புனைகதை

புனைகதை அல்லது புனைவு என்பது, உண்மை அல்லாத கதைகளைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவை. எனினும், புனைகதைகள் முழுமையாகவே கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. புனைகதைகளில் உண்மையான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெறுவதுண்டு. எல்லாப் புனைகதைகளும் கலைத்துவம் கொண்டவையாக இருப்பதில்லை எனினும், புனைகதை என்பது ஒரு கலை வடிவமாக அல்லது பொழுதுபோக்கு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.

புனைகதையின் வகைகள்

நடப்பியல் சார்ந்த புனைகதைகள்

நடப்பியல் சார்ந்த புனைகதைகள் கற்பனையானவை எனினும் உண்மையாக நடக்கக்கூடியவை. அவற்றில் இடம்பெறும் நிகழ்வுகள், இடங்கள், மனிதர்கள் போன்றவை உண்மையானவையாகவே இருக்கவும் கூடும். உண்மைசார்ந்த புனைகதைகள், அதனை வாசிப்பவர்கள் தாம் உண்மையான நிகழ்வுகளையே வாசிப்பதான உணர்வைப் பெற வைப்பன.

நடப்பியல் சாராத புனைகதைகள்

நடப்பியல் சாராத புனைகதைகளில் இடம்பெறும் நிகழ்வுகள், அல்லது பாத்திரங்கள் நடப்பியல் வாழ்க்கையில் இடம்பெற முடியாதவையாக இருக்கும். இவை மனித வரலாற்றின் அனுபவங்களுக்குப் புறம்பானவையாக அல்லது இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் வரம்புக்குள் அடங்காதவையாக இருக்கும். தேவதைக் கதைகள், மாய மந்திரக் கதைகள் போன்றவை இந்தப் புனைகதை வகுப்புக்குள் அடங்குபவை.

அரைப் புனைகதைகள்

இவை பெருமளவு உண்மைக் கூறுகளைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள், புனைவாக்கம் செய்யப்பட்ட உண்மைக் கதைகள், மீட்டுருவாக்கிய வரலாறுகள் என்பன புனைகதையின் இவ்வகைக்குள் அடங்குவன.

புனைகதையின் கூறுகள்

புனைகதையின் அடிப்படையான கூறுகள் எத்தனை, அவை எவை என்பன குறித்து இத் துறை சார்ந்தோரிடையே ஒருமித்த கருத்து இல்லை. எழுத்துப் பயிற்றுவிப்போர், அதிகம் விற்பனையான நூல்களை எழுதியோர் எனப் பல வகைப்பட்டோர் இது குறித்து வெவ்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

புனைகதை கதைப்பின்னல், கதைமாந்தர், பகைப்புலம் அல்லது பின்னணி என்னும் மூன்று முக்கியமான கூறுகளைக் கொண்டது என்பது மோரெல் என்பாரின் கருத்து.[1] புதினம் எழுதுவதற்கான எழுத்தாளரின் சுருக்கத்தொகுப்புக் கையேடு (Writer's Digest Handbook of Novel Writing) என்னும் நூல், கருப்பொருள், கதைமாந்தர், முரண்பாடு, பகைப்புலம், உரையாடல் போன்றவற்றைப் புனைகதையின் கூறுகளாகக் கொள்கிறது.[2] பெல் என்பவர், எழுத்தாளர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புனைகதை ஒன்றின் கதைப்பின்னலுக்குச் சேர்க்கப்பட வேண்டியவையாகக் கதைமாந்தர், பகைப்புலம், உரையாடல் என்பவற்றைக் குறிப்பிடுகிறார்.[3] கதைமாந்தர், செயல், முரண்பாடு என்பவையே புனைகதையின் முக்கியமான கூறுகள் என இவானோவிச் என்பார் கூறுகிறார்.[4] செல்கின் என்பவரோ நோக்குநிலையும் புனைகதைகளின் மிகவும் அடிப்படையான கூறுகளில் ஒன்று என்கிறார்.[5]

