பாரசீகப் பேரரசு

பாரசீகப் பேரரசு என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரானியச் சமவெளிப் பகுதிகளுடன் சேர்த்து, மேற்காசியா, நடு ஆசியா மற்றும் காக்கேசியப் பகுதிகளை ஆண்ட, தொடர்ச்சியான பல ஈரானியப் பேரரசுகளைக் குறிக்கும். பாரசீகப் பேரரசுகளில் மிகவும் பெரிதாகப் பரந்திருந்தது, டேரியஸ், செர்க்செஸ் ஆகிய பேரரசர்களின் கீழிருந்த அக்கீமெனிட் பேரரசு (கி.மு 550–330) ஆகும். இப்பேரரசு பழங்காலக் கிரேக்க அரசுகளின் எதிரியாக விளங்கியது. இது ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.

இப் பேரரசு பேரரசன் சிரியசினால் நிறுவப்பட்டது. இவன் மெடெஸ் பேரரசைக் கைப்பற்றியதுடன், பபிலோனியர், அசிரியர், போனீசியர், லிடியர், கம்பிசெஸ் போன்றோரின் பகுதிகளையும் கையகப்படுத்தினான். சிரியசின் மகனும் தந்தை வழியைப் பின்பற்றி எகிப்தைக் கைப்பற்றினான். பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது. எனினும், ஈரானிய மரபினரான பார்த்தியர், செசெனிட்டுகள் காலத்திலும், ஈரானிய முஸ்லிம்களான சாபாவிட்டுகள் காலத்திலும் மீண்டும் எழுச்சியுற்றது.[1]

அகன்ற ஈரானில் மார்ச் 1935 க்கு முன்னிருந்த அரசுகள் அனைத்தையுமே கூட்டாக பாரசீகப் பேரரசு என மேனாட்டு வரலாற்றாளர் குறிப்பிட்டனர். பெரும்பாலான பாரசீகப் பேரசுகள் தத்தம் காலத்தில் பிரதேச வல்லரசுகளாகவோ அல்லது அனைத்துலக வல்லரசுகளாகவோ இருந்துள்ளன.

Persia-Tomb-of-Cyrus-the-Great-Passargad-530BC
பாரசீகப் பேரரசர் சைரசின் நினைவிடம்
Ctesiphon 01
சசானியர்களின் அரண்மனை, கிபி 3ம் நூற்றாண்டு
Shah Abbas I engraving by Dominicus Custos
சபாவித்து வம்ச மன்னர் முதலாம் ஷா அப்பாஸ்

பாரசீகத்தை ஆண்ட பாரசீக வம்சங்கள்

Safavid dynasty (greatest extent)
பாரசீகத்தின் முதலாம் ஷா அப்பாஸ் காலத்திய சபாவித்து பேரரசு
Afsharid dynasty (greatest extent)
பாரசீகத்தின் அப்சரித்து வம்சத்தின் நாதிர் ஷா காலத்திய பாரசீகப் பேரரசு

மேற்கோள்கள்

  1. The Persian Empire

வெளி இணைப்புகள்

அகாமனிசியப் பேரரசு

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya, ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது. இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.

இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.

மேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

அக்சும் பேரரசு

அக்சும் பேரரசு (Kingdom of Aksum) வடக்கு எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா பகுதிகளை, கிபி 100 முதல் 940 வரை ஆண்ட அக்சும் அரச மரபினர் ஆவார்.வலிமை வாய்ந்த அக்சும் பேரரசர்கள் தங்களை மன்னர்களின் மன்னர் என அழைத்துக் கொண்டனர்.அக்சும் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்த போது தற்கால எரித்திரியா, சீபூத்தீ, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், எகிப்து மற்றும் யேமன் வரை அக்சும் பேரரசு பரவியிருந்தது. இதன் தலைநகரான அக்சும் நகரம் தற்கால எத்தியோப்பியாவில் உள்ளது. அக்சும் பேரரசில் முதலில் பல கடவுள் வழிபாடு இருந்தது. பின்னர் யூதம் மற்றும் கிறித்தவதமும் பரவியது.

ரோமப் பேரரசுக்கும், பண்டைய இந்தியாவிற்கும் இடையே அக்சும் பேரரசு முக்கிய வணிக மையமாக விளங்கியது. நாடுகளுக்கு இடையேயான வணிகத்திற்கு உதவியாக தேவையான தங்க நாணயங்களை அக்சும் இராச்சியத்தினர் வெளியிட்டனர்.

