பண்பாடு

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

Musicians and dancers on fresco at Tomb of Nebamun
பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.

பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள்

18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றும்கூடச் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம்கண்டு அதை இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டனர். அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அமுக்கிவிடுவதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.

Gobustan ancient Azerbaycan full
அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர், பல் வேறுபட்ட சமூகங்களுக்கும் பயன்படுத்தத்தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணமொன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட பிராண்ஸ் போவாஸ் போன்ற மானிடவியலாளர்கள், மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது அநுபவங்களைப் பகுத்து குறீயீடாக்கி, குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.

எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனித செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப்பகுப்புத் தேவையாக இருந்தது.

பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: பெறுமானம் (எண்ணங்கள்), நெறிமுறைகள் (நடத்தை), மற்றும் பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு). வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானங்களாகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள் (Norms) என்பன, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொதுவழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள் எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவது அம்சமான "பொருள்கள்" பண்பாட்டின் "பெறுமானங்கள்", நெறிமுறைகள் என்பவற்றிலிருந்து பெறப்படுகின்றது.

பண்பாட்டுக் கருத்துருக்கள்

பண்பாடும் மானிடவியலும்

Edward Burnett Tylor
19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர் எட்வார்ட் டெயிலர்.

பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப் பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.

பண்பாடும் உலகப்பார்வையும்

புனைவியக் காலத்தில் செருமனியைச் சேர்ந்த அறிஞர்கள், சிறப்பாகத் தேசியவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் பண்பாடு என்பது உலகப்பார்வை என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள் பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடியோரும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசுக்கு எதிராகப் போராடிய தேசியவாத சிறுபான்மை இனக்குழுக்கள் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும் "நாகரிகமடைந்தோர்", "நாகரிகமற்றோர்" அல்லது "பழங்குடியினர்" போன்ற வேறுபாடுகளுக்கு இடமளித்தது.

சமுதாயமொன்றினுள் காணப்படும் பண்பாடுகள்

பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும் உடைய குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப் பண்பாடுகள், அவற்றின் உறுப்பினரின் வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில், அரசியல் போன்ற பண்புகளும் துணைப் பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். இவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப் பண்பாடுகளை உருவாக்கலாம்.

வருகுடியேற்றக் குழுக்களையும், அவர்கள் பண்பாடுகளையும் கையாள்வதில் பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

 • அடிப்படைப் பண்பாடு (core culture): இது செருமனியில் பஸ்ஸாம் திபி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகும். இதன்படி சிறுபான்மையினர் தமக்கான அடையாளங்களை வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் முழுச் சமுதாயத்தினதும் அடிப்படையான பண்பாட்டின் கருத்துருக்களை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும்.
 • கலப்புப் பண்பாடு (Melting Pot): ஐக்கிய அமெரிக்காவில் மரபுவழியாக இத்தகைய நோக்கு இருந்து வருகிறது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகிறது.
 • ஒற்றைப்பண்பாட்டியம் (Monoculturalism): சில ஐரோப்பிய நாடுகளில், பண்பாடு என்பது தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால், வருகுடியேற்றப் பண்பாடுகளைப் பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின் கொள்கையாக இருக்கிறது. எனினும், சில நாடுகள் பல்பண்பாட்டிய வடிவங்கள் தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள்.
 • பல்பண்பாட்டியம் (Multiculturalism): வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது பண்பாடுகளைப் பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டுக்குள் அமைதிவழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்து ஆகும்.

நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே, சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள் பலவகையான மாறிகளைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு

உலகின் நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் நாட்டினங்களாலும், இனக்குழுக்களாலும் உருவாகின்றன. பண்பாடுகளுக்கு இடையேயான ஒத்ததன்மை பெரும்பாலும் புவியியல் அடிப்படையில் அருகருகே வாழும் மக்கள் நடுவே காணப்படுகின்றது. பல நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் பிற பண்பாடுகளின் தொடர்பினால் ஏற்படக்கூடிய செல்வாக்கின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத்தகைய தொடர்புகள், குடியேற்றம், வணிகம், புலப்பெயர்வு, மக்கள் ஊடகம், சமயம் போன்றவற்றினால் ஏற்படுகின்றன. பண்பாடு இயக்கத்தன்மை கொண்டதாக இருப்பதுடன், காலப்போக்கில் மாறுபாடும் அடைகின்றது. இவ்வாறு மாறும்போது, பண்பாடுகள் வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு; மாறுகின்ற சூழலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவகையில் தன்னை இசைவாக்கிக் கொள்கிறது. இதனால், பண்பாடு தொடர்புகளில் தங்கியுள்ளது எனலாம். பண்பாடுகளிடையே மக்களினதும், எண்ணக்கருக்களினதும் கூடிய நகர்வுகளுக்கு இடமளிக்கும் புதிய தொடர்புத் தொழில் நுட்பங்களும், போக்குவரத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளூர்ப் பண்பாடுகளில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

நம்பிக்கை முறைமைகள்

Angkor wat temple
இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில்

சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஒரு அம்சமாக விளங்கிவருகிறது. கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள், புத்தசமயத்தின் ஐந்து நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மேனாட்டுப் பண்பாடு ஐரோப்பாவிலிருந்து மிகவும் வலுவாக ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, மனிதன், இறைவன், இயற்கை அல்லது அண்டம் ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல.

ஆபிரகாமிய சமயங்கள்

யூதாயிசம் அறியப்பட்ட ஓரிறைக் கொள்கை உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச் சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருகின்றன.

ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500 தொடக்கம் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது. தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். தாமஸ் அக்குவைனஸ், எராஸ்மஸ் போன்ற கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப் பேராலயங்களான நோட்ரே டேம் டி பாரிஸ், வெல்ஸ் பேராலயம், மெக்சிக்கோ நகர மெட்ரோபோலிட்டன் பேராலயம் போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம் கொண்டவை.

இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, மையக்கிழக்கு, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் 1,500 ஆண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்குகிறது.

நாடுகளின் பண்பாடுகள்

 • அல்பேனியா
 • அவுஸ்திரேலியா
 • பெல்ஜியம்
 • பிரேசில்
 • கனடா
 • சிலி
 • சீனா
 • டென்மார்க்
 • எகிப்து
 • பிரான்ஸ்
 • இந்தியா
 • ஜப்பான்
 • கொரியா
 • மெக்ஸிக்கோ
 • நெதர்லாந்து
 • நியூசிலாந்து
 • பெரு
 • போர்த்துக்கல்
 • ஐக்கிய இராச்சியம்
  • வேல்ஸ்
 • ஐக்கிய அமெரிக்கா

இவற்றையும் பார்க்கவும்

அகாமனிசியப் பேரரசு

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya, ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது. இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.

இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.

மேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

அசுன்னா பண்பாடு

அசுன்னா பண்பாடு (Hassuna culture) தற்கால ஈராக் நாட்டின் வடக்கு மெசபடோமியா பகுதியில், புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகும். கிமு 6,000 காலத்திய அசுன்னா பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், கைக்கோடாரிகள், அரிவாள்கள், தானியங்களை அரைக்கும் கற்கள், சமையல் அடுப்புகள், சுடு களிமண் மற்றும் கல் தொட்டிகள், வேளாண்மை பயன்படுத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்குகளின் எலும்புகள் போன்ற தொல்பொருட்கள் வடக்கு மெசபடோமியாவில் அசுன்னா தொல்லியல் மேடு மற்றும் செம்சரா தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யும் போது கிடைத்துள்ளது.

