழிபெயர்ப்பென்று சிலர் கருதுகின்றனர்; இவர்கள் "இந்து அரசியல்" என்று குறிப்பிடுவதை விரும்புகின்றனர்.இந்திய வரலாற்றில் உள்நாட்டு கருத்துக்கள் இந்திய அரசியலுக்கு ஓர் தனி அடையாளத்தைக் கொடுத்ததுடன் குடிமைப்படுத்திய ஆட்சிக்கு எதிராக விளங்கியது. இத்தகைய தேசியவாதம் பிரித்தானிய ஆட்சியை ஆயுதங்கள் கொண்டும், அரசியல் வலியுறுத்தல் மூலமும் அகிம்சை வழிகளிலும் எதிர்த்துப் போராட உந்துதலாக இருந்தது. மேலும் இந்து தேசியம் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் பொருளியல் கருத்துக்களில் தாக்கம் ஏற்படுத்தியது.

ஈராக்கு

ஈராக்கு குடியரசு (அரபு மொழி: العراق , இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக்கு தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும். யூபிரட்டிசு, டைகிரிசு ஆகிய ஆறுகளுக்கு இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.

வடக்கில் துருக்கியும் கிழக்கில் ஈரானும் தென்கிழக்கில் குவைத்தும் தெற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யோர்தானும் மேற்கில் சிரியாவும் இதன் எல்லைகளாக உள்ளன. ஈராக்கிற்கு வடக்கு பாரசீக வளைகுடாவில் 58 km (36 mi) தொலைவுள்ள குறுகிய கடற்கரை உள்ளது. இங்குள்ள உம் காசர் என்ற பகுதியில்தான் உலகின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.

ஈராக்கில் பெரும்பான்மையாக அராபியர்களும் குர்து மக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர அசிரியர்கள், ஈராக்கிய துருக்கியர்கள், சபக்கியர்கள், ஆர்மீனியர்கள், மான்டியர்கள்,சர்காசியர்கள்,கவுலியாக்கள் சிறுபான்மை இனக்குழுக்களாவர். நாட்டின் 36 மில்லியன் மக்களில் 95% பேர் முஸ்லிம்களாவர்; சமயச் சிறுபான்மையினராக கிறித்தவர்கள், யர்சானியர்கள், யசீதி மக்கள் மற்றும் மான்டியர்கள் வாழ்கின்றனர்.

டைகிரிசு, யூபிரட்டீசு ஆறுகளுக்கிடையேயான நிலப்பகுதி பொதுவாக மெசொப்பொத்தேமியா எனப்படுகின்றது; கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி யெனப்பொருள்படும். இங்கு உலகின் மிகப் பழமையான நாகரிகம் தோன்றியதாகவும் எழுத்து பிறந்தவிடமாகவும் கருதப்படுகின்றது. கிமு 6ஆம் ஆயிரமாண்டு முதல் இங்கு அடுத்தடுத்து பல நாகரிகங்கள் தழைத்துள்ளன. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஈராக்கு அக்காடிய, சுமேரிய, அசிரிய, பாபிலோனியப் பேரரசுகளின் மையமாக இருந்துள்ளது. மேலும் மீடியன் பேரரசு, அகாமெனீது பேரரசு, செலுக்கட் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சாசனீது பேரரசு, உரோமைப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மங்கோலியப் பேரரசு, சஃபாவிது பேரரசு, அஃப்சரீது பேரரசு, மற்றும் உதுமானியப் பேரரசுகளின் அங்கமாக இருந்துள்ளது; உலக நாடுகள் சங்கம் ஆணைப்படி பிரித்தானியர் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டபோது ஈராக்கின் தற்கால எல்லைகளை 1920இல் உலக நாடுகள் சங்கம் வரையறுத்தது. ஈராக் பிரித்தானியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. 1921இல் முடியாட்சி நிறுவப்பட்டு 1932இல் ஈராக் இராச்சியம் விடுதலை பெற்றது. 1958ஆம் ஆண்டில் முடியாட்சி கவிழ்க்கப்பட்டு ஈராக் குடியரசு நிறுவப்பட்டது. 1968 முதல் 2003 வரை அராபிய சோசலிச பாத் கட்சியின் ஒருகட்சி ஆட்சி நிலவியது. 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் கூட்டாளிகளும் தொடுத்த படையெடுப்பினைத் தொடர்ந்து பாத் கட்சியின் சதாம் உசேன் நீக்கப்பட்டு 2005இல் பல கட்சிகள் பங்கேற்ற நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஈராக்கிலிருந்து அமெரிக்கர்கள் 2011இல் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சிரிய உள்நாட்டுப் போர் இங்கும் பரவி உள்நாட்டுக் கலவரம் தொடர்கின்றது.