கிபி 330-இல், அக்சும் பேரரசர் எசுன்னா கிபி 330-இல் தற்கால சூடானில் இருந்த குஷ் இராச்சியத்தை கைப்பற்றியதன் அடையாளமாக, கற்பலகையில் தன் வெற்றி குறித்து கல்வெட்டு குறிப்பு ஒன்றை நிறுவியுள்ளார்.மேலும் அக்சும் ஆட்சியாளர்கள் அரேபியத் தீபகற்ப பகுதிகளின் அரசியலில் தொடர்ந்து தலையிட்டதுடன், சவூதி அரேபியாயின் ஹெஜாஸ் பகுதியை ஆண்ட ஹிமைரைட்டுகளின் இராச்சியத்தைக் கைப்பற்றி ஆட்சிப்பரப்பை விரிவுப்படுத்தினர்.

மானிசாயிசம் சமயத்தை நிறுவிய இறைத்தூதர் மானி (இறப்பு:கிபி 274) தனது குறிப்பில், தம்காலத்தில் சிறப்புடன் விளங்கிய நான்கு பேரரசுகளில் அக்சும் பேரரசும் ஒன்று எனக்குறித்துள்ளார். மற்றைய பேரரசுகள் பாரசீகப் பேரரசு, உரோம் மற்றும் சீனப் பேரரசு ஆகும்.எதியோப்பாவில் கிறித்துவம் பரவுவதற்கு முன்னர், அக்சும் இராச்சியத்தினர் சமய வழிப்பாட்டிற்கு பல உருவச்சிலைகளை நிறுவியிருந்தனர். அவைகளில் ஒன்று 90 அடி உயரச் சிலையாகும். அக்சும் ஆட்சியாளர் எசுன்னாவின் (320–360) ஆட்சிக்காலத்தில், கிபி 320-இல் கிறித்தவம் அரச சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிபி 4-ஆம் நூற்றாண்டு முதல் அக்சும் இராச்சியம், எத்தியோப்பியா என அழைக்கப்பட்டது. கிபி 622-இல் முகமது நபித் தோழர்களை, குறைசி மக்கள் சவூதி அரேபியாவின் ஹெஜாஸ் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது, அக்சும் இராச்சியத்தில் அடைக்கலம் அடைந்தனர்.

இறைவன் வழங்கிய உடன்படிக்கைப் பெட்டி தமது நாட்டிற்குரியது என்றும், சிபா அரசி தமது நாட்டு அரசி என்று அக்சும் இராச்சியத்தினர் உரிமை கோருகிறார்கள்.

கிபி 520-இல் அக்சும் பேரரசர் கலேப் யேமன் மீது படையெடுத்து, கிறித்துவர்களை பழிவாங்கிக் கொண்டிருந்த யூதர்களின் ஹிமையாரைட்டு இராச்சிய மன்னர் தூ நுவாசை வென்றார். 50 ஆண்டுகள் அரேபிய இராச்சியம் அக்சும் இராச்சியத்தின் பாதுகாப்பில் இருந்தது.

ஆசியாவில் கிறித்தவம்

ஆசியாவில் கிறித்தவம் (Christianity in Asia) என்பது இயேசு கிறித்துவைக் கடவுளின் மகனாக ஏற்று வழிபடுகின்ற கிறித்தவ சமயம் ஆசியக் கண்டத்தில், அதுவும் குறிப்பாக மேற்கு ஆசியாவில் தோன்றி, இயேசுவின் சீடர்களின் பணி வழியாக ஆசியா முழுவதும் பரவி நிலைபெற்றதைக் குறிக்கிறது.

மேற்கு ஆசியாவில் தொடக்க காலக் கிறித்தவ மையங்களாக அமைந்தவை எருசலேம், அந்தியோக்கியா போன்ற நகரங்கள் ஆகும்.

மேலும் கிழக்காக, பார்த்தியப் பேரரசிலும் (இன்றைய ஈரான் நாடு), இந்திய நாட்டிலும் கிறித்தவ சமயம் இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமாவின் மறைப்பணி வழியாகப் பரவியது என்று மரபு கூறுகிறது.

கிபி 301இல் ஆர்மீனியா நாடும், கிபி 327இல் ஜோர்ஜியா நாடும் கிறித்தவத்தைத் தம் நாட்டு மதமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.

