நடுக் காலம் (ஐரோப்பா)

ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் என்பது, அதன் வரலாற்றுக் காலத்தின் மூன்று பிரிவுகளுள் நடுப் பிரிவைக் குறிக்கும். ஐரோப்பாவின் வரலாற்றுக் காலப் பகுதி, தொன்மை நாகரிகம், மத்திய காலம், தற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்யப்படுகின்றது. இவ்வாறு மூன்று காலப் பகுதிகளாகப் பிரிக்கும் முறை இத்தாலிய மறுமலர்ச்சி வரலாற்றாளரான பிளேவியோ பியோண்டோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய காலம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. பொதுவாக 5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் தொடங்கித் தற்காலத் தொடக்கமான 16 ஆம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது. சீர்திருத்தம் மூலம் மேற்கத்திய கிறிஸ்தவம் பிரிவுற்றது, இத்தாலிய மறுமலர்ச்சி மூலம் மனிதநேயத்தின் வளர்ச்சி, ஐரோப்பிய நாடுகளின் கடல்கடந்த விரிவாக்கத் தொடக்கம் என்பன மத்திய காலத்தின் நிகழ்வுகளாகும். இக் காலப்பகுதிகளின் எல்லைகள் தொடர்பில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை முக்கியமாக தனிப்பட்ட அறிஞர்களின் நோக்கையும், சிறப்புத் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். பொதுவாகக் காணும் காலப்பகுப்பின் எல்லைகள், கிபி 400-476 காலப்பகுதியில், ரோம் விஸ்கோத்களால் தோற்கடிக்கப்பட்டு அகஸ்டஸ் ரோமுலஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து தொடங்கி; கிபி 1453-1517 காலப்பகுதியில் கொன்ஸ்டண்டினோப்பிளின் வீழ்ச்சி, கிறிஸ்தவச் சீர்திருத்தம் என்பவற்றோடு முடிவடைகிறது.

மத்திய காலத்திலேயே வடக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் நகராக்கம் தொடங்கி நிலைபெறலாயிற்று. பல தற்கால ஐரோப்பிய நாடுகளின் தோற்றங்கள், மத்திய காலப்பகுதியின் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. தற்கால ஐரோப்பிய நாடுகளின் அரசியல் எல்லைகளும் மத்திய காலத்தில் நிகழ்ந்த படைத்துறை மற்றும் வம்சங்களின் சாதனைப் பெறுபேறுகளின் விளைவுகளாகும்.

Mont-Saint-Michel depuis la mer
பிரான்சின் வடக்குக் கரையோரப் பகுதியில், மத்திய காலத்தின் சின்னங்களில் ஒன்றாக விளங்கும், அரண் செய்யப்பட்ட நகரமான மொன் சான் மிஷேல் (Mont Saint-Michel). 1470களில் லிம்பர்க் சகோதரர்கள் வந்ததன் பின்னர் மிகக் குறைவான மாற்றங்களுடன் காணப்படுகின்றது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.