கருப்பொருள்

கருப்பொருள் அல்லது கதைக்கரு என்பது படைப்பாளி தனது படைப்பு மூலம் வெளிப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட விடயம் அல்லது கருத்துரு ஆகும். இது, கதை மூலம் படைப்பாளி கொடுக்க விழையும் படிப்பினையில் இருந்து வேறுபட்டது. கருப்பொருள் சுருக்கமானதாக ஆனால் பொருள் பொதிந்ததாகவோ அல்லது வாழ்க்கை பற்றிய சிக்கலான நோக்காகவோ இருக்கலாம்.[6] எடுத்துக்காட்டாக ஒற்றை எண்ணக்கருக்களான அன்பு, பொறாமை, வேலையின்மை போன்றவை புனைகதையொன்றின் கருப்பொருளாக அமையலாம், அல்லது சோசலிசம், இறைக்கொள்கை, பகுத்தறிவுவாதம் போன்ற சிக்கலான விடயங்கள் சார்ந்தவையாக இருக்கலாம். கருப்பொருளே புனைகதை முழுவதையும் ஒருமைப்படுத்திக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு புனைகதையை வாசிக்கும் ஒருவர் அதிலிருந்து அதன் கருப்பொருளை உணர்ந்து கொள்ள முடியும். வாசகர்கள் இவ்வாறான உணர்வைப் பெறுவதற்காகப் படைப்பாளி, கதைப்பின்னல், கதைமாந்தர் போன்ற பல்வேறு கதைக் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

கதைப்பின்னல்

எழுத்துத் துறையில் கதைப்பின்னல் என்பது கதைமாந்தர் செய்யும், சொல்லும், சிந்திக்கும் விடயம் ஆகும். இதுவே சூழற் செயற்பாடு (Enveloping Action), முழுநிறை செயற்பாடு (Universal Action), மூலப்படிமச் செயற்பாடு (Archetypal Action) ஆகியவற்றினால் ஒருமைத் தன்மை பெறும் முதன்மைச் செயற்பாடு. கதைப்பின்னல் புனைகதைகளின் அடிப்படையான கூறுகளில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இது கதையின் நிகழ்வுகள், செயற்பாடுகள் ஆகியவற்றின் ஒழுங்கமைவைக் குறிக்கும். நுண்நிலை மட்டத்தில் கதைப்பின்னல் செயற்பாடுகளையும் எதிர்ச் செயற்பாடுகளையும் கொண்டது. இவற்றைத் தூண்டல், விளைவு என்றும் அழைப்பது உண்டு. பேரியல் மட்டத்தில் நோக்கும்போது, கதைப்பின்னலுக்கு ஒரு தொடக்கம், ஒரு இடைநிலை, ஒரு முடிவு என்பன இருக்கும். கதைப்பின்னலை ஏறி இறங்கும் கோட்டுப் பகுதிகளால் ஆன வில் வடிவக் கோட்டினால் குறிப்பது உண்டு. ஏறி இறங்கும் கோட்டுப் பகுதிகள் செயற்பாடுகளின் ஏற்ற இறக்கத்தைக் குறிப்பன. கதைப்பின்னலுக்கு ஒரு இடை மட்டத்திலான அமைப்பும் உண்டு. இது காட்சி, தொகுப்பு என்னும் கூறுகளால் ஆனது. காட்சி என்பது கதை நிகழ்வின் ஒரு அலகு. இதிலேயே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான காட்சித் தொடர்களின் பின்விளைவாக உணர்ச்சிவயமான எதிர்வினையைக் கொண்ட தொகுப்பு இருக்கும். கதைப்பின்னல் இல்லையேல் கதை இல்லை.

கதைமாந்தர்

கதைமாந்தர் அல்லது கதாபாத்திரம் புனைகதை ஒன்றின் அடிப்படையான கூறுகளில் ஒன்று. கதைமாந்தர் கதை ஓட்டத்தில் பங்கு வகிப்பவர். பெரும்பாலும் இது மனிதர்களாக இருக்கும். சில சமயங்களில் மனிதரல்லாத பிறவும் இத்தகைய பங்கு வகிப்பது உண்டு. கதையில் வரும் கதை மாந்தர்களுக்குரிய பண்புகளையும் செயற்பாடுகளையும் கதைமாந்தப் படைப்பு மூலம் படைப்பாளி உருவாக்குகிறார். கதை மாந்தர்கள் மூலமே கதை நகர்கிறது. கதைமாந்தப் படைப்பாக்கத்தின்போது கதைமாந்தருக்கான பண்புகளைக் கொடுக்கும் படைப்பாளிகள், பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். புறத்தோற்றம், பழக்க வழக்கங்கள், பிற பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு, உரையாடல், செயற்பாடுகள், பெயர் ஆகியவற்றை[7] உரிய முறையில் கையாள்வதன் மூலம் குறிப்பிட்ட பண்புகளை அவர்கள் கதை மாந்தர்களுக்கு வழங்குகின்றனர்.