கிபி 431இல் எபேசு நகரில் ஒரு முக்கியமான பொதுச்சங்கம் நிகழ்ந்தது. அது இயேசு கிறித்து உண்மையிலேயே கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டுள்ளார் என்று அறிக்கையிட்டது. மனிதராகவும் அதே நேரத்தில் கடவுளாகவும் விளங்குகின்ற இயேசு ஒரே தெய்விக ஆளாக உள்ளார் என்பதும், அதனால் இயேசுவின் தாய் ஆகிய மரியாவைக் "கடவுளின் தாய்" என்று அழைத்துப் போற்றுவது சரியே என்றும் சங்கம் வரையறுத்தது. ஆனால் நெஸ்டோரியக் கொள்கை என்னும் கோட்பாடு மேற்கூறிய போதனைக்கு எதிராக எழுந்தது. அதன்படி, இயேசு கிறித்துவில் மனித ஆள், தெய்விக ஆள் என்று இரு ஆள்கள் உள்ளனர்; அவர்கள் இருவரும் "அன்பு" என்னும் பிணைப்பால் தொடர்புகொண்டுள்ளனர்.

நெஸ்டோரியக் கொள்கையைக் கண்டனம் செய்து, அது "தப்பறை" என்று எபேசு பொதுச்சங்கம் (431) போதித்தது. இவ்வாறு நெஸ்டோரியக் கொள்கை கத்தோலிக்க திருச்சபையால் "திரிபுக் கொள்கையாக" (heresy) கணிக்கப்பட்டது.

நெஸ்டோரியக் கொள்கையின் காரணமாக கிறித்தவத்தில் பிளவு ஏற்பட்டது. எபேசு பொதுச்சங்கத்தின் முடிவுகளை ஏற்ற மேற்குத் திருச்சபை, நெஸ்டோரியக் கொள்கைகளை ஏற்ற கிழக்குத் திருச்சபை என்னும் பிளவு நிகழ்ந்தது.

நெஸ்டோரிய சபையினர் கிபி 7ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியரிடையே கிறித்தவத்தைப் பரப்பினர். அதுபோலவே, சீனாவிலும் டாங் வம்சத்தினர் (Tang Dynasty) காலத்தில் (618-907) நெஸ்டோரிய கிறித்தவம் பரவியது.

மங்கோலியர்கள் பொதுவாக சமய சகிப்புத் தன்மை கொண்டிருந்தனர். மங்கோலிய இனக்குழுக்கள் பலவும் கிறித்தவத்தைத் தழுவின. செங்கிஸ் கான் என்னும் மங்கோலியப் போர்த்தலைவரின் பேரனாகிய மோங்கே கான் காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டில், கிறித்தவம் மங்கோலியாவில் ஓரளவு செல்வாக்குடையதாய் விளங்கியது.

அதே காலகட்டத்தில் மேற்கு திருச்சபையையும் கிழக்கு திருச்சபையையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து கிறித்தவ மறைபரப்பாளர்கள், குறிப்பாக பிரான்சிஸ்கன் சபை, தொமீனிக்கன் சபை (சாமிநாதர் சபை), இயேசு சபை ஆகிய துறவற சபைகளைச் சார்ந்த குருக்களும் சபை உறுப்பினர்களும் ஆசிய நாடுகளுக்குக் கிறித்தவத்தைக் கொண்டு சென்றார்கள்.

18ஆம் நூற்றாண்டில் எசுப்பானிய மறைபரப்பாளர்கள் பிலிப்பீன்சு தீவுகளில் கிறித்தவத்தைப் பரப்பினர். கொரியா நாட்டுக்கு கத்தோலிக்க திருச்சபை சீனாவிலிருந்து 1784இல் பொதுநிலையினரால் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 50 ஆண்டுகளாக அச்சபை குருக்களின்றி செயல்பட்டது.

இன்று, கீழ்வரும் ஆசிய நாடுகளில் கிறித்தவம் முக்கிய மதமாக விளங்குகிறது:

ஆர்மீனியா

ஜோர்ஜியா

உருசியா

பிலிப்பீன்சு

கிழக்கு திமோர்.குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராகக் கிறித்தவர்கள் கீழ்வரும் ஆசிய நாடுகளில் உள்ளார்கள்:

லெபனான்

தென் கொரியா

சிரியா

கசக்ஸ்தான்

மேலும் பல ஆசிய நாடுகள்.

