ஆப்பெழுத்து

ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.[1] ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின.

ஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன.

ஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது.

Cuneiform sign SAG

பட எழுத்து முறையிலிருந்து ஆப்பெழுத்துக்கள் உருவான வளர்ச்சிப் படிகளைக் காட்டும் படம்.

Sumerian 26th c Adab
ஆப்பெழுத்தில் சுமேரிய மொழி, கிமு 26ம் நூற்றாண்டு

மேற்கோள்கள்

  1. Cuneiform WRITING SYSTEM
அசிரியா

பண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது நினிவேவைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி பபிலோனியா எனப்பட்டது.அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, அசுர் மலைகள் என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது.

அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும்.

அசூர், பண்டைய நகரம்

அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: வார்ப்புரு:Script/ஆப்பெழுத்து Aθur, பாரசீகம்: آشور: Āšūr; எபிரேயம்: אַשּׁוּר:Aššûr, அரபு மொழி: اشور: Āšūr, குர்திஷ் மொழி: Asûr), தற்கால ஈராக்கில் இந்நகரை (அரபு மொழியில்) குலாத் செர்கத் (Qal'at Sherqat) என அழைக்கப்படுகிறது.

அசூர் நகரம், மெசொப்பொத்தேமியாவின் பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.

அசூர் நகரத்தின் இடிபாடுகள், தற்கால ஈராக் நாட்டின் சலாடின் ஆளுநரகத்தில், சிர்காத் மாவட்டத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கில் உள்ளது.

அசூர் நகரத்தில், கிமு 2600ம் ஆண்டிலிருந்து,கிபி 14ம் நூற்றாண்டின் மத்தி வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். கிபி 14ம் நூற்றாண்டில் அசூர் நகரத்தின் மீது படையெடுத்து வந்த தைமூர் படைகள், இங்கு வாழ்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் அசிரியக் கிறித்துவர்களைக் கொன்று, அசூர் நகரத்தை இடித்து தள்ளினான்.

2003ல் 27வது 27வது உலக பாரம்பரியக் குழு அமர்வு, இடிபாடுகளுடன் கூடிய அசூர் நகரத்தை, உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

அரராத்து இராச்சியம்

அரராத்து இராச்சியம் (Urartu) (/ʊˈrɑrtuː/), விவிலியம் கூறும் அரராத்து மலைகளை மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால ஆர்மீனியாவின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள், தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.அரராத்து இராச்சியத்தின் நிலப்பரப்புகள் மேற்கில் அனதோலியா மற்றும் மெசொப்பொத்தேமியாவும், கிழக்கில் ஈரானியப் பீடபூமி, ஆர்மீனியன் மேட்டு நிலங்களைக் கொண்டது. அரராத்து இராச்சியத்தின் தென்மேற்கில் புது பாபிலோனியப் பேரரசும், தெற்கில் மீடியாப் பேரரசும் இருந்தது.

இவ்விராச்சிய மக்கள் ஆப்பெழுத்து முறையில் எழுதப்பட்ட உரார்த்து மொழி பேசினர்.அரராத்து இராச்சியம் கிமு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், பாரசீகத்தின் மீடியாப் பேரரசினர் கிமு 590ல் அரராத்து இராச்சியத்தை முழுவதுமாகக் கைப்பற்றினர். தற்கால ஆர்மினிய மக்களின் முன்னோர்கள் உரார்த்து மொழி பேசியவர்கள் எனக்கருதப்படுகிறது.

இட்டைட்டு மொழி

இட்டைட்டு மொழி (Hittite Language) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறந்த மொழி. இன்று துருக்கி எனப்படும் பண்டைய அனதோலியாவின் வட மத்திய பகுதியில், அத்துசாவை (Hattusa) மையமாகக்கொண்டு அமைந்திருந்த பேரரசொன்றை உருவாக்கிய இட்டைட்டு மக்கள் இம்மொழியைப் பேசினர். கிமு 16 தொடக்கம் கிமு 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இம்மொழியின் ஆப்பெழுத்துப் பதிவுச் சான்றுகள் காணப்படுகின்றன. அதேவேளை கிமு 20 ஆம் நூற்றாண்டில் இருந்தே பழம் அசிரிய மொழிப் பதிவுகளில் இட்டைட்டு மொழிக் கடன்சொற்களையும், ஏராளமான மக்கட்பெயர்களையும் காணமுடிகிறது.