புனைகதைகளில் காணும் கதைமாந்தரைப் பல வகையான பகுப்புக்களுள் அடக்குவது வழக்கம். குறித்த கதையொன்றில் கதைமாந்தர் வகிக்கும் பங்கை அடிப்படையாகக் கொண்டு கதை மாந்தரைப் பிரிப்பது ஒரு முறை. இதன்படி பின்வரும் கதைமாந்த வகைகள் உள்ளன.

 • முதன்மைக் கதைமாந்தர்
 • எதிர்க் கதைமாந்தர்
 • இன்றியமையாக் கதைமாந்தர்
 • துணைக் கதைமாந்தர்
 • சிறு கதைமாந்தர்

கதையொன்றில் மிக முக்கியமான கதைமாந்தர், "முதன்மைக் கதைமாந்தர்" ஆவார். இது கதையின் தலைவன் அல்லது தலைவியாக இருக்கலாம். பொதுவாக இக்கதைமாந்தரை முதன்மைப்படுத்தி அவர்களைச் சுற்றியே கதை நகரும். "எதிர்க் கதைமாந்தர்" முதன்மைக் கதைமாந்தருக்கு எதிர் நிலையில் உள்ளவர். பொதுவாக எதிர்நிலைப் பண்புகள் இருக்கும். முதன்மைக் கதைமாந்தருக்கும் எதிர்க் கதைமாந்தருக்கும் இடையிலான முரண்பாடு கதையை நகர்த்தும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும். சில கதைமாந்தர் கதையின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். இக் கதைமாந்தர் இல்லாமல் கதையை நகர்த்திச் செல்வது முடியாது. இத்தகைய கதைமாந்தரே "இன்றியமையாக் கதைமாந்தர்". "துணைக் கதைமாந்தர்" என்போர் கதைப் போக்குக்குத் துணை நிற்பவர்கள் எனினும் இவர்களைச் சுற்றிக் கதை நிகழ்வதில்லை. "சிறு கதைமாந்தர்" கதையில் எப்போதாவது வருபவர்கள். இவர்கள் அதிக முக்கியத்துவம் இல்லாத கதைமாந்தர்.

கதைமாந்தரை இன்னொரு முறையில், "வளர்ச்சி பெறாக் கதைமாந்தர்", "வளர்ச்சி பெறும் கதைமாந்தர்" என இரு வகையாகவும் பிரிப்பது உண்டு. வளர்ச்சி பெறாக் கதை மாந்தரை "ஒருநிலை மாந்தர்" என்றும், வளர்ச்சி பெறும் கதைமாந்தரை "முழுநிலை மாந்தர்" என்றும் குறிப்பிடுவது உண்டு. இங்கே முதல் வகையினர் கதை ஓட்டத்துடன் வளர்ச்சி அடைவதில்லை. அக்கதைமாந்தரின் பண்புகள் கதை முழுவதும் மாறாது ஒரே நிலையில் இருக்கும். அடுத்த வகைக் கதைமாந்தர் கதை ஓட்டத்தோடு வளர்ச்சி அடைவர். அவர்களின் பண்புகள் கதைக்குப் பொருத்தமான விதத்தில் மாறிச் செல்லும்.

பகைப்புலம்

பகைப்புலம் அல்லது பின்னணி ஒரு புனைகதையின் அடிப்படையான கூறு. இது கதை நிகழும் இடம், காலம் போன்றவற்றைக் குறிக்கும். சில சமயங்களில், பகைப்புலமும் ஒரு கதைமாந்தராக உருவாவதும் உண்டு.[8] கதையின் பகைப்புலத்தைக் கதை நிகழ்விடம், கதை நிகழும் காலம், சமூகச் சூழல் என்னும் பிரிவுகளாகப் பார்க்கலாம்.

ஒரு கதையில் கதை நிகழ்விடம் அக் கதையின் கதைமாந்தர் செயற்படும் இடமாகும். இது ஒரே இடமாகவோ அல்லது பல்வேறு இடங்களாகவோ இருக்கக்கூடும். நிகழ்விடம் ஊர், நகரம், நாடு எனப் பலவாறாக வேறுபடக்கூடும். சில புனைகதைகள் ஒரு வீட்டிலோ அல்லது ஒரு கட்டிடத்திலோ கூட நடந்து முடிந்துவிடக்கூடும். ஒரு பேருந்து, ஒரு கப்பல் அல்லது ஒரு வானூர்தியில் நிகழ்ந்து விடுகின்ற புனைகதைகளையும் காண முடியும். அதே நேரம், பல்வேறு நாடுகளில் நிகழும் கதைகளும் உண்டு.