ஈராக்கில் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும்.

உலகம்

உலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.

மெய்யியல் உரைகளில் உலகம்:

இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது

உள்ளிய உலகம்.சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.

உலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.

உலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.

உலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.

குரோவாசியா

குரோவாசியா (Croatia, குரோவாசியம்: Hrvatska [xř̩ʋaːtskaː], குரோவாத்ஸ்க்கா, ஹ்ரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு (Republika Hrvatska கேட்க ), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.

2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.

கொலம்பியா

கொலம்பியா அல்லது கொலொம்பியக் குடியரசு (República de Colombia) என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரிபியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர், மற்றும் பெருவும், மேற்கில் பனாமாவும் பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. தனது கடல் எல்லைகளை கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஒண்டுராசு, ஜமேக்கா, டொமினிக்கன் குடியரசு, மற்றும் எயிட்டியுடன் பகிர்ந்து கொள்கின்றது. இது ஒற்றையாட்சி, அரசியலமைப்பைச் சார்ந்த குடியரசாகும் ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.

1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். பொகோட்டாவைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. எசுப்பானியாவிடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் "கிரான் கொலம்பியா" கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி புதிய கிரெனடா குடியரசாக உருவானது. புதிய நாடு கிரெனடியக் கூட்டரசு என 1858இலும் கொலம்பிய ஐக்கிய நாடுகள் என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது. கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் பண்பாட்டு மரபுவளமிக்க மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் நிலத்தோற்றமும் வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் அந்தீசு மலைத்தொடரின் மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.

தவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் அமேசான் மழைக்காடு, அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது. இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது. சிவெட்சு (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது. கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.

கொள்வனவு ஆற்றல் சமநிலை

கொள்வனவு ஆற்றல் சமநிலை அல்லது பொருள் வாங்குதிறன் சமநிலை (purchasing power parity) என்பது இரு நாடுகளின் வாங்கும் (கொள்வனவு) திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு ஆகும். கஸ்டாவ் காசல் என்பவர் 1918ஆம் ஆண்டு ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கொள்கையின்படி இதனை வடிவமைத்தார்.

சக்ரவர்த்தி ரங்கராஜன்

முனைவர். சக்ரவர்த்தி ரங்கராஜன் (பிறப்பு 1932),பரவலாக சி. ரங்கராஜன், புகழ் பெற்ற இந்தியப் பொருளியல் வல்லுனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில ஆளுனர் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுனர். தற்போது இந்திய பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுவின் தலைவர்.

தவிர இவர் சென்னை பொருளியல் பள்ளியின் (Madras School of Economics) தலைவராகவும், சி.ஆர் ராவ் கணிதம்,புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான உயர்நிலைக் கழகத்தின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

சிறப்புப் பொருளாதார மண்டலம்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச் சலுகைகளுடன் ஓர் அரசால் ஏதுவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economiz Zone (SEZ)) ஆகும். இதைத் தமிழில் சிறப்புப் பொருண்மிய வலயம் என்றும் குறிப்பிடுவர்.

தொராண்டோ

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.

கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.

நாணயம்

நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. நாணயங்கள் அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மிதக்கும் நாணயங்கள், நிலைத்த நாணயங்கள் என்பனவாகும். தமது நாணயங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகள் அதனை மத்திய வங்கிகள் மூலமாகவோ அல்லது நிதி அமைச்சகங்கள் மூலமாகவோ செயற்படுத்துகின்றன.

நியாயமான பயன்பாடு

நியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்களை வேறொரு படைப்பாளி தனது பணியில் பயன்படுத்த நான்கு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த சொல்லாடல் "நியாயமான பயன்பாடு" முதன்மையாக ஐக்கிய அமெரிக்காவில் பழக்கத்தில் இருந்தாலும், நாளடைவில் மற்ற நாடுகளிலும் பொது சட்டமாக அவர்கள் சட்டங்களில் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்க சட்டத்தின் சாதரண மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது:

விமரிசப்பதற்காக, மறுமொழியிட,செய்தி தெரிவிக்க,வகுப்பறை கல்விக்காக,ஆராய்ச்சிக்காக, ஓர் காப்புரிமை பெற்ற ஆக்கத்தினை படிகள் எடுத்தோ,ஒலி பதிந்தோ மற்றபிற வகைகளிலோ செய்த நியாயமான பயன்பாடு காப்புரிமை மீறிய செயல் அல்ல.இத்தகைய நியாயமான பயன்பாட்டை தீர்மானிக்க கவனித்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:

நோக்கமும் வகையும் - வணிக நோக்கம் உண்டா அல்லது இலாபம் நோக்காத கல்விப்பணியா;

காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் தன்மை;

காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் முழுமையுடன் நோக்கில் எத்தனை அளவு அல்லது பெருமளவு எடுத்தாளப்பட்டுள்ளது;

செயல்பாட்டினால் காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் பொருளியல் மதிப்பில் அல்லது வாய்ப்புள்ள சந்தையில் ஏற்படும் தாக்கம்.

