நில மானிய முறைமை

வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் வேளாண்மை கற்றுக் கொண்டான். வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம் (feudalism). இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படுத்திக்கொண்ட நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்குபடுத்தியதே நிலக்கிழாரியம் (feudalism). இந்தியாவில் இது பல ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு. நிலமானிய முறை மத்திய கால ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் அரசனைக் காட்டிலும் பிரபுக்களிடம் அதிக அதிகாரம் உருவாகியது.

அரசாங்கம்

அரசாங்கம் (Government) என்பது நாடு அல்லது சமுதாயத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். நாடுகளின் பொதுநலவாயத்தில் (Commonwealth of Nations) “அரசாங்கம்” என்ற சொல்லானது ஒரு மாநிலத்தில் நிறைவேற்று அதிகாரத்தைச் செயல்படுத்தும் மக்களின் கூட்டு குழுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் பயன்பாட்டுக்கு ஒத்ததாக அமெரிக்க ஆங்கிலத்தில் "நிர்வாகம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக அமெரிக்க ஆங்கிலத்தில், "அரசு" மற்றும் "அரசாங்கம்" ஆகியவற்றின் கொள்கைகள் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரதேசத்தின் மீது அதிகாரம் செலுத்தும் நபர் அல்லது குழுவினரைக் குறிக்கிறது. அரசாங்கம் (government) என்பது அரசைக் கட்டுப்படுத்தும் சட்டமியற்றுவோர், நிர்வகிப்போர், நிர்வாக அதிகாரமுள்ளோரைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட முறையாகும். அரசாங்கம் அரசின் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒன்றாகவும், அரச கொள்கையினை வரையறுக்கும் பொறிமுறையாகவும் உள்ளது. அரசாங்கத்தின் அமைப்பு என்பது ஒர் அரசின் அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களின் அமைப்பாக நோக்கப்படுகின்றது. இது ஆட்சி முறை வடிவம், அரசாங்கத்தின் முறை என்பவற்றை உள்ளடக்கியது.

ஆந்திரப் பிரதேச வரலாறு

ஆந்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் 29 வது மாநிலமாகும். இதன் வரலாற்றுக் குறிப்புகள் வேதகாலத்தில் இருந்து துவங்குகிறது. மேலும் இது குறித்து கி.மு 800 காலகட்டத்தைச் சேர்ந்த சமஸ்கிருத நூலான அய்தரேய பிராமணாவில் காணப்படுகிறது. அஸ்மகம் மகாஜனபதம் (கி.மு 700–300 ) என்பது கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்த பழங்கால அரசுகளாகும். இப்பகுதி மக்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இராமாயணம், மகாபாரதம், மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது.

மார்க்சியம்

மார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வர்க்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும்.

மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் கருதப்படுகிறது.

மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற பொருளாதாரத்தையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.

மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்; அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும், அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர். இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பொருளாதார முறைமைகள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.