கதையின் காலம் என்பது கதையின் செயற்பாடுகள் நிகழும் காலம் ஆகும். இது ஒரு கால இடைவெளியையும், கால கட்டத்தையும் குறிக்கலாம். கதையின் செயற்பாடுகள் இடம்பெறும் மிக முந்திய காலத்துக்கும், மிகப் பிந்திய காலத்துக்கும் இடைப்பட்டதே கால இடைவெளி. ஒரு நாட் கால இடைவெளியில் நிகழ்ந்து முடிந்துவிடும் கதைகளும் பல பத்தாண்டுகள் நிகழும் கதைகளும் உள்ளன. காலகட்டங்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் கதை நிகழ்வதாக இருக்கக்கூடும். சமகாலத்தில் நிகழும் கதைகளும், வரலாற்றின் ஒரு கட்டத்தில் இறந்த காலத்தில் நிகழும் கதைகளும், சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ்வதாகக் கற்பனை செய்யப்படும் கதைகளும் உள்ளன. தற்காலத்தில் பரவலாக எழுதப்படும் சமூகக் கதைகளும் பிறவகைக் கதைகளும் தற்காலப் பின்னணியில் எழுதப்படுபவை. வரலாற்றுப் புனைகதைகள், 50 -100 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையிலான ஏதாவதொரு காலகாட்டப் பகைப்புலத்தில் எழுதப்படுபவை.

வெவ்வேறு காலகட்டங்களை மையமாக வைத்து எழுதப்படும் புனைகதைகள் அவ்வக் காலங்களின் சமூகப் பகைப்புலங்களின் இயல்புகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன. ஆனாலும் ஒரே கால கட்டத்தில் நிகழும் கதைகளும் வெவ்வேறான சமூகப் பகைப்புலங்களில் நிகழ்வது சாத்தியம். ஒடுக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல புனைகதைகள் சாதிப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட தற்காலத்துச் சமூகப் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. இது போல உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகள் பல வகுப்பு முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அரசியல் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. தற்காலத்தில் நடுத்தர வகுப்பினரின் சமூகச் சூழலில் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன. புலம்பெயர் தமிழர்களை மையமாக வைத்து எழுதப்படும் பல கதைகள் இப்போது புதிய சமூகப் பகைப்புலங்களில் எழுதப்படுகின்றன. இலங்கையில் இடம்பெற்ற இனமுரண்பாட்டு நிகழ்வுகளும், அதன் விளைவுகளும் புதிய பகைப்புலங்களுடனான புனைகதைகளின் உருவாக்கத்திற்குக் கரணமாக உள்ளன.

உரையாடல்

உரையாடலும், புனைகதைகளின் முக்கியமான கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது. கதைமாந்தரிடையே நிகழும் பேச்சு உரையாடல் எனப்படும். கதையின் பல்வேறு அம்சங்களை வாசிப்பவர்களுக்கு உணர்த்துவதில் உரையாடல் பெரிதும் பயன்படுகிறது. கதையை விரும்பியபடி நகர்த்திச் செல்வதில் உரையாடலின் பங்கு முக்கியமானது. கதை மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதற்கும்; பகைப்புலத் தன்மைகளை உணர்த்துவதற்கும்; அந்தந்த நேரத்தில் கதைமாந்தரின் மனநிலை, உணர்வுகள், நோக்கங்கள் போன்றவற்றை வாசிப்பவர்கள் உணரச் செய்வதற்கும் உரையாடல்களைப் படைப்பாளிகள் பயன்படுத்துவர். ஒரு காலத்தில் எழுத்து மொழி நடையிலேயே உரையாடல்கள் எழுதப்பட்டன. தற்காலத்தில் உரையாடல்கள் கதைமாந்தரின் பகைப்புலத் தன்மைகளைப் பொறுத்துப் பல்வேறு பேச்சு வழக்கு மொழிகளில் எழுதப்படுகின்றன. இவ்வேளைகளில் மொழித்தூய்மையையும் படைப்பாளிகள் பலர் கருத்தில் எடுக்காது பேச்சு வழக்கில் காணும் பிற மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துகின்றனர்.

