கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம் ( ஒலிப்பு) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3]

Brockhaus Lexikon
புரோக்கவுசு கான்வர்சேசன் லெக்சிக்கன் அல்லது புரோக்கவுசு என்சிக்க்லோபேடீ (Brockhaus Enzyklopädie), 1902, என்னும் இடாய்ட்சு மொழி கலைக்களஞ்சியம்

சமூக தலைமைப்பண்பு

18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்:

கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந் தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் தொண்டும் இது அமையும்.

—Diderot[4]

இயல்புகள்

இன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை.

மேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன.

ஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன.

  • கலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்களில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்).
  • கலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும்.
  • கலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன.
  • தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

அகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம்.

வரலாறு

மூத்த பிளினி

Naturalishistoria
நாட்சுராலிசு இசுட்டோரியா, 1669 பதிப்பு, தலைப்புப் பக்கம்.

கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்:

இயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை.

இதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது.

இடைக் காலம்

Etymologiae Guntherus Ziner 1472
First printed edition of 1472 (by Guntherus Zainer, ஔசுபூர்கு), title page of book 14 (de terra et partibus), illustrated with a T and O map.

இடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும்.

பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது.

இசுலாமும் பாரசீகமும்

Persian-encyclopedia
பாரசீகக் கலைக்களஞ்சியம்

இடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.

சீனா

11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது.

17 – 19 ஆம் நூற்றாண்டுகள்

பொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன.

பிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன.

1708-harris-ttlpg
ஹரிசின் லெக்சிக்கன் டெக்னிக்கம், 2 ஆம் பதிப்பின் தலைப்புப் பக்கம், 1708

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட "படைப்பின் அளவுத்திட்டம்" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் "அறிவியல்" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "encyclopaedia" (online). Oxford English Dictionary (OED.com), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்த்த நாள் 2012-02-18.
  2. "Encyclopedia.". மூல முகவரியிலிருந்து 2007-08-03 அன்று பரணிடப்பட்டது. Glossary of Library Terms. Riverside City College, Digital Library/Learning Resource Center. Retrieved on: November 17, 2007.
  3. Hartmann, R. R. K.; James, Gregory; Gregory James (1998). Dictionary of Lexicography. Routledge. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-14143-5. http://books.google.com/?id=49NZ12icE-QC&pg=PA49&dq=%22encyclopedic+dictionary%22%2Bencyclopedia&q=%22encyclopedic%20dictionary%22%2Bencyclopedia. பார்த்த நாள்: July 27, 2010.
  4. Denis Diderot and Jean le Rond d'Alembert Encyclopédie. University of Michigan Library:Scholarly Publishing Office and DLXS. Retrieved on: November 17, 2007

வெளி இணைப்புகள்

ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை ஆறாம் போனிஃபாஸ், ரோம் நாட்டினர் ஆவார். சுமார் ஏப்ரல் 896-ஆம் ஆண்டு, திருத்தந்தை ஃபொர்மோசுஸின் மரணத்திற்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருமுறை குருவாகவும், துணை திருத்தொண்டராகவும் இருந்தபோது தன் பதவியை இழக்க நேர்ந்தது.

வெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் (Spoleto) கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர்.

898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீடத் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இந்தி

இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று . இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை இரண்டாம் அகாப்பெட்டஸ் (பிறப்பு: உரோமை நகரம்; இறப்பு: சுமார் நவம்பர் 955) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக மே 10, 946 முதல் தன் இறப்பு வரை (955) இருந்தவர்.

இவரின் ஆட்சியின் போது, மரோசியாவின் மகனான இரண்டாம் அல்பேரிக் (Alberic II) (932–954) உரோமை நகரை "ஆட்சிப்பேரவை தலைவர் மற்றும் இளவரசர்" என்னும் பட்டத்தில் ஆட்சிசெய்து வந்தான்.

திருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸின் ஆட்சிகாலத்திலிருந்து (904–911) திருத்தந்தை பன்னிரண்டாம் யோவானின் (955–964) காலம் வரை (963) நிலவிவந்த விந்த விபச்சார திருப்பீட காலத்தை (Pornocracy) முடிவுக்கு கொணர முயற்சித்தார். இவர் உதவி கோரிய முதலாம் ஓட்டோ (Otto I the Great) மன்னனின் பலம் இரண்டாம் அல்பேரிகின் பலத்தைவிட இவர் காலத்தில் சிறுத்திருந்தது. ஆகவே இவரின் முயற்சிகள் இவரின் இறப்புக்கு பின்னரே பலனளித்தன.

ஏப்ரல்

ஏப்ரல் (April, /ˈeɪprɪl/ AY-pril) கிரெகொரியின் நாட்காட்டியின் நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும்.

ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இலையுதிர்காலத்திலும் வருகிறது.

கொர்னேலியுசு (திருத்தந்தை)

திருத்தந்தை கொர்னேலியுஸ் (Pope Cornelius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச்சு 6 (அ) 13ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த சூன் 253 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை ஃபேபியன் ஆவார். திருத்தந்தை கொர்னேலியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 21ஆம் திருத்தந்தை ஆவார்.

கொர்னேலியுஸ் (இலத்தீன்: Cornelius) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "கொம்பு" எனப் பொருள்படும் "Cornu" என்னும் சொல்லிலிருந்து பிறந்த குடும்பப் பெயராக இருக்கலாம். "உறுதியான" என்னும் பொருளும் உண்டு.

சிரீசியஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை சிரீசியஸ் (Pope Siricius) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 384 முதல் நவம்பர் 26, 399 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 38ஆம் திருத்தந்தை ஆவார்.

சோசிமஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை சோசிமஸ் (Pope Saint Zosimus) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் மார்சு 18, 417 முதல் திசம்பர் 26, 418 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 41ஆம் திருத்தந்தை ஆவார்..

இவர் இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் மெசோராக்கா என்னும் இடத்தில் பிறந்தார்.இவருக்கு முன்னால் திருத்தந்தைப் பதவியில் இருந்தவர் முதலாம் இன்னசெண்ட், இவருக்குப் பின் பதவியேற்றவர் திருத்தந்தை முதலாம் போனிஃபாஸ்.

"திருத்தந்தையர் வரலாறு" (Liber Pontificalis) என்னும் நூலின்படி, சோசிமஸ் ஒரு கிரேக்கர். அவருடைய தந்தை பெயர் ஆபிராம். இதிலிருந்து சோசிமசின் குடும்பம் யூத இனத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கலாம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். ஆனால் இது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

திபெத்து

திபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். புவியியல்படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று யுனெஸ்கோ, மற்றும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது தெற்காசியாவின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.

திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்

நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம் (The On-Line Encyclopedia of Integer Sequences (OEIS)) என்றோ எளிமையாக சுலோவேனின் (Sloane's ) எண்வரிசை என்றோ அழைக்கப்படுவது ஆழமாக தேடக்கூடிய வசதி படைத்த பல்வேறு எண்வரிசைளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்புப்பதிவகம் அல்லது தரவுத்தளமாகும். இதில் உள்ள தரவுகளை இலவசமாக இணையவழி பெறக்கூடியது.

OEIS என்று அழைக்கப்படும் இந்த நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியத்தில் பதிவாகி, சேமித்து வைத்திருக்கும் வரிசைகளும் செய்திகளும் கணித சிறப்பறிவாளர்களுக்கும் மட்டுமல்லாமல்; கணிதத் தன்னார்வ அறிவாளர்களுக்கும் பயனுடையதாகும். இது பரவலாக சுட்டப்படும் ஓர் அறிவுக்கிடங்காங்காக உள்ளது. இதில் 1,40,000-ற்கும் கூடுதலான எண் வரிசைகள் பதிவாகியுள்ளன. இதுவே இத்தகைய வரிசைகளைக் கொண்டுள்ள தரவுத்தளங்கள் யாவற்றினும் பெரியது.