ஓர் ஆக்கம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பது மேற்கண்ட சோதனைகளை வெற்றிகொள்ளும் பயன்பாடு நியாயமானதாக இருப்பதற்கு தடையில்லை.

நிலம்

நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.

பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.

பெருநகர் பகுதி

பெருநகர் பகுதி (metropolitan area) என வேலைவாய்ப்பும் மக்கள்தொகையும் மிகுந்த நகரமையத்தை சுற்றி சமூக பொருளியல் காரணங்களால் பிணைந்துள்ள சிறுபயணத் தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கிய நகரப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்காரணங்களால் பெருநகர்ப் பகுதி சில நேரங்களில் பயணிகள் வட்டம் என்றும் தொழிலாளர் சந்தை பகுதி என்றும் அறியப்படுகிறது.காட்டாக, சென்னையை அண்மித்துச் சூழ்ந்துள்ள திருவள்ளூர் மாவட்ட நகரங்களும் காஞ்சிபுரம் மாவட்ட நகரங்களும் அவற்றின் பணிவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளால் பிணைக்கப்பட்டு சென்னை பெருநகரம் என அழைக்கப்படுகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ அல்லது இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது. இத்தகைய காரணிகள் ஒரு பொருளாதாரம் செயல்படும் இடத்தில் சூழல், உள்ளடக்கம் மற்றும் பொருளாதார நிலைகள் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றைக் கொடுக்கின்றன.

இன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல வரலாற்றின் கிளைகளான (பொருளாதார வரலாறு) அல்லது புவியியல் (பொருளாதாரப் புவியியல்) ஆகியன அடங்கியுள்ளன. மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள நடைமுறைக் களங்களில், உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ளவற்றில் பொறியியல்லிருந்து மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்திலிருந்து செயல்முறை அறிவியல் மற்றும் நிதி வரை விரிந்துள்ளன. அனைத்து வகையான தொழில்கள், வேலைகள், பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும். மேலும் அவை சந்தைச் சமநிலையைத் தீர்மானிக்கின்றன. பொருளாதார நடவடிக்கையில் மூன்று முக்கியத் துறைகளுள்ளன, அவையாவன: விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை ஆகும்.

ஆங்கிலச் சொற்களான "பொருளாதாரம்" மற்றும் "பொருளியல்" ஆகியவை கிரேக்க சொற்களான οἰκονόμος "குடும்பத்தை நிர்வகிப்பவர்" (οἴκος "வீடு, மற்றும் νέμω "விநியோகம் (குறிப்பாக நிர்வகிக்க)"), οἰκονομία "குடும்ப மேலாண்மை", மற்றும் οἰκονομικός "குடும்பத்தின் அல்லது இல்லத்தின்" ஆகியவற்றில் தடம் பொதிந்துள்ளது. "பொருளாதாரம்" எனும் சொல்லின் பதிவு செய்யப்பட்டப் பொருள் 1440 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டத்திற்கு சாத்தியமுடைய படைப்பில் காணப்பட்டது. அது "பொருளாதார விஷயங்களின் மேலாண்மை", எனும் பொருளில் இருந்தது. அது குறிப்பிட்டதொரு துறவியில்லத்தையாகும். பொருளாதாரம் பின்னர் அதிகளவில் "சேமிப்பு" மற்றும் "நிர்வாகம்" உள்ளிட்ட பொதுப்படையான பொருள்களில் பதிவுசெய்யப்பட்டன. தற்போது பெரும்பாலும் பயன்படும் "நாடு அல்லது ஒரு பகுதியின் பொருளாதார அமைப்பு", என்பது 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டு வரை மேம்படுத்தப்படாததாகக் காணப்படுகிறது.

பொருளியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொருளியல், புள்ளிவிபரவியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

மலேசியா

மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல் எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில் அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.

1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.

2018 மே 9 இல்நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7வது பிரதமராக 10ஆம் திகதி மே மதம் 2018 பதவியேற்றார்.

மார்க்சியம்

மார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வர்க்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும்.

மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் கருதப்படுகிறது.

மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற பொருளாதாரத்தையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.

மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்; அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும், அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர். இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.