புனைகதைகளில் வரும் உரைகள் எல்லாமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே நிகழும் உரையாடல்களாக இருப்பதில்லை. சில வேளைகளில் படைப்பாளியே நேரடியாகக் கதையைக் கூறுவார். இது "கதை சொல்லல்" எனப்படும். கதையின் நிகழ்விடம் அல்லது ஒரு கதைமாந்தரைப் பற்றி வாசகர்களுக்குச் சொல்வதற்காக "வருணனை"களும் உரைப்பகுதியில் இருப்பதுண்டு. இவ்வருணனையைப் படைப்பாளி நேரடியாகவோ அல்லது கதைமாந்தர்களின் வாய்வழியாகவோ செய்வது உண்டு. சில கதைகளில் கதையின் சில அம்சங்களைப் படைப்பாளி தானே விளக்கும் வழக்கமும் உள்ளது. இது "விளக்கவுரை" எனப்படும். சில இடங்களில் கதைமாந்தர் தமக்குத்தாமே பேசிக்கொள்வதன் மூலம், கதையை நகர்த்த உதவுவது உண்டு. இது "தனி மொழி" எனப்படும்.

முரண்பாடு

முரண்பாடு என்பது புனைகதை இலக்கியங்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்று. "முரண்பாடு இல்லையேல் கதை இல்லை" என்று புரூக்சு, வாரென் என்னும் இருவரும் தாமெழுதிய "புனைகதையை விளங்கிக் கொள்ளல்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளனர். சிக்கல் வாய்ந்த புனைகதைகளில் முரண்பாட்டைப் பிரித்துப் பார்ப்பது வாசிப்பவர்களுக்கு எளிதாக இராது. எனினும் முரண்பாடு முதன்மைக் கதைமாந்தரையும், எதிர்க் கதைமாந்தரையும் மையமாகக்கொண்டு அமையும். பொதுவாக இம்முரண்பாடு நன்மைக்கும் தீமைக்கும் இடையானதாக இருக்கும்.

புனைகதைகளில் காணும் முரண்பாடுகளில் அடிப்படையான ஐந்து வகைகள் உள்ளன. இவை,

 • ஒருவருக்குத் தன்னுடனான முரண்பாடு,
 • ஒருவருக்கும் இன்னொருவருக்கும் உள்ள முரண்பாடு,
 • ஒருவருக்கும் சமூகத்துக்கும் இடையிலான முரண்பாடு,
 • ஒருவருக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு,
 • ஒருவருக்கும் மீவியற்கைச் சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பன.

முற்காலத்தில் மனிதனுக்கும் விதிக்கும் இடையிலான முரண்பாடுகளும் புனைகதைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. தற்காலத்தில் மனிதனுக்கும் இயந்திரத்துக்கும், அல்லது தொழில்நுட்பத்துக்கும் இடையிலான முரண்பாடும் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக உள்ளது.

புனைகதைப் பகுப்புக்கள்

புனைகதைகள் அளவின் அடிப்படையில் பல்வேறு பகுப்புகளுக்குள் அடக்கப்படுகின்றன. எனினும், வெவ்வேறு பகுப்புகளுக்குள் அடங்கும் புனைகதைகளின் நீளம் குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை இதனால் பல வேளைகளில் அடுத்தடுத்த வகைகளுக்கு இடையிலான எல்லைகள் தெளிவற்றவையாக உள்ளன. இவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் அளவு மட்டும் அல்லாது, வேறு இயல்புகளின் அடிப்படையிலும் அமைகின்றன. நீள ஒப்பீட்டின் அடிப்படையில் இவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

குறிப்புகள்

 1. (Morrell 2006, p. 151)
 2. (Writer's Digest Handbook of Novel Writing 1992, p. 160)
 3. (Bell 2004, p. 16)
 4. (Evanovich 2006, p. 83)
 5. (Selgin 2007, p. 41)
 6. Literary Terms and Definitions: T, "Theme". 13 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது
 7. மணி, ச., புதினம் (பாடம் P2032), 3.3 பாத்திரப் படைப்பு, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பாடங்கள். 13 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது.
 8. (Rozelle 2005, p. 2)

இவற்றையும் பார்க்கவும்

 • புனைகதை வரலாறு
 • புனைவுக் கதைமாந்தர்
 • புனைவில் ஆக்கம்

வெளியிணைப்புக்கள்

இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)

இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும். இறுதி இராவுணவை சில கிறித்தவர்கள் இராப்பந்தி அல்லது இராபோஜனம் என்றும் கூறுவதுண்டு.

லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (Beatrice d'Este) என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.

யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சிபற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது.