ஒவ்வொரு பதிவும், அதன் வரிசையில் தொடங்கும் முதல் எண்களையும், சிறப்புச் சொற்களைக் கொண்டிருப்பதுடன், கணித நோக்கங்கள் கணித இலக்கிய இணைப்புகள் முதலியவற்றையும் தருகின்றது. இத்தரவுத்தளத்தில், சிறப்புச் சொற்களைக் கொண்டும், வரிசையின் இடையே தோன்றும் குறுந்தொடர்களைக் கொண்டும் தேடவல்ல வசதி கொண்டது.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது ஸ்காட்லாந்து அறிவொளியின் (Socttish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு (Encyclopædia Britannica Eleventh Edition) (1910–1911) 29-தொகுப்புகள் கொண்ட ஓர் உசாத்துணையும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் ஓர் பதிப்புமாகும். இது பிரித்தானியரிடமிருந்து அமெரிக்க பதிப்பகம் கையகப்படுத்தியபோது மாற்றத்தின்போது தொகுக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்த தலைசிறந்த அறிஞர்களால் இத்தொகுப்பு எழுதப்பட்டது. பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் இந்தப் பதிப்பு தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.ஆனால் இதன் உள்ளடக்கங்களில் சில காலவோட்டத்தில் மாறியுள்ளதால் தற்கால கற்கைக்கு பயனின்றி உள்ளது. அதே நேரத்தில் தற்கால அறிஞர்களுக்கு பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மத்தேயு (திருத்தூதர்)

திருத்தூதர் புனித மத்தேயு (מתי/מתתיהו, எபிரேய மொழி: Mattay or Mattithyahu, பொருள்: "யாவேயின் பரிசு"; கிரேக்க மொழி: Ματθαῖος, Matthaios) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.

மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்

மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் (Encyclopedia of Genes and Genomes, சுருக்கமாக KEGG) என்பது மரபணுத்தொகைகள், உயிரிய வழித்தடங்கள், நோய்கள், மருந்துகள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள தரவுத்தளங்களின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு மரபணுத்தொகையியல், மெட்டேனோமைக்சு, வளர்சிதைமாற்றக்கல்வி மற்றும் பிற -ஓமிக்சு கல்விக்கான தரவு பகுப்பாய்வு உட்பட உயிர் தகவலியல் ஆய்வு மற்றும் கல்வி, தொகுப்பியக்க உயிரியலில் ஒப்புருவாக்கம், மற்றும் மருந்தியல் வளர்ச்சியில் நகர்வு ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

KEGG தரவுத்தளத் திட்டம் சப்பானின் அன்றைய மனித மரபணுத்தொகைத் திட்டத்தின் கீழ் கியோத்தோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வுக் கழகப் பேராசிரியர் மினோரு கனேகிசா என்பவரால் 1995 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.

முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் (Pope Saint Innocent I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 22, 401 முதல் மார்ச் 12, 407 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 40ஆம் திருத்தந்தை ஆவார்.

முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)

முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..

மூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை மூன்றாம் அனஸ்தாசியுஸ் (இறப்பு: ஜூன் 915) ஏப்ரல் 911 முதல் ஜூன் 913 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் உரோம் நகரில் பிறந்தார். மூன்றாம் செர்ஜியுஸுக்கு முறைகேடாகப் பிறந்த மகன் என சிலர் கூறுவர்.

தியோடேரா Theodora என்பவரின் கட்டுப்பாட்டில் திருப்பீடம் இருந்தபோது இவரின் ஆட்சிக்காலம் அமைந்தது. தியோடேராவின் விருப்பத்தால் தான் இவர் ஆட்சியேற்றார் என்பர். இவரின் ஆட்சிக்காலம் பற்றி தகவல் வேறெதுவும் இல்லை.

இவரின் ஆட்சியில் ரோலோ நகர நோர்மானியர்களுக்கு மறைபரப்பப்பட்டது.

இவரின் கல்லறை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளது.

வரலாறு

வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.

வரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது .

வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணொட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்.

வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

வரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.