ஈரானின் வரலாறு

பாரசீகம் என்றும் அழைக்கப்படும் ஈரானின் வரலாறு பெரிய ஈரான் எனச் சில சமயங்களில் அறியப்படும் பெரிய பகுதி ஒன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பெரிய ஈரான் என்பது, மேற்கில் அனத்தோலியா, பொசுபோரசு, எகிப்து ஆகியவற்றில் இருந்து பண்டைக்கால இந்திய எல்லை வரையும்; கிழக்கில் சிர் டார்யாவும்; வடக்கில் காக்கேசியா, யூரேசியப் புல்வெளி என்பவற்றில் இருந்து தெற்கில் உள்ள பாரசீகக் குடா, ஓமான் குடா வரையும் உள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன.

கிமு 7000 ஆண்டுக் காலப்பகுதிவரை பின்னோக்கிச் செல்லும் வரலாற்றுக் களங்களையும், நகரக் குடியேற்றங்களையும் தன்னகத்தே கொண்டு, உலகின் மிகப்பழைய தொடர்ச்சியான நாகரிகத்தின் இருப்பிடங்களுள் ஒன்றாக ஈரான் விளங்குகின்றது. ஈரானின் தென்மேற்கு, மேற்கு ஆகிய பகுதிகள், தொடக்க வெங்கலக் காலத்தில் இருந்து எலத்தோடும், பின்னர் காசைட்டுகள், மன்னாயீன்கள், குட்டியன்கள் ஆகியோருடனும் பண்டைய அண்மைக் கிழக்கின் பங்காளிகளாக இருந்தன. கியோர்க் வில்கெம் ஃபிரீட்ரிச் ஏகெல் என்பார், பாரசீக மக்கள் உலகின் "முதல் வரலாற்று மக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மீட்கள், ஈரானை ஒரு நாடாக ஒன்றிணைத்துப் பின்னர் கிமு 625 இல் பேரரசாக ஆக்கினர். சைரசுவால் நிறுவப்பட்ட அக்கிமெனிட் பேரரசே (கிமு 550 - 300) முதல் பாரசீகப் பேரரசு ஆகும். இது பால்கன் முதல் வட ஆப்பிரிக்கா வரையும் உள்ள பகுதிகளையும், நடு ஆசியாவையும் அதன் அதிகார மையமான பேர்சிசுவில் (பேர்செபோலிசு) இருந்து ஆட்சி செய்தது. இதன் ஆட்சிப் பகுதி மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. இதுவரை இருந்தவற்றுள் மிகப்பெரிய பேரரசும் உலகின் முதற் பேரரசும் இதுவே. முதல் பாரசீகப் பேரரசே உலகின் 40% மக்களை ஒன்றிணைத்த ஒரே நாகரிகம் ஆகும். கீமு 480 இல் 112.4 மில்லியனாக இருந்த உலக மக்கள் தொகையில் 49.4 மில்லியன் மக்கள் பாரசீகப் பேரரசுக்குள் அடங்கியிருந்தனர். இப்பேரரசைத் தொடர்ந்து செலூசிட், பார்த்திய, சசானியப் பேரரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக 1000 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்ததுடன், ஈரானை மீண்டும் ஒரு முன்னணி வல்லரசாக ஆக்கின. ஈரானின் முக்கிய போட்டியாளர்களாக உரோமப் பேரரசும், பின்னர் பைசண்டியப் பேரரசும் இருந்தன. பெருமளவிலான ஈரானிய மக்களின் உள்நோக்கிய வருகையைத் தொடர்ந்து இரும்புக் காலத்தில் பாரசீகப் பேரரசு உருவானது. இம்மக்கள் மீட்சு, ஆக்கிமெனிட், பார்த்திய, சசானியப் பேரரசுகளை உருவாக்கினர்.

பாரசீகத்தை முசுலிம்கள் கைப்பற்றியதுடன், சசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. இது ஈரானின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும். ஈரானின் இசுலாம்மயப்படுத்தல் 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரை இடம்பெற்றது. இது ஈரானிலும் அதைச் சார்ந்திருந்த பிற இடங்களிலும் சோரோவாசுட்டிரியனியம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முன்னைய பாரசீக நாகரிகத்தின் சாதனைகள் எதையும் ஈரான் இழக்கவில்லை. இவை பெருமளவுக்கு இசுலாமிய சமூகத்தாலும், நாகரிகத்தாலும் உள்வாங்கப்பட்டுவிட்டன.