இழான் இழாக்கு உரூசோ

இழான் இழாக்கு உரூசோ (ஜான் ஜாக் ரூசோ, Jean-Jacques Rousseau, சூன் 28, 1712 – சூலை 2, 1778) ஒரு முக்கியமான பிரான்சிய மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரான்சியப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. குற்ற ஏற்புரைகள் (Confessions), தனித்த பயணியின் கனவுகள் (Reveries of a Solitary Walker) போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் தன்வரலாற்று இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் அகநிலைநோக்கை (subjectivity) ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை எகல், பிராய்டு போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது ஜூலி அல்லது புதிய ஏலவீஸ் (Julie, ou la nouvelle Héloïse) என்னும் புதினம் 18 ஆம் நூற்றாண்டின் அதிகம் விற்பனையான புனைகதை இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், புனைவியலின் (romanticism) வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது. ஒரு கோட்பாட்டாளனாகவும், இசையமைப்பாளனாகவும், இசைத்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் 1794 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டது.

எலைசியம்

எலைசியம் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை நெயில் ப்லோம்கம்ப் இயக்க, மேட் டாமன், ஜோடி ஃபோஸ்டர், ஷர்ல்டோ காப்லேயால், அலைஸ் பிராகா, டியாகோ லூனா, வாக்னர் மெளரா, வில்லியம் ஃபிச்னெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) (ஜூலை 21, 1899 – ஜூலை 2, 1961) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவரது தனித்துவமான எழுத்துநடை, மிகக்குறைந்த சொற்பிரயோகக்காரர், 20-ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிந்து 1950-களின் மத்திவரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்குக் காரணம். அவரது பெரும்பாலான எழுத்துகள் அமெரிக்க இலக்கியப்பரப்பில் செவ்விலக்கிய தகுதி பெற்றவையாகும். ஏழு புதினங்களும்(நாவல்கள்), ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு புனைவற்ற புத்தகங்ளையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே பதிப்பித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்குப் பிறகு மூனறு புதினங்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டன. கடலும் கிழவனும் (The Old Man and the Sea) நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டன. இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் 1961 இல் தற்கொலை செய்து கொண்டார்.

கில்கமெஷ் காப்பியம்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சூலை 7

சூலை 7 (July 7) கிரிகோரியன் ஆண்டின் 188 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 189 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 177 நாட்கள் உள்ளன.

ஜோனதன் ஸ்விப்ட்

ஜோனத்தன் ஸ்விப்ட் (Jonathan Swift, 30 நவம்பர், 1667 – 19 அக்டோபர், 1745) ஓர் ஆங்கில அயர்லாந்து எழுத்தாளரும், கவிஞரும், விகடகவியும், கட்டுரையாளரும், அரசியல்வாதியுமாவார். சிறிது காலம் டப்லினில் செயிண்ட் பாட்ரிக் தேவாலயத்தின் பாதிரியாராகப் பணியாற்றி பின் அதன் அதிகாரியுமானார். இவர் "கலிவரின் பயணங்கள்" என்ற உலகப் புகழ்பெற்ற புனைகதை மூலம் அறியப்படுகிறவர் ஆவார். புத்தகங்களின் யுத்தம், டிராப்பியரின் கடிதங்கள் போன்றவை இவரது புகழ்பெற்ற பிற படைப்புகள் ஆகும்.

டைவர்ஜென்ட்

டிவேர்கேன்ட் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு அறிவியல் புனைகதை மற்றும் சாகசத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் டிவேர்கேன்ட் நாவலை அடிப்படையாக வைத்து நெயில் பர்கர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் சைலீன் வூட்லி, தியோ ஜேம்ஸ், ஸோ கிராவிட்ஜ், அன்செல் எல்கோர்ட், மேக்கி Q, ஜெய் கர்ட்னி, மைல்ஸ் டெல்லர் மற்றும் கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார்கள்.

டோனி மாரிசன்

தோனி மாரிசன் (ரொனி மொறிசன், Toni Morrison, பெப்ரவரி 18, 1931 – ஆகத்து 5, 2019) 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

தி அவேஞ்சர்ஸ்

தி அவேஞ்சர்ஸ் (The Avengers (2012 film) இது 2012ம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்கா நாட்டு அதி நாயகர்கள் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் மூலம் மே 4, 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

இது மாவல் திரைப் பிரபஞ்சத்தின் ஆறாவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜோஸ் வேடன் என்பவர் எழுதி மற்றும் இயக்க, ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஜெரமி ரெனர் ஆகியோர் அவேஞ்சர்ஸ் என்ற குழுவில் என்ற முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் டாம் ஹிடில்ஸ்டன், கிளார்க் க்ரேக், கோபி ஸ்மல்டேர்ஸ், ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்டின் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் மார்வெல் வரைகதையில் வெளியான அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர் போன்ற சூப்பர் ஹீரோ படங்களின் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றினைந்து எஸ்.எச்.ஐ.எல்.டி. (S.H.I.L.D) எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ப்யூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019ஆம் ஆண்டும் வெளியானது.

பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)

பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.

இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது.

பிரான்ஸ் காஃப்கா

பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka, 3 ஜூலை 1883 – 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அக்காலத்து ஆஸ்திரியா-ஹங்கேரியில் இருந்ததும் இப்போது செக் குடியரசில் உள்ளதுமான பிராக் நகரில், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தனித்துவமான ஆக்கங்களுட் பல முற்றுப்பெறாதவை என்பதுடன், பெரும்பாலானவை அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது ஆக்கங்கள் மேல்நாட்டு இலக்கியத்தில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தியவற்றுள் அடங்குவனவாகும்.

உருமாற்றம் (The Metamorphosis - 1915) போன்ற இவரது கதைகளும், வழக்கு (The Trial - 1925), கோட்டை (The Castle - 1926) போன்ற புதினங்களும் பயங்கரமான அதிகாரம் சார்ந்த உலகில் கவலைகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவையாகும்.

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) என்பது ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட், பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவர் எழுதிய, கணிதவியலின் அடித்தளங்கள் பற்றிய, முத்தொகுதிகள் கொண்ட, 1910-1913 ஆண்டுகளில் வெளிவந்த பெருநூல். இது கணிதவியலின் உண்மைகள் யாவற்றையும் தெளிவாக வரையறை செய்த மெய்கோள்கள் மற்றும் முடிவு தேரும் முறைகளை குறியீடு ஏரண முறைகளின் படி வருவிக்க முனைந்ததாகும்.

காட்லாபு ஃவிரெகெ (Gottlob Frege) செய்த ஏரணம் பற்றிய ஆய்வால் உந்தித் தூண்டப்பட்ட ஆய்வுநூல் பிரின்சிப்பியா. இந்த ஆய்வின் பயனாக சில முரண் உண்மைகளை (paradoxes) ரசல் கண்டுபிடித்தார். இவ்வகையான முரண்கூற்றுகள் தோன்றா வண்ணம் இருக்குமாறு பிரின்சிப்பியாவை வளர்த்தெடுத்தார். இதற்காக, கணக்கோட்பாடுகளில் வகையினக் கொள்கையை (Type theory) விரிவாக வளர்த்தெடுத்தார்.

அரிஸ்டாட்டிலின் ஆர்கானன் (Organon) என்னும் நூலுக்குப் பின், கணிதவியல் ஏரணம், மெய்யியல் துறைகளில் எழுந்த மிகமுதன்மையான, புத்தூட்டம் தரும் ஆக்கம் பிரின்சிப்பியா என்று துறையறிஞர்களால் போற்றப்படுகின்றது. மாடர்ன் லைப்ரரியின் (Modern Library) கணிப்பில் 20ஆம் நூற்றாண்டில் புனைகதை வகை அல்லாத நூல்களில் இந்நூல் 23 ஆவது சிறந்த நூலாக இருக்கின்றது.

புதின எழுத்தாளர்

நாவலாசிரியர் என்பவர் பெரும்பாலும் புதினங்களை ஆக்கும் எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை, புனைவிலி போன்ற பிறவகை ஆக்கங்களையும் படைக்கக்கூடும்.. சிலர் தொழில்முறை நாவலாசிரியர்களாக உள்ளனர்; இவர்களது வாழ்வாதாரமாக அவர்கள் எழுதும் புதினங்கள் அமைகின்றன. மற்றும் சிலர் இதனை துணை ஆதாரமாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டுள்ளனர். தங்களது முதல் புதினத்தை அச்சிடுவதற்கு பெரும்பாலோர் மிகவும் போராட வேண்டியுள்ளது. ஆனால் ஒருமுறை அச்சேறி அங்கீகரிக்கப்பட்டால் தொடர்ந்து தமது படைப்புக்களை அச்சேற்றுவது எளிதாக உள்ளது. வெகுசிலர் குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளாக ஏற்கப்பட்டு பணமும் புகழும் ஈட்டுகின்றனர். வாரப் பத்திரிகைகளிலும் மாதப் பத்திரிகைகளிலும் தங்கள் புதினத்தை அச்சிடுவோரும் உள்ளனர்.