பிந்திய வெண்கலக் காலத்தை அண்டி, இட்டைட்டு மொழி தனது தகுதியை அதற்கு நெருங்கிய உறவுள்ள லூவிய மொழியிடம் இழக்கத் தொடங்கியது. கிமு 13 ஆம் நூற்றாண்டில், லூவிய மொழியே இட்டைட்டுத் தலைநகரமான அத்துசாவில் பரவலாகப் பேசப்பட்ட மொழியாக இருந்தது. பொதுவான வெண்கலக்கால வீழ்ச்சியின் ஒரு பகுதியாக இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியடைந்தது இதன் பின்னர் தொடக்க இரும்புக்காலத்தில் தென்மேற்கு அனத்தோலியாவிலும், வடக்கு சிரியாவிலும் உருவான புதிய இட்டைட்டு நாடுகளின் முதன்மை மொழியாக லூவிய மொழி விளங்கியது. இட்டைட்டு மொழியே சான்றுகளுடன் கூடிய மிகப்பழைய இந்திய-ஐரோப்பிய மொழி ஆகும். இம்மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையின் பெருமளவு அறியப்பட்ட மொழியும் இதுவே.

ஈலமைட்டு மொழி

ஈலமைட்டு மொழி (Elamite language), ஈலமைட்டு மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு மொழியாகும். இது கிமு 6ம் - 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரசீகப் பேரரசின் அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றிய காலப்பகுதியைச் சேர்ந்தவை.

ஊர் (மெசொப்பொத்தேமியா)

இக் கட்டுரையில், ஊர் (சுமேரியம்: Urim; சுமேரிய ஆப்பெழுத்து: 𒋀𒀕𒆠 URIM2KI or 𒋀𒀊𒆠 URIM5KI; அக்காடியம்: Uru; அரபு மொழி: أور; எபிரேயம்: אור‎) என்பது, பண்டைய மெசொப்பொத்தேமியாவில் இருந்த முக்கியமான ஒரு நகர அரசு ஆகும். இது, தெற்கு ஈராக்கில் உள்ள "டி கர்" ஆளுனரகத்தில் உள்ள தற்காலத்து தெல் எல்-முக்காயர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஊர், யூப்பிரட்டீசு ஆற்றுக் கழிமுகத்துக்கு அண்மையில் பாரசீகக் குடாக் கரையில் அமைந்த ஒரு கரையோர நகரமாக இருந்தபோதும், கரை வெளிநோக்கி நகர்ந்த காரணத்தால் நகரம் இப்போது கரையில் இருந்து உள்நோக்கி யூப்பிரட்டீசின் தென்கரையில் உள்ளது. இது ஈராக்கின் நசிரியா என்னும் இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.நகரம், உபெயிட் காலத்தில், கிமு 3800 இலிருந்து உள்ளது. இது கிமு 26 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு நகர அரசாக இருந்தது பற்றிய எழுத்துமூல வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள இதன் முதல் அரசர் மெசன்னெபாதா (Mesannepada) ஆவார். சுமேரிய, அக்காடிய நிலவுக் கடவுளான நன்னா, நகரத்தின் காவல் தெய்வம். நகரத்தின் பெயரும் தொடக்கத்தில் இக்கடவுளின் URIM2KI என்னும் பெயரைத் தழுவியே ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்நகரத்தில் நன்னா கடவுளின் கோயிலைக் கொண்டிருந்த "ஊரின் சிகரட்டு" (Ziggurat of Ur) எனப்படும் கட்டிட அமைப்பு தற்போது பகுதியாகத் திருத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. 1930 ஆம் ஆண்டில் இந்த அமைப்பை அகழ்வாய்வு மூலம் வெளிக் கொண்டுவந்தனர். கோயில் கிமு 21 ஆம் நூற்றாண்டில், ஊர்-நம்முவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது பின்னர் கிமு 6 ஆம் நூற்றாண்டில், அசிரியாவில் பிறந்த பபிலோனின் கடைசி அரசனான நபோடினசுவால் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் அழிபாடுகள் வடமேற்கு - தென்கிழக்குத் திசையில் 1,200 மீட்டர்களும் (3,900 அடிகள்), வடகிழக்கு - தென்மேற்குத் திசையில் 800 மீட்டர்களும் (2,600 அடிகள்) கொண்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன், இதன் உயரம் தற்போதைய நில மட்டத்தில் இருந்து 20 மீட்டர்களாக (66 அடிகள்) உள்ளது.