தொடக்கப் பண்பாடுகளினதும், பேரரசுகளினதும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஈரான், நடுக் காலத்தின் பிற்பகுதியிலும், நவீன காலத்தின் முற்பகுதியிலும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளானது. நாடோடிப் பழங்குடிகள் பல தடவைகள் நாட்டைக் கைப்பற்றி அதன் தலைவர்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இது நாட்டை எதிர்மறையாகப் பாதித்தது. 1501 இல், சபாவிட் வம்சத்தின் கீழ், ஈரான் மீண்டும் ஒன்றாக்கப்பட்டது. இது சியா இசுலாமை ஈரானின் அரச மதமாக ஆக்கியது. இது இசுலாமிய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

உலக மக்கள் தொகை

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது; அதன் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 6,831,200,000 என மதிப்பிட்டுள்ளது.

1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து மக்கள் மிகையான கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும் அதனுடன் நிகழும் வளஆதாரங்கள் பயன்பாட்டு அதிகரிப்பும் சூழ்மண்டலத்தைப் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் கருத்திசைவு ஆகும்.

குவாரசமியா

க்வரஸ்ம் /kwəˈrɛzəm/, அல்லது கோரஸ்மியா /kəˈræzmiə/ (பாரசீகம்: خوارزم, க்ஷ்வரஸ்ம்) என்பது மேற்கு நடு ஆசியாவில் அமு டர்யா ஆற்று டெல்டாவில் இருக்கும் ஒரு பெரிய பாலைவனச் சோலை பகுதி ஆகும். இதன் வடக்கில் (முன்னாள்) அரல் கடலும், கிழக்கில் கைசைல்கும் பாலைவனமும், தெற்கில் கரகும் பாலைவனமும் மற்றும் மேற்கில் உஸ்ட்யுர்ட் பீடபூமியும் அமைந்துள்ளன. இது ஈரானிய க்வரஸ்மிய நாகரிகத்தின் மையம் ஆகும். பாரசீகப் பேரரசு போன்ற தொடர்ச்சியான பேரரசுகள் இங்கே அமைந்திருந்தன. அவற்றின் தலைநகரங்களான கத், குர்கஞ்ச் (தற்கால கொனேவுர்கெஞ்ச்) மற்றும் கிவா (16ம் நூற்றாண்டில் இருந்து) இப்பகுதியில் அமைந்திருந்தன. இந்நாளில் க்வரஸ்மின் பகுதிகள் உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளாக உள்ளன.

சைரசு

பேரரசர் சைரசு (Old Persian: 𐎤𐎢𐎽𐎢𐏁, IPA: [kʰuːrʰuʃ], Kūruš, Persian: کوروش بزرگ, Kūrošé Bozorg) (கிமு 600 அல்லது 576 – டிசம்பர் கிமு 530) முதலாவது சொராஷ்டிரிய சமயப் பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் அகாமனிசியப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் பாரசீகத்தின் இரண்டாவது சைரசு, மூத்த சைரசு போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார்.

இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய அண்மை கிழக்குப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது தென்மேற்கு ஆசியாவின் பெரும்பகுதி; நடு ஆசியாவின் பெரும்பகுதி; மேற்கே எகிப்து, கிழக்கே சிந்து நதி வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.

சைரசின் ஆட்சி 29 தொடக்கம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. முதலில் சைரசு, மீடியாப் பேரரசு, லிடியப் பேரரசு, புது பாபிலோனியப் பேரரசு ஆகியவற்றை வரிசையாகக் கைப்பற்றியதன் மூலம் தனது பேரரசை நிறுவினார். பபிலோனியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடு ஆசியாவுக்குப் படை நடத்திச் சென்று அப் பகுதிகளில் இருந்த எல்லா நாடுகளையும் சைரசு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். சைரசு எகிப்துக்குள் நுழையவில்லை. கிமு 510 டிசம்பரில் நிகழ்ந்த போரில் சைரசு இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மகன் இரண்டாம் கம்பிசசு ஆட்சிக்கு வந்தார். குறுகிய காலமே ஆட்சி செய்த இவர் தனது காலத்தில் எகிப்து, நூபியா, சைரனைக்கா ஆகிய நாடுகளையும் பேரரசில் இணைத்தார்.