மங்கா

மங்கா (kanji: 漫画; listen; ஆங்கிலம் /ˈmɑːŋɡə/ அல்லது /ˈmæŋɡə/) வரைகதை (comics) என்பதன் யப்ப்பானிய சொல். இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா யப்பானிய உகியொ-இ பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு யப்ப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யப்ப்பானில், அனைத்து வயதிநரும் மங்காவைப் படிக்க விரும்புவர். பல வகையிலான படைப்புகளை இந்த ஊடகம் உள்ளடக்கும்: மற்றவைகளின் மத்தியில், அதிரடி சாகசங்கள்,வணிகம் மற்றும் வர்த்தகம், நகைச்சுவை, துப்பறிவு, வரலாற்று நாடகம், திகில், மர்மம், காதல், அறிவியல் புனைகதை, பாலியல், விளையாட்டு மற்றும் தீர்மானமின்மை. பல மங்காக்கள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1950களில் இருந்து, மங்கா யப்பணிய பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

மங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகின்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும்.

ஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன.

மா. ராமலிங்கம்

மா.இராமலிங்கம் (பி. 5. 10. 1939 ) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 1981ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். எழில்முதல்வன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.

வாள்

வாள் ( pronunciation) (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும். இதன் துல்லியமான வரையறை கருதப்படும் காலத்தையும் வட்டாரத்தையும் பொறுத்தமைகிறது. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும். பெரும்பாலும் வாட்கள் இந்த இருவகைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. வாள் போரின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே மாற்றங்கள் பெரிதும் இன்றி இருந்துள்ளன. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முதன்மையாக வாள் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதுமான வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றியலாக, வாள் வெண்கலக் காலத்தில் குத்துவாளில் இருந்து தோன்றியது; மிகப் பழைய வெண்கலக்கால வாள் கி.மு 1600 அளவில் கிடைத்துள்ளது. பிந்தைய இரும்புக் கால வாள் மிகவும் குறுகியதாகவும் பிடியில் குறுக்குக் காப்பு இல்லாமல் அமைந்தது.

வாளைப் பயன்படுத்தும் தேர்ச்சி வாள்போர்க் கலை எனப்பட்டது. தொடக்க புத்தியல் காலத்தில் மேலைநாட்டு வாள் வடிவமைப்பு குத்துவாள், போர்வாள் என இரண்டு வடிவங்களாகப் பிரிந்தது.

உடைவாள் போன்ற குத்தும் கத்திகள் பின் குறுவாளாக மாறின. இவை இலக்கை வேகமாகவும் ஆழமான குத்துக்காயம் ஏற்படும்படியும் வடிவமைக்கப்பட்டன. இவற்றின் நேராக நீண்ட மெல்லிய சமனிலை வடிவமைப்பு இரட்டையர் போரில் அச்சமூட்டுவதக இருந்தது. ஆனால் வெட்டுவதிலும் தறிப்பதிலும் மிக பயனற்றதாக இருந்தது. குறிபார்த்து மேற்கொள்ளுக் குத்து போரை நொடிகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

பட்டா(ள)க் கத்தியும் அகல்குறுவாளும் போன்ற வளைந்த அலகுகள் கொண்ட வாட்கள் போரிடுவதற்காக மிகவும் கூடுதலான எடையுடன் வடிவமைக்கப்பட்டன. இவை பல பகைவரைக் குதிரை மேலிருந்து வெட்டவும் தலைகளைச் சீவவும் ஏற்றவை. பட்டளக் கத்தியின் வளைந்த அலகின் முனைப்புற எடை போர்க்களத்தில் சமனிலையோடு அச்சமூட்டும் போர்நிகழ்த்த வழிவகுத்தன. இவை கூரிய முனையும் இருபுற வெட்டுவிளிம்பும் கொண்டவை. இவை காலாட்படையில் ஒவ்வொரு வீரராக்க் குடலை ஊடுறுவிச் சாய்க்க பொருத்தமாக அமைந்தன. எனவே இவை 20 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்பாட்டில் விளங்கின. அமெரிக்க நாவாய்ப்படை இரண்டாம் உலகப்போர் வரை தன் படைக் கொட்டடையில் இவ்வகை அகல்குறு வாள்களைக் குவித்து வைத்திருந்தது. பின்னர் அவை காடுதிருத்த வழங்கப்பட்டன.

ஐரோப்பாவுக்கு வெளியே வாள்களாக நடுவண்கிழக்குப் பகுதியின் சுசிமிதார் ச்னாவின் தாவோ யப்பானியக் கடானா அகியவை அமைகின்றன. சீனாவின் யியான் இருகூர் விளிம்பு வாளாகும். இது ஐரோப்பிய இரும்ப்புக் கால இருகூர்விளிம்பு கொண்ட வாளாகும்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.