எழுத்தறிவு

எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு ஆகியவற்றின்தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.

வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.

எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று வாசித்தல் ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்:

பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளல்

எழுதப்பட்டவற்றை குறி நீக்கி புரிந்து கொள்ளல்

உரைகளைப் படித்து உள்ளார்ந்து புரிந்துகொண்டு உச்ச அளவு பயன்பாடு பெறுதல்

வாசித்தலில் உள்ள வளர்ச்சிகள் பின்வரும் பலக்கிய மொழியியல் கூறுகளை உள்ளடக்கியதாகும்:

பேச்சில் உள்ள ஒலிக்குறிகள் குறித்த விழிப்புணர்வு (ஒலியனியல்)

எழுத்துக்கோர்வை வடிவவிதம் (orthography)

வார்த்தைகளுக்கான பொருளறிதல் (சொற்பொருளியல்)

இலக்கணம் (சொற்றொடரியல்)

வார்த்தை உருவாதலில் வடிவவிதம் (உருபனியல்)

இவை அனைத்தும் தடையற்ற ஆற்றொழுக்கு வாசித்தலுக்கும் புரிதலுக்கும் தேவையான அடிப்படை கூறுகளாகும்.இத்திறன்களைப் பெற்றவர், அச்சிடப்பட்ட கருத்துகளைப் புரிந்து, நுண்ணாய்வு செய்து பயன் பெறுதல், தொகுத்தல், உய்த்துணர்தல், கோர்வையாகவும், துல்லியமாகவும் எழுதுதல், அச்சிடப்பட்ட கருத்துகளிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி உட்காட்சி அமைத்தல், முடிவெடுத்தல், படைப்புத்திற ஆதார சிந்தனைகள் மேற்கொள்ளல் போன்ற பன்முகத் திறன்களையும் பெற்றவராவர். இவர்களே முழு எழுத்தறிவு பெற்றவராவர்.இவற்றைப் பெற இயலாதோர் எழுத்தறிவற்றோர் அல்லது எழுத்து அறியாதோர் எனப்படுவர்.ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவை பின்வருமாறு வரையறுத்துள்ளது: எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கரூவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு, அண்மைச்சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும்

எழுத்தின் வரலாறு

எழுத்தின் வரலாறு என்பது, வரி வடிவங்களின் மூலம் மொழியைக் குறிக்கும் முறை பல்வேறு நாகரிகங்களிலும் தோற்றம்பெற்று வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். உண்மையான எழுத்துமுறை மெசொப்பொத்தேமியா, சீனா, எகிப்து, நடு அமெரிக்கா ஆகிய நாகரிகப் பகுதிகளில் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. எனினும், எகிப்து, எழுத்துமுறையின் கருத்துருவையாவது சுமேரியர்களிடம் இருந்து பெற்றிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனாவினதும், மெசொப்பொத்தேமியாவினதும் எழுத்து முறைகள் இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளின் வளர்ச்சியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டிருந்தன. மிகவும் பிற்காலத்தில் ஏறத்தாழ கிமு 900 ஆவது ஆண்டளவில் தோன்றிய நடு அமெரிக்க எழுத்து முறையைத் தவிர்த்து, ஏனைய எழுத்து முறைகள் புதிய கற்காலத்தின் எழுத்துக்கு முற்பட்ட குறியீடுகளில் இருந்து, கிமு 4ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் நிலவிய தொடக்க வெண்கலக் காலத்தில் வளர்ச்சியடைந்தவையாகும்.

எழுத்து முறை

எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது கருத்தெழுத்துக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருபனெழுத்து முறை (logographic), அசையெழுத்து முறை (syllabic) மற்றும் ஒலியனெழுத்து முறைமை (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை எழுத்துக்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

கில்கமெஷ் காப்பியம்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சுமேரிய கடவுள்கள்

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.

சுமேரிய மொழி

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.

சுமேரியர்களின் மதம்

சுமேரியன் மதம் என்பது பண்டைய சுமர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக இருந்தது. சுமேரியர்கள் தெய்வீகத்தன்மை என்பது அனைத்து பொருட்களிலும் இருப்பதாகவும், அண்ட சக்தியின் மூலம் அதனை பணிவை வெளிப்படுத்துவதன் பெறலாம் என நம்பியிருந்தனர் அவைகளாவன மரணம் மற்றும் தெய்வீக கோபம்.