மனித உரிமைகள், அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயம், அத்துடன் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாகரீகங்களின் மீதான அவரது பெருமளவான செல்வாக்கிற்கும் சைரஸ் தி கிரேட் நன்கு அறியப்பட்டவர். நவீன ஈரானிய மாகாணமான ஃபார்ஸுடன் ஒப்பிடப்பட்ட பெர்சியஸிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட நிலையில், நவீன ஈரானின் தேசிய அடையாளத்தை வரையறுப்பதில் அரசர் சைரஸ் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசர் சைரஸ் மற்றும் பண்டைய உலகில் உள்ள அக்கிமெனீடுகளின் செல்வாக்கு புகழ்பெற்ற கிரேக்க நகரமான ஏதென்ஸ் வரை நீட்டிக்கப்பட்டது, அங்கு பல ஏதெனியர்கள் அக்கேமினிய பெர்சிய கலாச்சாரத்தின் அம்சங்களை தங்கள் சொந்தமாக, ஒரு பரஸ்பர கலாசார பரிமாற்றத்தில் ஏற்றுக்கொண்டனர்.

பண்டைய வரலாறு

பண்டைய வரலாறு என்பது வரலாற்றை எழுதத் தொடங்கிய காலம் முதல் ஆரம்ப இடைக்காலம் வரை உள்ள காலம் ஆகும். எழுதப்பட்ட வரலாறு என்பது சுமார் 5,000 ஆண்டுகள் ஆகும். சுமேரிய கியூனிஃபார்ம் எழுத்துகளே முதன்முதலில் எழுதப்பட்ட எழுத்துகள் ஆகும்.பழங்காலம் என்பது கிரேக்க வரலாற்றை எழுதத் தொடங்கிய கி.மு.776ல் இருந்து தொடங்குவதாகக் கருதப்படுகிறது. இது அதன் சமகால நிகழ்வான ரோமாபுரி தோற்றுவிக்கப்பட்ட கி.மு.753 உடன் ஒத்துப்போகிறது. பண்டைய வரலாற்றின் முடிவு காலம் எது என்று குழப்பம் நிலவுகின்றபோதும் ரோம் வீழ்ந்த கி.பி.476 பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிளாட்டோவின் கல்விச்சாலை மூடப்பட்ட கி.பி.529, மேலும் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் இறந்த கி.பி.565, இசுலாமின் தொடக்கம், அல்லது சார்லமேனின் எழுச்சி போன்றவையும் பண்டைய வரலாற்றின் முடிவு காலமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் பண்டைய வரலாறு நடுக்கால அரசுகளின் ஆரம்பகாலத்தையும் உள்ளடக்கியுள்ளது. சீனாவில் பண்டைய வரலாறு என்பது கின் வம்சம் வரையிலான காலத்தைக் குறிக்கிறது.

பேரரசுவாதம்

ஏகாதிபத்தியம் அல்லது பேரரசுவாதம் (Imperialism) என்பது, பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும்.

இது ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துதன் மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது.

இச் சொல், அடக்கப்பட்ட நாடு, தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விபரிக்கவே பயன்படுகின்றது.

"ஏகாதிபத்திய காலம்" ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது. பேரரசுவாதம் என்பது, தொடக்கத்தில், 1500 களின் பிற்பகுதியில், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆப்பிரிக்கா, அமெரிக்காவை நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது. ஆங்கிலேயப் பொருளாதாரவாதி ஜே.ஏ.ஹாப்சன் 1902ல் ‘ஏகாதிபத்தியம்‘ எனும் நூலை வெளியிட்டபின் இச்சொல் பிரபலமானது.முதலாளித்துவம், புதிய சந்தை வாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காகப் ஏகாதிபத்தியத்தை தூண்டிவிட்டதாகவும் இது முதலாளித்துவத்தின் இறுதியானதும் உயர்மட்ட நிலையும் ஆகுமென லெனின் வாதித்தார். தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு வெளியிலான முதலாளித்துவத்தின் அவசியம் கருதிய விரிவாக்கம் பற்றிய கொள்கையை ரோசா லக்சம்பர்க்கும் தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட்டும் (Hannah Arendt) ஏற்றுக்கொண்டனர்.

மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்

மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் (Mongol invasions and conquests), 13ஆம் நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்தது. 1300ஆம் ஆண்டின் முடிவில் ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மங்கோலியப் பேரரசின் காலடியில் வீழ்ந்தது. மங்கோலியர்கள் போரில் கைப்பற்றிய நாடுகளை ஆள வேண்டும் என்ற எண்ணமின்றி, போரின் போது கையில் சிக்கிய எதிர் நாட்டின் படை வீரர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது வாளாள் தலைகளை வெட்டி வீழ்த்தி, விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து, பின் நாடு நகரத்தை சூறையாடி விட்டுச் செல்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர். ஒரு மங்கோலிய வீரன், ஒரு நாளிற்கு குறைந்தது 24 மக்களை வாளால் கொல்ல வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தனர். செங்கிஸ் கான், ஒகோடி கான் மற்றும் குப்லாய் கான் போன்ற பேரரசர்கள் காலத்தில் மங்கோலியத் தொடர் படையெடுப்புகளால், வரலாற்றில் அதிக மனித உயிர்கள், மனிதாபமற்ற முறைகளில் பலி கொள்ளப்பட்டது என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பல நாடுகளில் மக்கள் அகதிகளாக அலைந்தனர். மங்கோலியர்கள் வந்து சென்ற நாடு, நகரங்கள் எல்லாம் பாழடைந்து போயிற்று. மக்கள் வறுமையில் வாடினர். பலர் புலம் பெயர்ந்தனர்.1227 இல் செங்கிஸ் கான் மரணித்த பின்னர் அவரது வாரிசுகள் யுவான் அரசமரபு, கானேட் அரசமரபு, சாகததே கானேட் அரசமரபு மற்றும் தங்க ஹோர்டே அரசமரபுகள் என மங்கோலியப் பேரரசை பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

கி பி 1240 ஆண்டிற்குள் நடு ஆசியா, மேற்காசியா, முழுவதையும் தொடர் படையெடுப்புகளால் வெற்றி கொள்ளப்பட்டு, கிழக்கு ஐரோப்பாவை மங்கோலிப் படைகள் அடைந்தன.

தார்தாரி இன மக்களும், மங்கோலியர்களும் கூட்டு சேர்ந்து ரசியா மீது படையெடுத்தனர்.

மங்கோலியர்களின் தொடர் ஆக்கிரமிப்புகளால் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதால், பல பகுதிகளில் மக்கட்தொகை குறைந்து விட்ட்து. குறிப்பாக வடக்கு சீனாவில் 50 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 9 மில்லியனாக குறைந்து விட்டது. பாரசீகத்தில் கிராமங்களில் வரி வருவாய் 80 விழுக்காட்டிற்கு குறைந்து விட்டது. மங்கோலியப் படையெடுப்புகளால், கிழக்காசியாவில் இசுலாமிய சமூகம் படுமோசமாக பாதிப்படைந்தது. மேற்கு ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளில் இருந்த இசுலாமிய ஆட்சிகள் முடிவு கட்டப்பட்டது.மங்கோலிய-துருக்கிய கலப்பினத்தவரான தைமூரிய வம்சத்தின், தைமூரின் வழிவந்த மொகலாயர்கள், 1260இல் இந்தியாவில் தில்லி சுல்தானகத்திற்குப் பின் தில்லியில் மொகலாயப் பேரரசை நிறுவினர்.

ரூகொல்லா கொமெய்னி

ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, பாரசீகம்: سید روح‌الله موسوی خمینی, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். புரட்சிக்கு பிறகு இறப்பு வரை இவர் ஈரானின் ஆன்மீக உச்சத் தலைவராக இருந்தார்.

1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்..

வல்லரசு

வல்லரசு என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு நாடு ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான அலிசு லைமன் மில்லர் என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப்பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்."

1944 ஆம் ஆண்டளவில், பிரித்தானியப் பேரரசு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது பனிப்போர் எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது எனினும், பிரேசில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, உருசியா ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.

பனிப்போருக்குப் பின்னர் வல்லரசு என்று ஒன்று இருப்பதையே சிலர் ஐயுறுகின்றனர். இன்றைய சிக்கலான உலகச் சந்தையமைப்பில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளதால் வல்லரசு என்னும் கருத்துரு காலம் கடந்தது என்றும் தற்போதைய உலகம் பல்முனைப்பண்பு கொண்டது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.