இந்தியத் தேசிய நாட்காட்டி

இந்தியத் தேசிய நாட்காட்டி (சில நேரங்களில் சக சம்வாட் எனவும் அறியப்படும்) இந்தியாவின் அலுவல்முறை குடிமை நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ் (Gazette of India), அனைத்திந்திய வானொலி,மற்றும் நடுவண் அரசின் நாட்காட்டிகள், ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது குழப்பமாக இந்து நாட்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது; தவிர சக சகாப்தம் பல நாட்காட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்து

இந்து (ஒலிப்பு ) (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.

இரானிய நாட்காட்டி

இரானிய நாட்காட்டி பெர்சியா என வழங்கப்பட்ட ஈரானின் நாட்காட்டிகளைக் குறிக்கும். இவை ஈரான் தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இரானிய சமூகங்களிலும் பாவிக்கப்படுகிறது.

தற்போதைய இரானிய நாட்காட்டி புவி நெடுங்கோடு 52.5°கி (அல்லது GMT+3.5h)உள்ள இரானிய நேர வலயத்தில் அறிவியல்படி தீர்மானிக்கப்பட்ட வேனிற்கால சம இரவு நாள் அன்று துவங்குகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியை விட துல்லியமாக ஆண்டுத் துவக்கத்தை தீர்மானிக்கிறது. மனித வரலாற்றின் பல நிகழ்வுகளை பதிந்திருக்கும் இரானிய நாட்காட்டி நிர்வாக,காலநிலை மற்றும் சமய காரணங்களுக்காக பலமுறை மாற்றம் கண்டுள்ளது.

ஆங்கிலத்தில் இந்நாட்காட்டி சிலசமயங்களில் சூரிய ஹிஜ்ரி என அழைக்கப்படுகிறது. ஆண்டுகளை குறிப்பிடும்போது AP(Anno Persico என்பதன் சுருக்கம்) என்று பின்னொட்டு தரப்படுகிறது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியின்படி மார்ச் 21க்கு ஒருநாள் அண்மையில் துவங்குகிறது. கிரெகொரியின் ஆண்டைக் காண இரானிய நாட்காட்டி நாளுடன் 621 அல்லது 622 (ஆண்டின் எப்பகுதியில் கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து) கூட்டவேண்டும்.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும். கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது.

எழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும்.

காந்தார கல்லறை பண்பாடு

காந்தார கல்லறை பண்பாடு அல்லது சுவத் பண்பாடு (Gandhara grave culture or Swat culture) கி மு 1600 முதல் கி மு 500 முடிய தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் நாட்டின் காந்தாரம் மற்றும் சுவத் பகுதிகளில் செழிப்பாக விளங்கியது. இப்பகுதிகளில் இந்தோ ஆரிய மக்கள் குடியேறிய அடையாளங்களை, இப்பகுதியின் உள்ளூர் கலாச்சாரத் தொடர்ச்சியின் வாயிலாக அறியமுடிகிறது.

சமயம்

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

சமார்ரா பண்பாடு

சாமர்ரா பண்பாடு (Samarra culture) பண்டைய அண்மை கிழக்கின் நடு மெசொப்பொத்தேமியாவில் (தற்கால வடக்கு ஈராக்) செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும்

சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ),

ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது.

சாமர்ரா பண்பாட்டின் முக்கியத் தொல்லியல் களங்கள் செம்சரா தொல்லியல் மேடு, எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு மற்றும் யாரிம் மலைக்குன்றாகும்.

சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை.

சீன நாட்காட்டி

சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா (春節), டுயான் வு பண்டிகை, மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.

சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி(எளிய சீனம்: 夏历; மரபுவழிச் சீனம்: 夏曆; பின்யின்: xiàlì) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது.