டைகிரிசு ஆறு

டைகிரிசு ஆறு (Tigris) பண்டைய நாகரிகப் பகுதியான மெசொப்பொத்தேமியாவை வரையறுக்கும் சிறப்பு வாய்ந்த இரண்டு ஆறுகளில் கிழக்குப் புறமாக உள்ள ஆறு. மற்றது இயூபிரட்டீசு ஆறு ஆகும். தென்கிழக்குத் துருக்கியின் மலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு தெற்கு நோக்கி ஓடி ஈராக்கினூடாகச் செல்கிறது. இவ்வாற்றின் அரபுப் பெயர் திஜ்லா. இராக்கில் இதனைத் திஜ்லா என்றே அழைக்கின்றனர்.

திராய்

திராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

புது பாபிலோனியப் பேரரசு

புது பாபிலோனியப் பேரரசு (Neo-Babylonian Empire) (இரண்டாம் பாபிலோனியப் பேரரசு) என்றும் அழைப்பர்), மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய 87 ஆண்டுகள், தற்கால ஈராக், சிரியா, துருக்கி போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த பாபிலோனின் 11வது வம்சத்தினரான சால்டியர்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார்.

புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார்.

முதலாம் பாபிலோனியப் பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார்.

புறாத்து ஆறு

புராத்து ஆறு (அரபு மொழி: الفرات: al-Furāt, எபிரேயம்: פרת‎: Prat, துருக்கியம்: Fırat, குர்தியம்: Firat) அல்லது இயூபிரட்டீசு ஆறு (/juːˈfreɪtiːz/ ( கேட்க), Euphrates) , மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு ஆறு ஆகும். இப்பகுதியில் ஓடும் டைகிரிசு என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய மெசொப்பொத்தேமியாவை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, சாட்-அல்-அராப் (Shatt al-Arab) என்னும் ஆற்றின் ஊடாகப் பாரசீகக் குடாவில் கலக்கின்றது.

லகாசு

லகாசு (Lagash) சுமேரியம் or [ŠIR.BUR].LAKI, "storehouse;" அக்காதியம்அ: Nakamtu;பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக் நாட்டின் திகார் மாகாணாத்தில் உள்ள டெல் அல் ஹிபா நகரத்தில், பண்டைய லகாஸ் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது. பண்டைய லகாஸ் நகரம் புறாத்து ஆறு - டைகிரிஸ் ஆறு கலக்குமிடத்திலிருந்து வடமேற்கே, பண்டைய உரூக் நகரத்திற்கு கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ளது. பண்டைய லகாஸ் நகரத்தின் தற்கால பெயர் அல் ஹிபா ஆகும். கிமு 2500 ஆண்டுகள் பழையான இந்நகரம் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். மேலும் இந்நகரம் லகாஸ் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.லகாஸ் நகர இராச்சியத்தை முதலாம் லகாஸ் வம்ச மன்னர்களும், இரண்டாம் லகாஸ் வம்ச மன்னர்கள் கிமு 2500 முதல் கிமு 2110 வரை ஆண்டனர்.

லூவிய மொழி

லூவிய மொழி (Luwian language) அல்லது லூவியம் என்பது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையைச் சேர்ந்த ஒரு தொல்பழங்கால மொழி அல்லது மொழித் தொகுதி. எழுதப்பயன்பட்ட எழுத்துமுறையின் அடிப்படையில் இரண்டுவகையான லூவியத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஒன்று ஆப்பெழுத்து முறையிலும், மற்றது படவெழுத்து முறையிலும் எழுதப்பட்டவை. எனினும், இவை வெவ்வேறு எழுத்து முறைகளில் எழுதப்பட்ட ஒரே மொழியா அல்லது இரண்டு மொழிகளா என்பதில் ஆய்வாளரிடையே ஒருமித்த கருத்து இல்லை.

அனத்தோலியாவில் இருந்த வேறு பல மொழிகள் லூவிய மொழியைப் போன்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது, இம்மொழிகள் ஆப்பெழுத்து லூவியம், படவெழுத்து லூவியம் என்பவற்றுடன், தமக்குரிய லூவியத்தின் கிளைகளைச் சேர்ந்தவை என்பதைக் காட்டுகின்றன. சில மொழியியலாளர்கள் இக்கிளையை "லூவியக் குழு" எனப் பெயரிட்டுள்ளனர்.

புவியியல்
வரலாறு
மொழிகள்
மக்கள் / பண்பாடு / வழிபாடு
தொல்லியல்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.