சீன நாட்காட்டியை "விவசாய நாட்காட்டி" (எளிய சீனம்: 农历; மரபுவழிச் சீனம்: 農曆; பின்யின்: nónglì) கிரெகொரியின் நாட்காட்டியை "பொது நாட்காட்டி" (எளிய சீனம்: 公历; மரபுவழிச் சீனம்: 公曆; பின்யின்: gōnglì) என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" (எளிய சீனம்: 阴历; மரபுவழிச் சீனம்: 陰曆; பின்யின்: yīnlì) எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" (எளிய சீனம்: 阳历; மரபுவழிச் சீனம்: 陽曆; பின்யின்: yánglì)எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை புதிய நாட்காட்டி (எளிய சீனம்: 新历; மரபுவழிச் சீனம்: 新曆; பின்யின்: xīnlì) எனவும் சீன நாட்காட்டியை பழைய நாட்காட்டி(எளிய சீனம்: 旧历; மரபுவழிச் சீனம்: 舊曆; பின்யின்: jiùlì) எனவும் கூறுவதும் உண்டு.

2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது.

ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் (十二生肖 shí'èr shēngxiào, "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது 十二屬相

shí'èr shǔxiàng, "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox),புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig).

தற்போதைய ஆண்டு (ஜனவரி 31, 2014 முதல் பிப்ரவரி 18, 2015 வரை) குதிரையின் Wǔnián ஆண்டாகும்.

தமிழகம்

தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது.

துவாரகை

துவாரகை அல்லது துவாரகா இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக்கடற் கரையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரான துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது.

மேலும் துவாரகை சிந்துவெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது.

நாடு

அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் அரசு (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

பண்டைக் கிரேக்கம்

பண்டைக் கிரேக்கம் என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் கிரேக்கத்தின் இருண்ட கால முடிவு தொடக்கம் கிமு 146 இல் ரோமர் கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு ரோமப் பேரரசின் மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரப்பியது. மொழி, அரசியல், கல்வி முறை, மெய்யியல், அறிவியல், கலைகள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், மறுமலர்ச்சியை உருவாக்குவதிலும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.

பள்ளிவாசல்

பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.

முசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.

பார்த்தியப் பேரரசு

பார்த்தியப் பேரரசு (Parthian Empire) (ஆட்சிக் காலம்; கி மு – 247 - கி பி 224), என்பதை அரசிட் பேரரசு (Arsacid Empire) என்றும் அழைப்பர். பண்டைய ஈரானின் பார்த்திய மொழி பேசும் மக்கள், ஈரானிலும், ஈராக்கிலும் அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள்.முதலாம் அராசஸ் கி மு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பாரசீகத்தின் வடகிழக்கில் உள்ள கொரசான் பெரு நிலப்பகுதிகளை ஆண்ட கிரேக்க செலுக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றி, (r. c. 171–138 BC) பார்த்தியப் பேரரசை நிறுவியவர் ஆவார். பின்னர் இராக்கின் வடமேற்கு பகுதிகளான மீடியா, மெசபடோமியா பகுதிகளையும் கிரேக்க செலுசிட் பேரரசிடமிருந்து கைப்பற்றி பேரரசை விரிவு படுத்தினார்.

பின்னர் மத்திய கிழக்கு துருக்கி முதல் ஈரான் வரை தங்கள் ஆட்சியை விரிவு படுத்தினர். மேற்கே மத்தியதரைக்கடலின் உரோம் பேரரசு முதல் கிழக்கே சீனாவின் ஹான் பேரரசு வரை செல்லும் பட்டுப் பாதையில் அமைந்த பார்த்திய பேரரசு வணிகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்கியது.

புரி தேரோட்டம்

புரி ரத யாத்திரை (Ratha Yatra, (ஒரிய மொழி: ରଥଯାତ୍ରା) என்பது இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.

ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார்.

முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (Northern Black Polished Ware culture) (சுருக்கப் பெயர்: NBPW or NBP) கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.பிந்தைய வேதகாலத்தின் துவக்கத்தில் கிமு 700 முதல் துவங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு, கிமு 500 - 300 காலங்களில் உச்சத்தில் இருந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 நகர மகாஜனபத அரசுகள் எழுச்சி கொண்டது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.